சென்னை: ஜெயலலிதா மீது மிகுந்த மரியாதையும் மதிப்பும் வைத்திருந்த நாஞ்சில் சம்பத், ஜெ. இறுதி அஞ்சலி நிகழ்ச்சியில் கறுப்பு சட்டை அணிந்து வந்து ஜெயலலிதா உடல் முன்பு விழுந்து வணங்கி கதறி அழுது தனது கண்ணீர் அஞ்சலியை செலுத்தினார். ஜெயலலிதா நினைவிடத்தின் ஈரம் காய்வதற்குள்ளேயே மதுசூதனன், ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன், சைதை துரைசாமி போன்றவர்கள் போயஸ் கார்டன் சென்று, கட்சிக்கு தலைமை ஏற்க வருமாறு சசிகலாவுக்கு அழைப்பு விடுத்தனர். அந்தக் கூட்டத்தில் நாஞ்சில் சம்பத் கலந்துகொள்ளவில்லை. அ.தி.மு.க பொதுச்செயலாளராக பொறுப்பேற்றுள்ள சின்னம்மாவுக்கு மட்டுமே தலைமை தாங்கத் தகுதி உள்ளது என்று முடிவெடுத்துவிட்டார்கள். அவரை ஏற்றுக் கொள்வதற்கான எந்த தகுதியும் எனக்கு இல்லை என்று கூறி ஜெயலலிதா கொடுத்த இன்னோவா காரையும் திருப்பிக் கொடுத்துவிட்டார்.

நமது கப்ஸா நிருபர் செய்த புலனாய்வில், இன்னோவா காரை திருப்பிக் கொடுத்ததன் பிண்னணியில் மத்திய அரசின் புதிய நடவடிக்கை உள்ளது தெரியவந்தது. செல்லாத நோட்டு அறிவிப்பை மோடி தன் நண்பர்களுக்கும் கட்சி பிரமுகர்களுக்கும் முன்பே கூறியது போல், பார்க்கிங் வசதி இல்லாத வாகனப் பதிவுகள் இனி ரத்தாகும் என்ற அறிவிப்பை விரைவில் மத்திய அரசு வெளியிட உள்ளது. இதை மோடி முன்னமே நாஞ்சில் சம்பத்திடம் கூறிவிட்டார். “வீடு வாசல் இல்லாமல் 19 ஆண்டு காலம் வைகோவின் நிழலாக வலம் வந்து கொண்டு இருந்தேன். அப்போது தெருவில் காரை பார்க் செய்து விட்டு தான் உரையாற்றினேன். பின்னர் அதிமுக ஆட்சிக் காலத்திலும் என்னால் சொந்த வீடு வாங்க முடியவில்லை அம்மா கொடுத்த இன்னோவா காரிலேயே, இன்பம் துன்பம், வெற்றி தோல்வி என அனைத்தையும் அனுபவித்தேன். கிட்டத்தட்ட ஒரு கால் டாக்சி டிரைவர் போல போன் கால் வந்தால் போய் பேசுவேன், பின்னர் காரிலேயை படுத்து உறங்கி விடுவேன். நிரந்தர அதிமுக பொதுச்செயலாளரான அம்மா நிரந்தர உறக்கத்திற்கு போய் விட்டதால் துக்கம் தாளாமல் காரை திருப்பிக் கொடுத்துவிட்டேன், எதிர்வரும் திமுக பொதுக் குழுவில் பார்க்கிங் பிரச்சினை நம்பர் ரெஜிஸ்டிரேஷன் இல்லாத பழையமாடல் ‘பெரிய சைக்கிள்’ தருவதாக கூறியிருக்கிறார்கள். அடுத்த டேரா அங்குதான்” என்றார்.

பகிர்

There are no comments yet