சென்னை: கடந்த சில மாதங்களுக்கு முன்பு மோடி ‘நோட்டுத் தடை’ அறிவிப்பு வெளியிட்ட சில மணி நேரங்களில் முந்திரிக் கொட்டையென முந்திக் கொண்டு ‘புதிய இந்தியா பிறந்துள்ளது’ என பாராட்டு தெரிவித்தார் முதியவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். அதற்கு காரணம் நோட்டுத் தடை அறிவிப்பை முன்பே ரஜினி உள்ளிட்ட நண்பர்களுக்கு தெரிவித்து விட்டார் என் சர்ச்சை எழுந்தது. 50 நாட்களுக்குப் பிறகு மோடி மீண்டும் டிச.31 அன்று டிவியில் உரை நிகழ்த்தியபோது மவுனியாக அமைதி காத்தவர், ஸ்டாலின் திமுக வரலாற்றில் முதல் முறையாக செயல் தலைவர் பதவியில் அமர்த்தப்பட்டதும் ‘முதிய தமிழ்நாடு பிறந்துள்ளது’ என்று பராட்டு தெரிவித்துள்ளார். மு.க.ஸ்டாலினை தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்ட ரஜினிகாந்த் தனது வாழ்த்தை தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இது குறித்து முதியவர் சூப்பர் ஸ்டார் ரஜினி நமது கப்ஸா நிருபரிடம் கூறியதாவது: ‘புதிய தமிழகம் பிறந்துள்ளது’ என்றுதான் அறிக்கை தயார் செய்து வைத்திருந்தேன். ஜெயா மறைவுக்கு பிறகு என்னை அரசியலுக்கு வரச்சொல்லி போஸ்டர் பேனர் அடித்து ரசிகர்கள் மீண்டும் கூப்பிடுகின்றனர். இந்த நேரத்தில் எவராவது ‘புதிய தமிழகம் கிருஷணசாமியுடன் நான் கூட்டணி வைத்து விட்டேன் என்று புரளி கிளப்பிவிடக் கூடாது என்று தான் வசனத்தை மாற்றி சொன்னேன். நான் முதிய வயதிலும் 20 வயது பெண்களுடன் டூயட் பாடுவது போல், ஸ்டாலின் அவர்கள் பேரன் பேத்தி எடுத்த தள்ளாத வயதுலும் சுறுசுறுப்பாக கழகப் பணி ஆற்றுவதால் ‘முதிய தமிழ்நாடு பிறந்துளது’ என்று வாழ்த்தினேன்.” என்றபடி பேரன் லிங்காவை கொஞ்சியபடி நட்டு கழன்ற காலில் எந்திரன் நடை நடந்து சென்று ஈசி சேரில் அமர்ந்தபடி அப்படத்தின் பாடல்களை தாலாட்டாக பாடத் துவங்கினார்.
There are no comments yet
Or use one of these social networks