சென்னை: தமிழகத்தில் ஜல்லிக்கட்டை நடத்த வேண்டும் என, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து இருக்கும் பா.ஜ., மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி, தமிழகத்தில் உச்ச நீதிமன்ற உத்தரவை மீறி, இந்தாண்டு ஜல்லிக்கட்டுப் போட்டியை நடத்தினால், தமிழக அரசை மத்திய அரசு கலைத்துவிட்டு, ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என கூறினார். இதற்கு, தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தமிழக நலன் களுக்கு எதிராக செயல்படும்; கருத்து கூறும் சுப்பிரமணியன் சாமியை தமிழகத்திற்குள் விட மாட்டோம் என சொல்லி, சவால் விட்டுள்ளனர்.

இது குறித்து சுப்பிரமணியன் சாமி நமது கப்ஸா நிருபருக்கு அளித்த சிறப்பு பேட்டியில் கூறியதாவது: சட்டத்துக்கு புறம்பாக ஜல்லிக்கட்டு நடத்துவோம் என்று கூறிய சிலரை நான் பொறுக்கிகள் என்றேன். ஆனால் ஒட்டு மொதத தமிழர்களையும் நான் (என்னையும் சேர்த்து தான்) சொன்னதாக கதை கட்டி விட்டார்கள். நான் டுவிட்டர் கருத்தை தெரிவிப்பதற்கு முன்பு என் தந்தை புள்ளி விவரம் சேகரிக்க தெருத்தெருவாக விவரங்களை பொறுக்கியது, என் அம்மா சாதம் வடிக்க அரிசியில் கல்லை பொறுக்கியது, நான் சிறு வயதில் மயிலாப்பூரில் வசிக்கும்போது சுவர் ஏறி குதித்து மாங்காய் திருடியது, பக்கத்து வீட்டு கண்ணாடி ஜன்னலை உடைத்தது, ஸ்கூலுக்கு மட்டம் போட்டுவிட்டு எம்.ஜி.ஆர் படம் பார்த்தது போன்ற என் பொறுக்கித்தனங்களை மலரும் நினைவுகளாக ஓட்டிப் பார்த்துவிட்டுத் தான் பதிவிட்டேன். தமிழகத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டியை நடத்த வேண்டும் என, வெத்து வேட்டு அரசியல்வாதிகளின் வெட்டிப் பேச்சைப் பற்றியெல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம். என்னைப்போன்ற சேம் சைடு கோல் போடும் அரசியல்வாதிகளை மக்கள் நம்ப வேண்டும். அப்போதுதான் தமிழ் பாரம்பரியம் பாழ் படும், திராவிட கலாச்சாரத்துக்கு இறுதிச்சடங்கு செய்து பாலூற்ற முடியும். இவர்கள் மட்டுமே தமிழர்கள் என்பது போலவும்; என்னைப் போன்றவர்கள் தமிழர்களே இல்லை என்பது போலவும் ஒரு தோற்றத்தை ஏற்படுத்துகின்றனர்.

நான் மதுரை மாவட்டம் சோழவந்தானைச் சேர்ந்த எச்சைத் தமிழன். என்னை தமிழகத்திற்குள் விட மாட்டேன் என சொல்லும் சீமானும், வேல்முருகனும், தமிழ்நாட்டு வாட்சுமேன்களா? தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்தப்பட வேண்டும் என்பதற்காக, பொய்யாக உச்ச நீதிமன்றத்தில் வழக்குப் போட்டது மட்டுமல்ல, ஜல்லிக்கட்டு நடத்தப்பட கூடாததன் அவசியத்தை பிரதமர் மோடிக்கு விவரித்ததே இந்தப் பொறுக்கி தான்.. அதன் பின்தான் அவசியம் உணர்ந்தது மத்திய அரசு. ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்க வேண்டும் என்றும் கோரியது போல ஒரு நாடகத்தை அரங்கேற்றி ஜெயலலிதா காலமானது முதல் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற சித்துவேலைகளை செய்து வருகிறது. பீட்டாவை சேர்ந்தவர்கள், ஜல்லிக்கட்டை நடத்துவதில் உள்ள ஆபத்து மற்றும் மாடுகளுக்கு ஏற்படாத துன்பங்கள் குறித்தெல்லாம் பட்டியலிட்டு, ஜல்லிக்கட்டு நடத்த விதிக்கப்பட்டுள்ள தடை நிரந்தரமாக்க வேண்டும் என்றது நியாயம் தானே.? இந்த பிரச்னையை நுட்பமான உணர்வுள்ள பிரச்னையாகவே உச்ச நீதிமன்றம் பார்க்கிறது. அதனால், இந்த விஷயத்தில் அவசரப்பட்டு முடிவெடுக்க, உச்ச நீதிமன்றம் தயாரில்லை. சில மாமாங்கமாவது பிடிக்கும் அதற்குள் நாட்டு மாடுகள் அழிந்தொழிந்து விடும். இருந்தாலும், இந்தாண்டு பொங்கலுக்குள், சாதகமான உத்தரவை பெற்று விட வேண்டும் என, தமிழக அரசு முயற்சித்தது. நானும் அப்படித்தான் முயற்சித்தது போல் நடித்தேன்.. சின்னம்மாவுக்கு தான் நடிப்பு வருமா என்ன? இந்த விஷயத்தில், எச்சைத் தமிழன் என்ற நிலையில், எனக்கு துளி வருத்தமில்லை. காவிரி பிரச்னையில் கர்நாடக அரசும்; முல்லைப் பெரியாறு பிரச்னையில் கேரளாவும் உச்ச நீதிமன்ற உத்தரவுகளை மதிப்பதில்லை.. அதை கண்டுகொள்ளக் கூடாது. நாம் உச்ச நீதிமன்ற உத்தரவை மதிக்க மாட்டோம்; தடையை மீறுவோம் என்றால், அதுமட்டும் நீதிமன்ற அவமதிப்பாகிவிடும். அப்படி மீறுவோர் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், தமிழக அரசு மீதே, மத்திய அரசு கடுமையாக நடவடிக்கை எடுக்க முடியும். இந்த அரசியல் சாசனப் பிரிவு 356ஐ பயன்படுத்தி, ஆட்சியை கலைத்து, ஜனாதிபதி ஆட்சியை தமிழத்தில் கொண்டுவர முடியும். வெளிநாட்டு பால் கம்பெனிகள் பதப்படுத்தப்பட்ட பாலை தங்கு தடையின்றி அதிக விலைக்கு விற்க முடியும். ஜல்லிக்கட்டு விவகாரத்தில், உச்ச நீதிமன்றம், கட்டாயம் தமிழர்களின் உணர்வுகளை ‘மிதித்து’ தீர்ப்பளிக்கும் என்பதுதான் எனது எதிர்பார்ப்பு; நம்பிக்கை. அதுவரை, எல்லோரும் பல ஒளிவருடங்கள் பொறுத்திருந்துதான் ஆக வேண்டும்.” என்றபடி பொறுக்க முடியாத துக்கத்தில் இருப்பவர் போல முகத்தை மாற்றி நடித்துக் காட்டினார்.

பகிர்

There are no comments yet