மதுரை: அலங்காநல்லூர், பாலமேட்டில் நடைபெற இருந்த ஜல்லிக்கட்டு போட்டிகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாகவும், முதல்வரை சந்தித்த பின் ஜல்லிக்கட்டுக்கான புதிய தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் விழாக் குழுவினர் தெரிவித்துள்ளனர். உச்ச நீதிமன்றம் தடை விதித்ததால் தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு நடைபெறவில்லை. கடைசியாக 2014-ம் ஆண்டு ஜல்லிக்கட்டு நடந்தது. இந்த ஆண்டும் தடையை நீக்க உச்சநீதிமன்றம் மறுத்ததால் பொங்கல் பண்டிகை நாட்களில் ஜல்லிக்கட்டு நடக்கவில்லை. மதுரை மாவட்டம், அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரத்தில் தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்த கிராம மக்கள் முயற்சிகள் மேற்கொண்டனர்.

இதைத் தொடர்ந்து கடந்த 16-ம் தேதி அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டை நடத்தவிடாமல் தடுக்க போலீஸார் அங்குள்ள வாடிவாசலுக்கு ‘சீல்’ வைத்தனர். இதனால் வெகுண்டெழுந்த மாணவர்கள், இளைஞர்கள், உள்ளூர் மக்களுடன் கை கோர்த்து வாடிவாசல் முன் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களை விடுவிக்கக் கோரி அலங்காநல்லூர் கிராம மக்கள் மறுநாள் ஜன. 17-ம் தேதி போராட்டத்தை தொடங்கினர். அவர்களுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் போராட்டங்கள் வெடித்தன. இந்தப் போராட்டம் ஒரு வாரகாலத்திற்கு மேலாக நடைபெற்றது. மாணவர்கள் போராட்டத்துக்கு தமிழக அரசு பணிந்தது. அவசரச் சட்டம் கொண்டு வந்து ஜல்லிக்கட்டு நடத்த ஏற்பாடுகள் நடைபெற்றன. ஆனால் நிரந்தர சட்டம் நிறைவேற்றும் வரை போராட்டத்தை கைவிடப் போவதில்லை என போராட்டக்காரர்கள் அறிவித்தனர்.

இதனிடையே ஜல்லிக்கட்டு போட்டிகளை தமிழகத்தில் நடத்த இருந்த தடை விலகியதால்,வரும் பிப்ரவரி 1-ஆம் தேதி அலங்காநல்லூரிலும்,பிப்ரவரி 2-ஆம் தேதி பாலமேட்டிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அலங்காநல்லூர் மற்றும் பாலமேடு கிராமங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான முன்னேற்பாடுகள் நடந்து வருகின்றன. இன்று மாலை இரண்டு கிராம மக்களும் தனித்தனியாக மதுரை மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவை சந்தித்தனர். இந்த சந்திப்பிற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்கள்,அலங்காநல்லூர் மற்றும் பாலமேட்டில் நடைபெறுவதாக இருந்த ஜல்லிக்கட்டை ஒத்தி வைப்பதாகவும், வரும் 30-ஆம் தேதி தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தை சந்தித்த பின்னர் ஜல்லிக்கட்டு நடைபெறும் தேதி அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர். அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடத்தப்படும் தேதி மாற்றம் குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.

இது குறித்து நேரில் அலங்காநல்லூருக்கு செய்தி சேகரிக்க தனது கனவில் சென்ற கப்ஸா நிருபருக்கு, காளைகள் அடக்க துடித்துக் கொண்டிருந்த வாலிப காளைகளை சந்தித்து எடுத்த் பேட்டியில் அவர்கள் கூறியதாவது: மூணு வருஷமா இந்த மாடுகளை அடக்காம எங்களுக்கு பொழுதே போகவில்லை. அவரச சட்டம் போட்டுட்டு ஊருக்கு வந்த முதலவர் ஓபிஎஸ், அவர்களை திமுகவினர் ஊருக்குள்ளேயே விடவில்லை. அதனால ரெம்ப கோவமா போனவருக்கு, சின்னம்மா என்ன டோஸ் விட்டார்கள் என்று தெரியவில்லை. இப்போ இந்த கலெக்டர் ஊர் பெரியவர்களை அழைத்து சின்னம்மா வந்து தொடக்கி வைக்காம காளைகளை அவுத்து விடக்கூடாதுன்னு சொல்லி திரும்பவும் ஜல்லிக்கட்டை ஒத்தி வைக்க சொல்லி விட்டார். இப்போ நாங்களும் சோர்ந்து விட்டோம், மாடுகளும் சோர்ந்து விட்டன. எங்களுக்கும், மாடுகளுக்கும் ஜல்லிக்கட்டின் போது இலவச டாஸ்மாக் சரக்கு வழங்க வேண்டும் என்று அடுத்த போராட்டம் செய்யலாம் என்று நினைக்கிறோம் என்று கூறினார்.

There are no comments yet