சென்னை: ஜல்லிக்கட்டு தொடர்பாக சின்னம்மா முதல் அறிக்கையை வெளியிட்டுள்ளதோடு, எதிர்க்கட்சித் தலைவரும், திமுக செயல் தலைவருமான மு.க.ஸ்டாலினை விமர்சித்தார். “தமிழர்களின் பாரம்பரிய நிகழ்ச்சியான ஜல்லிக்கட்டு என்னும் கிராமிய விழா தடையின்றி நடத்தப்பட வேண்டும் என்பதற்காக ஜெயலலிதா மேற்கொண்ட கடும் முயற்சிகளை மறைத்துவிட்டு அக்கா புகழை கொச்சைப்படுத்தும் வகையில், ஜல்லிக்கட்டு விவகாரத்தில் உண்மைக்குப் புறம்பான கருத்துகளை எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் பேசி இருக்கிறார். தமிழத்தின் உரிமைகளைக் காப்பதற்காகவே தன் வாழ்க்கையை அர்ப்பணித்த ஜெயலலிதாவின் புகழுக்கு களங்கம் விளைவிக்கும் முயற்சியிலும், உண்மைகளை மூடி மறைக்கும் முயற்சியிலும் ஈடுபட வேண்டாம் என்று மு.க.ஸ்டாலினை கேட்டுக் கொள்கிறேன்” என்று கடுமையாக கூறியுள்ளார். மேலும் “தமிழ் நாட்டு பண்டிகைகளை ‘விடுமுறை தினம்’ என்று கூறி விளம்பர வருமானம் ஈட்டும் திமுககாரர்கள் ஜல்லிக்கட்டு குறித்து பேச அருகதை இல்லை” என்று சொல்லாமல் சொல்லியிருக்கிறார்.

இது குறித்து பரபரப்புக்கு பெயர்போன திமுக வின் இரட்டை தலைவர்கள் கருணாநிதி, ஸ்டாலின் இருவரிடமும் நமது கப்சா நிருபர் எடுத்தா ,பேட்டியின் போது கருணாநிதி கூறியதாவது: “கையில் கொப்புளங்கள் வந்து, உடல் நலம் குன்றி, நான் செயலற்று போனதால், உடன்பிறப்புக்கு கடிதம் எழுதும் பணியை ‘செயல் தலைவர்’ ஸ்டாலினிடம் வழங்கி விட்டேன், எனவே அவரைத் தொடர்பு கொள்ளுங்கள்” என்று கையை காண்பித்து கை விரித்து விட்டார். ஏமாற்றத்துடன் நமது கப்சா நிருபர் ஸ்டாலினை சந்தித்தபோது ஸ்டாலின் தொடர்ந்தார்: “பேராசையில் பேரியக்கமான திமுக வை மிஞ்ச முடியாது, அதிகாரம் கையில் இல்லாவிட்டாலும், சின்னம்மாவின் சி.எம் கனவான சிற்றாசையை முறியடிப்போம்.. ஜல்லிக்கட்டு குறித்த இந்த மல்லுக்கட்டு மிரட்டலுக்கெல்லாம் அராத்துக்களான நாங்கள் பயப்பட மாட்டோம். இந்த இயக்கத்தின் ஊழல் பயணத்தை செயலற்ற தலைவர் கலைஞரின் துணையுடன் செயல் தலைவர் ஆகிய என்னுடன் சேர்ந்து மேலும் உத்வேகத்துடன் தொடர்வதற்கு உரமூட்டும் வகையில் இந்த முதல் கடிதத்தை தொண்டனுக்கு எழுதுகிறேன். அரசியல்வாதி ஆக வேண்டும் என்றால் எதிர்க்கட்சி தலைவர்களை திட்டுங்கள் என்று அவரது கணவர் நடராசன் கூறியிருப்பார் போலும், கொந்தளிக்கிறார் சின்னம்மா. பெரியாரின் துணிவு, அண்ணாவின் கனிவு, தலைவரின் ஊழல் நெளிவு சுளிவு, இவை நமக்கு துணை செய்யும் ஆயுதங்கள். ஆயிரங்காலத்துப் பயிராம் திராவிட இயக்கத்தை தொடர்ந்து பாதுகாத்திடவும், வளர்த்தெடுத்திடவும், சின்னம்மா போன்ற எதிரிகளை வறுத்தெடுத்திடவும், தொண்டர்களே அணிதிரண்டு வாரீர் வாரீர்! என்று முழங்கினார்.

பகிர்

There are no comments yet