சென்னை: திமுகவின் செயல் தலைவராக மு.க.ஸ்டாலினை தேர்வு செய்து பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்தத் தீர்மானத்தை திமுகவின் பொதுச் செயலாளர் க.அன்பழகன் முன்மொழிய தீர்மானம் ஏக மனதாக நிறைவேற்றப்பட்டது. அப்போது அன்பழகன், “திமுக செயல் தலைவராக ஸ்டாலின் ஏக மனதாக தேர்வு செய்யப்படுகிறார். அவர் தற்போது வகித்துவரும் பொருளாளர் பதவியையும் கூடுதலாக கவனிப்பார்” எனத் தெரிவித்தார்.

பரபரப்பான அரசியல் சூழலில் கூடிய திமுக பொதுக்குழுவில் கட்சியின் தலைவர் கருணாநிதி பங்கேற்கவில்லை. திமுக வரலாற்றில் கருணாநிதி பொதுக்குழுவில் கலந்து கொள்ளாதது இதுவே முதன்முறை. கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக கருணாநிதி கட்சி நிகழ்ச்சிகள் எதிலும் பங்கேற்காத நிலையில் அவரது தலைமையில் பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என தொண்டர்கள் எதிர்பார்த்த நிலையில் அவர் இன்றைய கூட்டத்தில் பங்கேற்கவில்லை. இன்றைய பொதுக்குழு கூட்டத்தில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினுக்கு செயல் தலைவர் பதவி வழங்கப்பட்டிருக்கிறது. இதற்கான தீர்மானம் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்டது. அதேவேளையில் அவர் கட்சிப் பொருளாளர் பதவியையும் வகிப்பார் எனத் தெரிகிறது. திமுகவில் செயல்தலைவர் பதவி உருவாக்கப்படுவது இது முதன்முறையாகும்.

இந்நிலையில் கனிமொழி ஸ்டாலினுக்கு வாழ்த்து சொல்லியிருக்கும் நிலையில், நமது கப்ஸா நிருபருக்கு பேட்டியளித்த கருணாநிதியின் மூத்த மகன் அழகிரி கூறியதாவது: நான் தான் மூத்த பிள்ளை, எனவே தலைவர் பதவி எனக்குத்தான். இந்த வழக்கம் திருவிளையாடல் படம் பார்த்தவர்களுக்கு புரியும். அதுமட்டுமல்லாமல் மூத்த பிள்ளை செல்லப்பிள்ளை, என்பதையும் வசதியாக மறந்து விட்டார்கள்.

பெரியவர் அன்பழகனுக்கு ஏதோ வசியம் வைத்து ஸ்டாலினுக்கு செயல் தலைவர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது. என் அப்பா கலைஞர் கலந்து கொள்ளாத பொதுக்குழு செல்லாது. ஸ்டாலினுக்கு செயல் தலைவர் பதவி கொடுத்தது போல், எனக்கு ஏதாவது புயல் தலைவர் பதவி கொடுக்காவிட்டால் நான் கோர்ட்டுக்கு போவேன் என்று படபடப்பாக பேசினார்.

There are no comments yet