சென்னை: ஜெயலலிதாவின் மறைவால் தமிழக அரசியலில் ஒரு மிகப்பெரிய வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. ஒருபுறம் இரும்புப் பெண்மணி ஜெயலலிதாவின் மறைவு. மறு புறம் திமுக தலைவர் மு.கருணாநிதி உடல் நலக் குறைவு காரணமாக செயல்பட முடியாத நிலையில் இருப்பது. இந்த அரசியல் வேற்ற்டத்தை நிரப்ப இப்போது தகுதியான தலைவர்கள் சிலர் இருந்தாலும் சினிமா என்ற ‘ஜிகினா’ பின்புலம் இல்லை. இந்த சூழலில் மீண்டும் ரஜினியை தமிழகத்தின் அரசியல் தலைமை ஏற்க ரசிகர்கள் தமிழ்நாடு முழுவதும் போஸ்டர் பேனர் என்று பட்டையை கிளப்பி வருகின்றனர். திருச்சி ரஜினி மன்ற பொறுப்பாளர் ராயல் ராஜ் ஒட்டியுள்ள போஸ்டரில் ‘தலைமை ஏற்க மக்கள் அழைக்கிறார்கள் – தொண்டர்கள் இருக்கிறோம்’ என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது. மக்களின் எண்ண ஓட்டத்தை அறிந்தே 1996-ம் ஆண்டு ஜெயா ஆட்சிக்கு எதிராக ரஜினி குரல் கொடுத்தார். கருணாநிதியும் ஜெயித்தார். அதேபோல் தற்போதும் அவர் குரல் கொடுப்பதோடு மட்டுமின்றி நேரடியாக அரசியலுக்கு வரவேண்டும். விரைவில் அனைத்து ரசிகர் மன்ற நிர்வாகிகளும் தலைவரைச் சந்திக்கப் போகிறோம். அப்போது அவரை அரசியலுக்கு வருமாறு அழைப்போம்,” என்றார் ராயல் ராஜ். ரஜினி அரசியலுக்கு வருவார் என்று காத்திருந்து ஏமாந்த பல ரசிகர்கள், பொதுமக்கள், அரசியல் பார்வையாளர்கள் கடைசியில் அவரை கடுமையாக விமர்சிக்க ஆரம்பித்துவிட்டனர்.

நமது கப்ஸா நிருபரும் சிறுவயது முதலே சுமார் 25 வருடங்களாக ரஜினி அரசியலுக்கு வருவார் வருவார் என்று நொந்து போய் கடைசியில் வேறு வேலை ஏதும் இல்லாமல் ‘உங்கள் நியூஸ்’ அலுவலகத்தில் தஞ்சமடைந்துள்ளார். ‘ஜெயலலிதாவின் இறப்பால் உண்டான வெற்றிடம் இருக்கட்டும் இன்னும் கருணாநிதி இருக்கிறாரே அவரை பற்றி பேசலாம் வாருங்கள்’ என்று ரஜினி போனில் அழைத்ததும், பரபரப்பு கிளப்ப சரியான தீனி கிடைத்தது என்று அடித்து பிடித்து கார்டன் விரைந்த கப்ஸா நிருபரிடம் ரஜினி கூறியதாவது: அரசியல் வெற்றிடத்தை நான் நிரப்பத்தயாராக இருக்கிறேன். மோடி எனது நண்பர், கருணாநிதி எனது வழிகாட்டி, எல்லோரும் கருணாநிதியின் பராசக்தி படம் பற்றி இன்றும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அதுமாதிரி பாட்ஷா படம் பற்றி என்னுடைய ரசிகர்கள் இன்றும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். நடுவில் தமிழிசை என்னை பாஜகவில் இணைய அழைப்பு விடுத்தார், ‘என் வழி தனி வழி ரசிகன் பாடு தலைவலி’ என்று கூறி ஒதுங்கிக் கொண்டேன். இப்போது பாஜக ஆதரவுடம் கருணாநிதியுடன் இணைந்து அரசியலில் ஈடுபடலாமா என்று யோசித்துக் கொண்டு இருக்கிறேன்.

கடந்த 25 ஆண்டு காலமாக ஒவ்வொரு பட ரிலீசின்போதும் இதே யோசனை தான். இப்போது அரசியலுக்கு வரச்சொல்லி போஸ்டர் அடிக்கும் ரசிகர்கள் எந்திரன் 2 வந்தால் பாலபிசேகம் பண்ண பணத்துக்கு எங்கே போவார்கள் என் நினைத்தால் கவலையாக இருக்கிறது. நண்பர் கமல் சொன்னது போல் ‘நான் அரசியலுக்கு வரமாட்டேன்னு சொல்லலை, வந்தா நல்லா இருக்குமேன்னு தான் சொல்ல நினைக்கிறேன்’ என்று தெளிவாக குழப்ப நமது கப்ஸா நிருபர் எஸ்கேப் ஆனார்.

There are no comments yet