சென்னை: ஜல்லிக்கட்டு தடை மீதான போராட்டம் , 2007ல் சிறுபிரச்னையாக தொடங்கிய போராட்டம் இளைஞர்கள் கைகளில் சென்றதும் பெரும் மக்கள் போராட்டமாக உருவெடுத்துள்ளது. பீட்டாவுக்கு எதிராக தமிழகமெங்கும் மக்கள் தொடர்கோஷங்களை எழுப்பியபடி இருக்கிறார்கள். தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டம் தீவிரமடைந்துள்ளது. ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகவும், பீட்டா அமைப்பைத் தடை செய்ய வலியுறுத்தியும் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் எழுச்சிப் போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டத்துக்கு ஆதரவாக இளைஞர்களும், மாணவர்களும் அணிதிரண்டு வருவதால் அவர்களை சமாளிக்க முடியாமல் போலீஸார் திணறினர்.
இந்நிலையில் ஜல்லிக்கட்டு நடத்த அவசர சட்டம் கொண்டுவருவது என்பது அரசியலமைப்பிற்கு விரோதமானது என்றும், அதிகாரத்தை பொருத்தமற்ற வகையில் பயன்படுத்துவதற்கு ஒப்பானதாக கருதப்படும் என்றும் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை பீட்டா வலியுறுத்தியுள்ளது.
இந்த பீட்டாவை தடை செய்யக்கோரி சின்னம்மா, செயல் தலைவர் ஸ்டாலின் உள்பட பலவேறு அரசியல் தலைவர்களும், போராடும் இளைஞர்களும் குரல் எழுப்பி வரும் நிலையில் தே.மு.தி.க தலைவர் கேப்டன் விஜயகாந்த பீட்டாவை தடை செய்யக்கூடாது என்று கூறியதாக வந்த செய்தியை அடுத்து, நமது கப்ஸா நிருபர் கேப்டனை சந்தித்தார். அப்போது கேப்டன் கூறியதாவது: நான் பழைய காலத்து ஆளு, எனக்கு ஜல்லிக்கட்டு பிடிக்கும், ஆனால் பீடாவும் பிடிக்கும். ஜல்லிக்கட்டு வேணும், அதுக்காக பீடாவை தடை செய்யணும்னு சொல்றது தப்பு.
ருசியாக வயிறு நிரம்பச் சாப்பிட்டு, சுண்ணாம்பு தடவிய வெற்றிலையுடன், பாக்கு, சீவலை வைத்து மடித்து வாயில் போட்டு மென்று, வாய் சிவக்கவும், உண்ட உணவு செரிக்கவும் மகிழ்ந்திருந்த காலம் இன்று மறைந்தே போய்விட்டது. கடைகளில், ‘கொழுந்து வெற்றிலையும், கொட்டபாக்கும்’கூட கிடைக்காமல் போகலாம். நம் ஊர் வெற்றிலை – பாக்கின் இடத்தை தற்போது கைப்பற்றியிருப்பது வட மாநில இறக்குமதியான பீடாதான். பட்டர், ஸ்வீட், குல்கந்த், சுபாரி என பீடாக்களில் பலவகை உள்ளன. சுப நிகழ்ச்சிகளில் நாம் மெல்லும் ஸ்வீட் பீடாக்கள் வெற்றிலை, சீவல், ஏலக்காய், கிராம்பு, பதப்படுத்தப்பட்ட தேங்காய்த் துருவல், உலர் பழங்கள் மற்றும் தேன் ஆகியவை கொண்டு தயாரிக்கபடுகிறது. இதில் உடலுக்கு தீங்கு தரும் எந்தவகை பொருட்களும் இல்லை. இந்த பீடாவை தடை செய்ய சொல்வது அநியாயம். .
எனக்கு பள்ளியில் படிக்கிறப்பவே, பீடா போடுற பழக்கம் இருந்தது. முதன்முதலா வாங்கி மென்றப்ப, ஒருவித மயக்கம் இருந்துச்சு. தொடர்ந்து அதிகமா பயன்படுத்த ஆரம்பிச்சேன். ஒரு கட்டத்துல தினமும் நாலு பீடா போடாம என்னால இருக்க முடியலை, பீடாவை மட்டும் தயவு செய்து தடை செய்ய வேண்டாம் என்று கண்களில் கண்ணீரை காட்டினார்.
There are no comments yet
Or use one of these social networks