சென்னை: ஜல்லிக்கட்டு போட்டிக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது. சென்னை மெரினாவில் இரண்டாவது நாளாக போராட்டம் நடந்து வருகிறது. மாணவர்களுக்கு பல்வேறு தரப்பில் ஆதரவு பெருகி வருகிறது. போராட்டக்களத்திற்கு இளைஞர்கள், பெண்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். சென்னையில் முக்கிய பகுதிகளில் கல்லூரி மாணவர்கள், மென்பொருள் தொழில்நுட்ப ஊழியர்கள் போராட்டங்களில் ஈடுபட்டு உள்ளனர். பீட்டாவிற்கு தடை விதிக்க வேண்டும், ஜல்லிக்கட்டு போட்டி நடத்த வேண்டும் என போராட்டம் தீவிரம் அடைந்து உள்ளது. சென்னை மெரினாவில் மட்டும் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். போராட்டத்தை கைவிட வேண்டும் எனில் 3 முக்கிய கோரிக்கைகளை இளைஞர்கள் முன்வைத்துள்ளனர்.

இந்த நிலையில் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் பிரதமர் மோடியை சந்தித்து ஜல்லிக்கட்டு தொடர்பான அவசர சட்டம் கொண்டு வரவேண்டும் என கோரிக்கை வைக்க உள்ளார். இது தொடர்பாக இது குறித்து முதல்வர் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- ஜல்லிக்கட்டு நடத்த தமிழக அரசு தொடர்ந்து அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளும். இளைஞர்கள் போராட்டத்தை கைவிட வேண்டும். சட்டதிருத்தம் மேற்கொள்ளும் அதிகாரம் மத்திய அரசிடமே உள்ளது.அவசர சட்டத்தினை பிறப்பிக்கும்படி பிரதமரை வலியுறுத்த உள்ளேன்.மாணவர்கள் இளைஞர்களின் போராட்டம் நமது உணர்வுகளை வெளிப்படுத்துகிறது. ஜல்லிகட்டு விவகாரம் தொடர்பாக அ.தி.மு.க பொதுச்செயலாளர் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- ஜல்லிக்கட்டுக்காக மத்திய அரசு அவசரச் சட்டம் பிறப்பிக்க வேண்டும். ஜல்லிக்கட்டுக்கு எதிரான தடையை முற்றிலுமாக நீக்கக்கோரும் தீர்மானம், அனைத்துக்கட்சிகளின் ஒருமித்த குரலால் நிறைவேற்றுவோம். பீட்டா, தமிழகத்தின் கலாச்சாரத்திற்கு குந்தகம் விளைவிக்கிறது. பீட்டாவை முற்றிலும் தடுத்து நிறுத்துவதற்கான முயற்சிகளை சட்டரீதியாக மேற்கொள்வோம்.’ என்று கூறியுள்ளார்.

இது குறித்து ஒரு அதிமுக கரும்புள்ளி நமது கப்ஸா நிருபரிடம் கூறியபோது: சின்னம்மாவை டயட்டில் இருக்குமாறு மருத்துவர்கள் கூறியுள்ளனர், அதனால் அடிக்கடி உண்ணாவிரதம் இருக்கிறார். இப்போது ஜல்லிக்கட்டு பிரச்சினை சூடு பிடித்திருப்பதால், இதனை வைத்து கொஞ்சம் அரசியலில் காலூன்றலாம் என்றும் நினைக்கிறார். ஜல்லிக்கட்டில் மோடி அரசு சாதகமான முடிவு எடுக்கவில்லை என்றால், சுப்ரீம் கோர்ட் வாசலில் உண்ணாவிரதம் இருக்க சின்னம்மா தயங்க மாட்டார் என்றார்.

There are no comments yet