சென்னை: கிரிக்கெட்டில் ஐ.பி.எல். டி 20 போல ‘ஜே.பி.எல்.’ (ஜல்லிக்கட்டு பிரீமியர் லீக்) நடத்த வரும் 9ஆம் தேதி அலங்காநல்லூர் வாடிவாசல் அருகே தேமுதிக சார்பில் ஏற்பாடுகள் ஜரூராக நடக்கின்றன என்று அக்கட்சியின் தலைவர் கேப்டன் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். இதில் கட்சி தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொள்ள வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழகத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்த உச்சநீதிமன்றம் தடைவிதித்துள்ளது. இதுதொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது. இந்நிலையில் இந்த ஆண்டாவது ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

நமது கப்ஸா நிருபரிடம் கேப்டன் மேலும் கூறியதாவது: “இரண்டு ஆண்டுகளாக நடைபெறாமல் இருக்கும் ஜல்லிக்கட்டு, இந்த ஆண்டாவது நடைபெறுமா என்று, காளையை அடக்குகின்ற தமிழக இளைஞர்கள் ஏங்கிக்கொண்டு இருக்கிறார்கள். அவர்களை உற்சாகப் படுத்தும் விதமாகவும், உலக அளவில் ஜல்லிக்கட்டு பேமஸ் ஆகவும் எனக்கு ஒரு யோசனை தோன்றியது.

எனது மகன் விஜய் பிரபாகரன், இந்தியன் பேட்மிண்டன் லீக் அமைப்பின் தலைவர். ஒலிம்பிக்கில் பி.வி. சிந்து வெள்ளிப் பதக்கம் வெல்ல காரணமாக இருந்தவர். சிந்துவின் மெயின் ஸ்பான்சர் என் மகன் தான். தந்தை மகற்காற்றும் உதவியாகவும், நான் மதுரை மண்ணில் பிறந்த கடமைக்காக எதாவது செய்ய வேண்டும் என்று நீண்ட நாட்களாக அல்லும் பகலும் சரக்கடித்து கவிழ்ந்து படுத்து யோசித்துக் கொண்டிருந்தேன். அப்போது ஒருநாள் உதித்தது தான் இந்த ஜே.பி.எல். ஐடியா.

கிரிக்கெட் வீரர்களை போல், ஜல்லிக்கட்டு காளைகளை நாலு டீமாக பிரித்து, ஏலம் விட்டு, அபிஷேக் பச்சன் ஷில்பா ஷெட்டி, ஷாருக் கான், அம்பானி, மல்லையா போன்ற்வர்களை ஏலம் எடுக்கச்சொல்லி கோரிக்கை வைப்பேன். இந்த பிரீமியர் லீக் பந்தயத்தில் காளைமாட்டுக்கு பால் கறக்கும் போட்டி, பசுமாட்டை வண்டியில் பூட்டி ரேக்ளா ரேஸ், கன்றுக்குட்டிகளுக்கு பேஷன் ஷோ போன்ற சுவாரசியமான பகுதிகள் உண்டு. போட்டியை அனிமல் பிளானட் நேரடி ஒளிபரப்பு செய்யும். இதன் மூலம் அரசுக்கு விளம்பர வருமானம் கொட்டும், அன்றைய தினம் மனிதர்களுடன் மாடுகளுக்கும் சேர்த்து டாஸ்மாக் விற்பனை கூடும், இப்படி ஒரு வாய்ப்பு இருப்பது தெரிந்தால் அரசே முன்வந்து ஜெ.பி.எல் லை ஆதரிப்பார்கள்.” என்றார். அங்கு நின்றிருந்த நிர்வாகிகள் கரவொலி எழுப்பி கேப்டன் நெஞ்சில் ‘பால்’ வார்த்தார்கள்.

தேமுதிக மூத்த நிர்வாகி ஒருவர் கூறுகையில் “மூர்த்தி சிறிதானாலும், கீர்த்தி பெரிது என்பார்கள், எங்கள் பீனிக்ஸ் பறவையின் சிறிய மூளையில் எம்மாம் பெரிய ஐடியா உதித்துள்ளது பாருங்கள்” என்று புளகாங்கிதப் பட்டார்.

பகிர்

There are no comments yet