சென்னை: அதிமுக செய்தித் தொடர்பாளர் பொன்னையன் செல்போன் திருடப்பட்டுள்ளது. ஆளும் அதிமுகவின் முக்கிய பிரமுகர் செல்போனே திருடப்பட்டதால் அதிர்ச்சி அலை அதிமுகவில் பரவியுள்ளது. டிச.3 காலை தனது அண்ணாநகர் வீட்டருகே உள்ள ஒரு ஓட்டலில் காபி குடிக்கச் சென்றுள்ளார் பொன்ஸ். காபி குடித்து முடித்தவுடன் டேபிளின் மேல் வைத்திருந்த செல்போனைக் காணவில்லை. போலீசில் புகார் அளிக்கப்பட்டு ஓட்டலில் பதிவான சிசிடிவி கேமரா காட்சிகளை வைத்து செல்போனை திருடியவரை தேடி வருகின்றனர். அதிமுக நிர்வாகிகளுக்கே பாதுகாப்பு இல்லை மக்கள் பாதுகாப்பு கேள்விக்குறி தான் என மக்கள் பேசத்தொடங்கியுள்ளனர்.

இது குறித்து சின்னம்மாவின் ‘சின்னையன்’ மன்னிக்கவும் பொன்னையன் நமது கப்ஸா நிருபரிடம் கூறியதாவது: எனது சொல்போனை திருடியது தீபாவின் ஆதரவளர்கள்தான். அவர்கள் தான் சின்னம்மாவின் எதிரிகள். அப்பல்லோவில் கடந்த வருடம் டிச.5 அன்று ‘அம்மா’ சும்மா ஆகியதால் சின்னம்மாவை முன்மொழிந்து பொதுச்செயலாளர் ஆக்கி விட்டோம். அம்மாவிடம் குனிந்ததை விட சின்னம்மாவிடம் அதிகம் குனிய வேண்டியுள்ளது. தீபா சின்னம்மாவை எதிர்த்து தமிழகம் முழுவதும் நடைபயணம் மேற்கொள்ளப்போவது ஊர்ஜிதமாகியுள்ளதை அறிந்த எங்கள் சின்னம்மா மாவட்டம் தோறும் அதிமுக நிர்வாகிகளை சந்திக்க உள்ளதால் எனது செல்போனில் அனைத்து போன் நம்பர் முகவரிகளை செய்தி தொடர்பாளரான நான் சேகரித்து வைத்திருந்தேன்.

மேலும் பெரியம்மாவுக்கு அப்பல்லவோவில் தந்த சிகிச்சை ரசியங்கள், மற்றும் சின்னம்மா பேச்சுப் பயிற்சி குறித்த வீடியோவும் இருந்தது, இதை அறிந்து கொண்ட தீபாவின் ஆதரவாளர்கள் தான் என்னைப் பின் தொடர்ந்து என் விலை உயர்ந்த செல்போனைத் திருடிவிட்டனர். சின்னம்மா அனுமதியில்லாமல் காபி குடித்த எனக்கு கிடைத்த தண்டனை இது என்றார். நமது கப்ஸா நிருபர் காவல் துறையிடம் விசாரித்ததில், காபி குடித்துவிட்டு நிமிர்ந்து பார்த்தால் செல்போனை காணோம் என்பதை ஒத்துக்கொள்ள முடியவில்லை, ஓட்டலில் பொன்ஸ் காபி தான் குடித்தாரா அல்லது அதிமுக ஆட்சியில் கரைபுரண்டு ஓடும் டாஸ்மாக் சரக்கு ‘டபரா செட்டில்’ சர்வ் செய்யப்பட்டதா என்ற கோணத்திலும் விசாரணையை முடுக்கி விட்டுள்ளதாக தெரிவித்தனர்.

பகிர்

There are no comments yet