சென்னை: ‘அம்மாவும், கழகமும் உலகம் என்று வாழ்ந்தேன்’ என்றும் வாழ்வின் எஞ்சிய காலத்தை அ.தி.மு.க.வுக்கு அர்ப்பணித்து உழைப்பேன் என்றும் பொதுச்செயலாளராக பொறுப்பேற்றவுடன் சசிகலா பேசினார். அப்போது “ஜெயலலிதாவின் அரசியல் ஆரம்ப காலம் முதல், அவரோடு தொடர்ந்து பயணித்தேன். அப்போது யாரும் நினைத்துக் கூட பார்த்திருக்க மாட்டார்கள்; அம்மா என்கிற அந்த வார்த்தை இந்த அளவுக்கு மக்கள் இதயத்தை ஊடுருவும் என்று! ஆனால், இத்தனை ஆண்டுகள் அவரோடு இருந்த என் ஆசையெல்லாம், அவர் நன்றாக இருக்க வேண்டும் என்பது மட்டும் தான். ‘‘அக்கா, கோட்டைக்கு கிளம்பிட்டீங்களா; அக்கா, மதிய சாப்பாட்டிற்கு என்ன வேண்டும்’’ என அனுதினமும் அம்மாவைப் பற்றிய சிந்திப்புகளிலேயே என் வாழ்நாட்களை செலவழித்தவள் நான்.

எனக்கு இப்போது 62 வயது ஆகிறது. கடந்த 33 ஆண்டுகளாக, என்னுடைய 29–வது வயது முதல் ஜெயலலிதாவோடு தான் இருந்துள்ளேன். அவரை விட்டு நான் பிரிந்திருந்த நாட்கள் மிகமிகக் குறைவு. அதை நாட்கள் என்று சொல்வதை விட, அவருடைய கம்பீரக் குரலை நான் கேட்காத நேரம் குறைவு என்று தான் சொல்ல வேண்டும். அம்மாவும், கழகமுமே உலகம் என்று வாழ்ந்த என்னை, உங்களின் அன்புக் கட்டளை, எஞ்சி இருக்கும் காலத்தை, அம்மா கட்டிக்காத்த கழகத்திற்காகவும், கோடான கோடி தொண்டர்களுக்காகவும் நான் வாழ வேண்டும் என்கிற உறுதியை எனக்குள் எடுக்க வைத்திருக்கிறது” என்று கூறி பலமுறை கண்ணீர் சிந்தி அழுதார். பொதுச் செயலராக பதவியேற்ற போது, பேசுவதற்கான அறிக்கையை, வீட்டில் பல முறை பேசி பயிற்சி பெற்றதால், அழுகை, ஏற்ற இறக்கத்துடன், ஓரளவு பேசி மக்களின் ஆதரவைப் பெற்றார். சின்னம்மாவின் இந்த நடிப்பை தமிழ் நடிக, நடிகைகள் வியந்து பாராட்டியதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து, தமிழ்நாடு திரைப்பட இயக்குனர் சங்கத் தலைவர் விக்ரமன், தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்கத் தலைவர் நாசர்; தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கலைப்புலி எஸ்.தாணு, உள்ளிட்ட அனைத்து சங்கங்களின் நிர்வாகிகளும் நேரில் சந்தித்தனர். அப்போது, சின்னம்மாவின் பொதுக்குழு நடிப்பை பாராட்டி சிறப்பு விழா நடத்துவதற்கு ஏற்பாடு செய்திருப்பதாகத் தெரிவித்து, நிகழ்ச்சியில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலா கலந்துகொண்டு பாராட்டை ஏற்று சிறப்பிக்குமாறு தமிழ்நாடு திரைப்படத் துறையைச் சேர்ந்த அனைத்து சங்கங்களின் நிர்வாகிகளும் அழைப்பு விடுத்தனர்.

There are no comments yet