சென்னை: ரேஷன் கார்டுகளில் உள்தாள் ஒட்டுவதாக அரசு அறிவித்து அதற்கான பணிகளை துவங்கியுள்ளது. ஒட்டப்படும் உள்தாள் 2 ஆண்டுகளுக்கு பயன்படுத்தும் வகையில் உள்ளது. தமிழகத்தில் ரேஷன் கடைகளுக்கு, ‘பாயின்ட் ஆப் சேல்’ என்னும், ‘டிவைஸ்’ கருவி வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு கார்டுக்கும், ‘பில்’ போடும்போது, பதிவு செய்யப்பட்ட ரேஷன் கார்டுதாரரின் செல்போன் எண்ணுக்கு, ‘எஸ்.எம்.எஸ்’ செல்லும் வகையில் திட்டம் நவீனப்படுத்தப்பட்டுள்ளது. ரேஷன் கார்டுகளில் உள்ள பயனாளிகளின் ஆதார் விபரங்கள் பொது வினியோக திட்டத்தில் இணைக்கப்படுகிறது. அதேபோல், செல்போன் எண்ணும் சேர்க்கப்படுகிறது. இதனால், இந்தாண்டு, ‘ஸ்மார்ட் கார்டு’ வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், வழக்கம்போல் இந்தாண்டும் உள்தாள் இணைப்புக்கு அரசு உத்தரவிட்டது.
‘ஸ்மார்ட் கார்டு’ திட்டத்தை தவிர்க்கும் பொருட்டு உள்நோக்கத்துடன் உள்தாள் ஒட்டும் பணி நடந்து வருகிறது. தமிழகத்தில், 2005-09 வரையிலான 5 ஆண்டுக்கு வழங்கப்பட்ட ரேஷன் கார்டில் 8 ஆண்டுகளாக உள்தாள் ஒட்டப்பட்டு வருகிறது. மண்ணெண்ணெய், மழைநீர் மற்றும் தண்ணீரில் நனைந்ததாலும், பல ஆண்டுகளாகி விட்டதாலும், ரேஷன் கார்டும் உள்தாள்களும் நசிந்து உருக்குலைந்துள்ளன. இப்படிப்பட்ட ரேஷன் கார்டை, ஸ்மார்ட் கார்டாக புதுப்பிக்காமல், காலம் கடத்துவது பொது வினியோக திட்ட பொருட்கள் கடத்தலுக்கும், முறைகேட்டிற்கும் வழிவகுக்கும்.
இதுகுறித்து வருவாய் துறை உயரதிகாரி ஒருவர் கப்ஸா நிருபரிடம் கூறுகையில், ‘ஒரு உள்தாளை இரண்டாக மடித்து ஒட்டும்போது 2 ஆண்டுகளுக்கு பயன்படுத்த முடியும். தற்போது, 2017ம் ஆண்டு மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் ஒரு ஆண்டுக்கு மோசடியாக பயன்படுத்தலாம். ஸ்மார்ட் கார்டு முறை வந்துவிட்டால் அரிசியை திருட்டுத்தனமாக ஓட்டல்களுக்கு விற்க முடியாது. இரண்டொரு மாதம் பொருட்கள் வாங்காதவர்கள் அட்டையிலும் கிறுக்கித்தள்ளிவிட்டு நுகர்பொருட்களை பதுக்க முடியாது என கடை மேலாளர்கள் சொன்னதால் மீண்டும் உள்தாள் ஒட்டப்படுகிறது. தற்போது பொங்கல் நெருங்கி விட்டதால் உள்தாள் இணைப்பில் ஒரு புதுமையைப் புகுத்த உள்ளோம், அதன்படி குமுதம், விகடன் போன்ற முன்னணி பத்திரிகைகளுக்கு போட்டியாக “ரேஷன் கார்டு பொங்கல் மலர்” வெளியிட உள்ளோம், ஜோக்ஸ் கிசு கிசு சினிமா செய்திகள் மற்றும் பிரபல எழுத்தாளர்களின் தொடர்கதை, சிறுகதை வெளியிட நுகர் பொருள் வாணிப கழகம் முடிவு செய்துள்ளது, இதன்மூலம் மக்கள் எடையை கவனிக்காமல் பத்திரிகையில் உள்ள கவர்ச்சி நடிகையின் ‘இடை’யை பார்ப்பார்கள், வெய்யிலில் கால் கடுக்க நின்றாலும் களைப்புத்தெரியாமல் ரெண்டு மொக்கை ஜோக்குகளை ரசித்துச் சிரிப்பார்கள், அதன்மூலம் வழக்கமான் ரேஷன் கடை தில்லுமுல்லுகளும், பதுக்கல்களும் அராஜகங்களும் தங்கு தடையின்றி நடைபெறும், மோதிர விரலில் மட்டும் மோதிரம் போடும் ரேசன் கடை சிப்பந்திகள் பத்து விரலுக்கும் மோதிரம் போட்டுக் கொள்ளும் அளவிற்கு வளம் பெருவார்கள், பொதுமக்கள் மூடர்கள் ஆகி கேள்வி கேட்க மறந்து மயக்கத்தில் இருந்து கொண்டு எங்களை வாழ வைப்பார்கள்” என்றார்.
There are no comments yet
Or use one of these social networks