சென்னை: ஜல்லிக்கட்டு நடத்த கோரி கடந்த 10 நாட்களாக மாணவர்கள், இளைஞர்கள் நடத்திய போராட்டம் இறுதிக் கட்டத்தில் சில விஷமிகளின் காரணமாக வன்முறை வெறியாட்டமாக மாறியது. திருவல்லிக்கேணியில் உள்ள ஐஸ்ஹவுஸ் காவல்நிலையம் தீவைக்கப்பட்டது. கலவரத்தை ஒடுக்க போலீஸ் தடியடி நடத்தியது. இதில் மாணவர்கள் பலர் காயமடைந்தனர். மெரீனா கடற்கரை அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனங்கள், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களை காவல்துறையினர் தடியால் அடித்து நொறுக்கியுள்ளனர். மேலும் ஆட்டோக்களுக்கும், குடிசைக்குள் போலீஸாரே தீ வைக்கும் சம்பவங்களும் நடந்தது. இந்த வீடியோ காட்சி ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இந்நிலையில், காவல் ஆணையர் ஜார்ஜ் “போலீஸார் வாகனங்களுக்கு தீ வைத்ததாக வெளியான வீடியோ குறித்து விசாரணை நடத்தி சிறப்பாக பணியாற்றிய காவல் துறையினருக்கு வரும் குடியரசு தினத்தன்று சின்னம்மா கையால் சிறப்பு பதக்கங்கள் வழங்கப்படும்” என கப்சா செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியுள்ளார். மேலும் கூறும்போது, மாணவர்கள் போராட்டத்துக்குள் நண்பர்களான சமூக விரோதிகள், எங்களுக்கு மிக நெருக்கமான தேச விரோத சக்திகள் புகுந்திருப்பதாக எங்களுக்கு உளவுத்துறை எச்சரிக்கை விடுத்தது. இந்த நிலையில் ஜல்லிக்கட்டுக்கு தடையை நீக்கும் வகையில், அவசரச் சட்டம் நிறைவேற்றப்பட்ட பின்னர், மாணவர்களிடம் போராட்டத்தை கைவிடும்படி பல்வேறு கட்டங்களாக கெட்ட வார்த்தைகளால் பேச்சுவார்த்தை நடத்தி வந்தோம். பதிலுக்கு பதில் கெட்ட வார்த்தை பேசி ஒரு கும்பல் மட்டும் சமூக விரோதிகள், தேசவிரோத சக்திகள் தூண்டுதலினால் கடற்கரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டது. இதன் விளைவாக அவர்களை லேசான தடியடி கல்லடி பிரம்படி கபடி நடத்தி கலைத்தோம். மாணவர்கள் யாரும் வன்முறையில் ஈடுபடவில்லை. அவர்களை முன்பே முட்டியை பேத்து வீட்டுக்கு அனுப்பிவிட்டோம்.

>சமூகவிரோத செயல்கள் எதையும் மற்றவர்கள் செய்ய தமிழக காவல்துறை ஒருபோதும் அனுமதிக்காது. நாங்களே செய்து விடுவோம். தற்போது நிலைமையும், போலீஸ் வைத்த தீயும் கட்டுக்குள் வந்து விட்டது, வாகனங்களுக்கு போலீஸார் தீ வைத்ததாக வெளியான வீடியோ குறித்து ‘சும்மானச்சுக்கும்’ விசாரணை நடத்தப்படும், போலீஸார் வன்முறையில் ஈடுபட்டதாக கூறப்படும் வீடியோக்களை இதுவரை நான் பார்க்கவில்லை, யூட்யூப்பில் ‘பைரவா’ டவுன்லோடு செய்து வைத்துள்ளேன், அதை முதலில் பார்க்க வேண்டும். மேலும் ஆட்டோ, குடிசை என தொடர்ச்சியாக தீ வைக்கும் வீடியோ ரௌடி பொம்பளை போலீசை அடையாளம் காணும் தொடர் முயற்சியில் சைபர் கிரைம் ஈடுபட்டுள்ளது. அவரை கண்டுபிடித்து அடையாளம் கண்டு சின்னம்மாவிடம் வின் சிறப்பு அம்மா டாலர் குடியரசு தினத்தில் பரிசளிக்க உள்ளோம்.” இவ்வாறு ஜார்ஜ் தெரிவித்தார்.

பகிர்

There are no comments yet