புதுடில்லி / சென்னை: கலை, சமூக சேவை, பொது விவகாரம், அறிவியல் – தொழில்நுட்பம், வர்த்தகம், மருத்துவம், இலக்கியம், கல்வி, விளையாட்டு உள்ளிட்ட துறைகளில், சிறந்த சேவை ஆற்றியோருக்கு, ஒவ்வொரு ஆண்டும், குடியரசு தினத்தையொட்டி, பத்ம விருதுகள் அறிவிக்கப்படுகின்றன. தமிழகத்தைச் சேர்ந்த, ஏழு பேருக்கு, பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

பத்ம விருதுகளில் மிகவும் உயரிய விருதான பத்ம விபூஷண் விருதுக்கு, ஈஷா யோகா மையத்தை நடத்தி வரும், ஆன்மீகவாதி ஜக்கி வாசுதேவ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். பத்ம பூஷண் விருதுக்கு, மறைந்த பத்திரிகையாளர், அரசியல் விமர்சகர், ‘சோ’ ராமசாமி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். பத்ம ஸ்ரீ விருதுக்கு, பிரபல மிருதங்க வித்வான், டி.கே. மூர்த்தி, பிரான்ஸ் நாட்டில் பிறந்த, அரவிந்தர் ஆசிரமத்தில் நூல்களை மொழி பெயர்ப்பு செய்துவரும் எழுத்தாளர் மைக்கேல் டேனினோ, கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திரா துணைத் தலைவரான, சமூக சேவகி, நிவேதிதா ரகுநாத் பிடே, சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த, பாராலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதலில் தங்கம் வென்ற மாரியப்பன் தங்கவேலு, எய்ட்ஸ் சிகிச்சையில் முன்னோடியான, மறைந்த டாக்டர் சுனிதி சாலமன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு கோரப்பட்ட நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருது யாருக்கும் வழங்கப்படவில்லை.

இந்த நிலையில் அதிமுகவின் புதிய பொதுச்செயலாளர் சின்னம்மா தனது 30 ஆண்டுகால சேவைகளுக்கு பிரதிபலனாக தனக்கு பத்மபூஷன் அல்லது விபூஷண் கிடைக்கும் என்று எதிர் பார்த்த நிலையில், அவருக்கும் விருது எதுவும் வழங்கப்படாததால் மிகவும் வருத்தத்தில் இருப்பதாக போயஸ் கார்டனில் இருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. இதையடுத்து, சின்னம்மாவை கடந்த டிசம்பரில் போயஸ் கார்டன் சென்று, நேரில் சந்தித்த துணை வேந்தர்கள் , சின்னம்மாவுக்கு பத்மா அவார்டு கிடைக்காவிட்டால் என்ன நாங்கள் ஆளுக்கொரு டாக்டர் பட்டம் தருகிறோம் என்று உறுதி அளித்துள்ளதாக நம்பத்தகாத தகவல்கள் கூறுகின்றன. இதையடுத்து சின்னம்மா சசிகலா தன்னை அனைவரும் ‘டாக்டர் சின்னம்மா’ என்று அழைக்க உத்திரவிட்டுள்ளதாக போயஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

There are no comments yet