மதுரை: ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து தேமுதிக சார்பில் வரும் 9-ம் தேதி மதுரை அலங்காநல்லூரில் நான் நிஜ காளையை அடக்கப் போகிறேன் என்று அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ”இரண்டு ஆண்டுகளாக நடைபெறாமல் இருக்கும் ஜல்லிக்கட்டு, இந்த ஆண்டாவது நடைபெறுமா என்று, காளையை அடக்குகின்ற தமிழக இளைஞர்கள் ஏங்கிக்கொண்டு இருக்கிறார்கள். ஆனால் மத்திய அமைச்சர், மாநில அமைச்சர்கள் இந்த ஆண்டு நடைபெறும் என்று அறிக்கைகள் மூலமாக செய்திகளை வெளியிட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.

இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடைபெறுமா என்று தெரியவில்லை என மக்கள் பேசிக்கொள்கிறார்கள். எனவே தேமுதிக சார்பில் வரும் 9-ம் தேதி மதுரை மாவட்டம் அலங்காநல்லூர், வாடிவாசல் அருகில் காலை 10 மணியளவில், மத்திய, மாநில அரசுகள் ஜல்லிக்கட்டு நடத்தவேண்டுமென்ற கோரிக்கையை வலியுறுத்தி எனது தலைமையில் மாபெரும் காளை அடக்கும் போராட்டம் நடைபெறும். இதற்கு மாவட்டம், ஒன்றியம், நகரம், பகுதி, பேரூர், வார்டு, ஊராட்சி, கிளை கழகம், நிர்வாகிகள், மகளிர் அணியினர், தொண்டர்கள், பொதுமக்கள், அனைவரும் கலந்துகொண்டு இந்த போராட்டத்தை வெற்றியடையச் செய்ய வேண்டும்” என்று விஜயகாந்த் கூறியுள்ளார்.

இது குறித்து கட்சி நிர்வாகி ஒருவர் கூறும்போது, பல திரைப்படங்களில் காளைகளை அடக்கி வெற்றிக்க்கொடி நாட்டிய அண்ணனுக்கு ரெம்ப நாளா நிஜமாகவே காளையை அடக்கவேண்டும் என்ற ஆசை இப்போதுதான் நிறைவேற போகிறது. மதுரை சேர்ந்த அண்ணனுக்கு இதனால் கிராமத்து ஓட்டுகள் நிறைய கிடைக்கும், வரும் உள்ளாட்சி தேர்தல் வெற்றியை மனதில் வைத்துதான் வேட்டியை மடித்து காட்டியுள்ளார். அண்ணி பிரேமலதா இதற்காக அண்ணனுக்கு வெற்றித் திலகமிட்டு அனுப்பி வைப்பார்கள் என நம்புகிறேன் என்று கூறினார்.

There are no comments yet