சென்னை: ஜெயலலிதா மறைவால், அ.தி.மு.க., பொதுச் செயலராகி உள்ள சின்னம்மாவுக்கு, தொண்டர்கள் மத்தியில் ஆதரவு இல்லை. அவருக்கு போட்டியாக, குட்டி அம்மா தீபாவை களமிறக்க, ஜெயலலிதா விசுவாசிகள், அவரிடம் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், அரசியலில் களமிறங்குவது குறித்து, பிப்ரவரி 24ம் தேதி அறிவிப்பதாக, தீபா தன் வீட்டு பால்கனியில் நின்றவாறு கும்பிடு போட்டு, தொண்டர்களிடம் தெரிவித்துள்ளார். இந்நிலையில் அவர் அரசியலுக்கு வருவார் என்று ஒரு தரப்பும், வரமாட்டார் என மற்றொரு குரூப்பும் கூறிவருகின்றனர். இது இருதரப்பினர்களுக்கும் இடையில் கருத்து மோதலை ஏற்படுத்தியிருந்தாலும் தற்போது அவர்கள் தீபா அரசியலுக்கு வருவார், வரமாட்டார் என கிரிக்கெட் பெட்டிங் போல பந்தயம் கட்டும் அளவிற்கு போயிருப்பதாக கூறப்படுகிறது.

மூப்பனார் பாணியில், அவர் கட்சி துவக்குவாரா அல்லது ரஜினி ஸ்டைலில், ‘வாய்ஸ்’ மட்டும் கொடுத்துக் கொண்டே இருப்பாரா என, ‘பெட்டிங்’ நடப்பதாகக் கூறப்படுகிறது. இது குறித்து குட்டி அம்மாவின் அடி’மாட்டு’ தொண்டர் ஒருவர் கப்ஸா நிருபரிடம் கூறியதாவது. அம்மாவால் 10 வருடங்களுக்கும் மேலாக ஒதுக்கி வைக்கப்பட்ட குட்டி அம்மா தீபா அம்மையார், அந்த கோபத்தில் ஜெயலலிதா மறைவு குறித்து சந்தேகம் எழுப்பவில்லை, ஜல்லிக்கட்டு போராட்டம் போது போலீஸ் கல்லடி-தடியடிக்கு பயந்து மெரீனாவில் தலைகாட்டவில்லை. பொத்தல் சுரைக்காய் உடம்பு தாங்காது பாருங்க. பால்கனியிலேயே ஈசி சேர் போட்டு ஓய்வு எடுத்துக்கொண்டார். ரத்ததை பார்த்தால் மயக்கம் வந்துவிடும் என்பதால் டிவி கூட பார்ப்பதில்லை. மத்திய அரசிடம் இருந்து பெட்டி வரும் என்று வீட்டில் பகல் கனவு காண்கிறார். நாங்கள் குட்டியம்மா பெயரைச் சொல்லி இல்லாத கட்சிக்கு நிதி திரட்டினோம், அதை கெடுக்கும் விதத்தில் வீட்டில் பேனர் வைத்து விட்டார்.

நாங்கள் ஜல்லிக்கட்டை மீட்டெடுத்த மாணவர்கள் வழிமுறையை பின்பற்றி பழைய பாரம்பரிய விளையாட்டுக்களான ‘மங்காத்தா’, ‘மூணு சீட்டு’, ‘ரம்மி’ ‘கிங் குயின் ஜாக்’ ஆடு புலி ஆட்டம், போன்றவற்றை பணம் வைத்து குட்டி அம்மா அரசியலுக்கு வருவாரா வரமாட்டாரா என ஆலமரத்தடியிலும், புளியமரத்தடியிலும் சூதாடி வருகிறோம், கொஞ்சம் படித்த முட்டாள் தொண்டர்களும் ஆன்லைன் ரம்மி போல தங்கள் மொபைல் போனில் ஹைடெக் சூதாடி வருகின்றனர். எப்படியோ தொண்டர்களாகி வட்டம் மாவட்டம் என பொது சொத்தை ஆட்டைய போடலாம் என்று இருந்தோம், தற்பொது கேப்பில் கிடா வெட்டுவதுபோல சூதாடி சம்பாதித்து வருகிறோம்” என்றார்.

பகிர்

There are no comments yet