சென்னை: ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடந்த போராட்டத்தில் கைதான மாணவர்களையும் மீனவர்களையும் விடுதலை செய்ய வேண்டும்; இல்லையென்றால் என்னையும் கைது செய்யுங்கள் என்று நடிகர் சிம்பு தெரிவித்துள்ளார். நமது கப்சா நிருபரிடம் அவர் தெரிவித்ததாவது: “ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்று கோரி மெரீனாவில் 6 நாட்களுக்கும் மேலாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அமைதியான முறையில் போராட்டம் நடத்தினர். கல்லடிக்கு பயந்து நான் கருப்பு சட்டை அணிந்து வீட்டிலேயே படம் பார்த்துக் கொண்டிருந்தேன். மாணவர்கள்  கலைந்து செல்வதற்கு காவல்துறை உரிய அவகாசம் அளித்திருந்தால் தடியடி கல்வீச்சு போன்ற அசம்பாவிதம் நடந்திருக்காது.

வன்முறையில் சில கறுப்பு ஆடுகள் ஈடுபட்டதாக கூறுவது முட்டாள்தனம். கறுப்பு ஆடுகளை பிரியாணி செய்திருந்தால் இந்த பிரச்சினை வந்திருக்காது. போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுக்கு ஆதரவு கொடுக்கத்தான் அங்குள்ள மீனவர்களும் போராட்டத்தில் குதித்தனர். அவர்களை ஜெயிலில் அடைத்து கருவாடு ஆக்கி இருக்கிறார்கள். அவர்களை கைது செய்தது எந்த விதத்தில் நியாயம்? அரசுக்கு நான் மூன்று கோரிக்கைகளை வைக்கிறேன்.  வன்முறையில் ஈடுபட்டதாக கூறி கைது செய்யப்பட்ட மீனவர்கள் மற்றும் மாணவர்களை உடனடியாக விடுதலை செய்யவேண்டும். அவர்களை விடுதலை செய்யமுடியாது என்றால், பெண்களையும் கற்பையும் காதலையும் கொச்சைப்படுத்தி ‘பீப்’ பாடல் பாடிய ‘ஈனனான’ என்னையும் கைது செய்யுங்கள்.

ஏற்கனவே நானும் அனிருத்தும் பாத்ரூமில் எங்களுக்காக மாட்டும் பாடி பீப் ரெக்கார்டு செய்து வைத்திருந்த பீப் பாடல் விவகாரத்தில் கைது நடவடிக்கைக்கு பயந்து, அம்மா தயவால் சிறை செல்லாமல் தப்பித்தேன். இப்போது வீட்டில் சும்மா தான் இருக்கிறேன் சிறை செல்லத் தயார்.. இரண்டாவதாக கலவரத்தின் போது பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு நிவாரணம் கொடுக்க வேண்டும். என்னால் கொடுக்க முடியாது, ஐ.டி. ஊழியர்கள் ஏதோ கொடுத்ததாக சொன்னார்கள். மூன்றாவதாக இந்த போராட்டத்தின் வெற்றியை கொண்டாட திரைப்படங்களின் 100வது நாள் கொண்டாடுவது போல அரசு ஒருநாள் ஒதுக்கித் தரவேண்டும். அதற்கு எஸ்.டி.ஆர் தினம் என பெயர் சூட்டவேண்டும். கைதானவர்களை அரசு விடுவிக்கவில்லையெனில், அவர்களுக்காக அஹிம்சை வழியில் நான் போராடுவேன். எஸ்.டி.ஆர் என்ற பெயரை எம்.கே.ஜி (மோகந்தாஸ் கரம்சந்த் காந்தி) என்று மாற்றிக் கொள்வேன். அதேநேரம் ‘ஓஸ்தி’ திரைப்படத்தில், என் ரௌடி போலீஸ் வேடம் போல வன்முறையில் ஈடுபட்ட காவல்துறையினர் மீது அரசு எந்த வித நடவடிக்கையம் எடுக்காதது ஏன்?  தற்போது மெரினாவில் 144 தடை உத்தரவு ஏன் போடப்பட்டுள்ளது? 143 சொல்லும் காதலர்கள் தங்கள் சரசங்களை சுடும் பீச் மண்ணில் செய்யாமல் எங்கு செல்வார்கள்? எங்கு கடலை போடுவார்கள்?” என்று கள்ளக் காதலர்களுக்கு வக்காலத்து வாங்கி பேசினார்.

பகிர்

There are no comments yet