சென்னை: மாணவர்கள் நடத்திய ஜல்லிக்கட்டுப் புரட்சியில் ஒசாமா பின்லேடன் படம் வைக்கப்படவில்லை என தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். மாணவர்கள் போராட்டத்தில் போலீஸ் தடியடி நடத்தியது தவறு என்றும், போராட்டத்தில் ஒசாமா பின்லேடனின் படம் இருந்ததுப்போல் வாட்ஸ்ப், ஊடகங்களில் வரவில்லை என தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். மத்திய அரசு தப்பிப்பதற்காக இதுபோல் கூறியுள்ளதாகவும் கேப்டன் தெரிவித்தார். சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் இன்று கப்ஸா செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது, ”ஜல்லிக்கட்டு போராட்டத்தில் போலீஸ் தடியடி நடத்தியது தவறு. மாறாக துப்பாக்கி சூடு நடத்தியிருக்க வேண்டும், நான் எத்தனை படங்களில் மிஷின் கன்னை எடுத்து தீவிரவாதிகளை ‘டுப் டுப்’ என்று தீபாவளி கேப் போல சுட்டுத்தள்ளி இருக்கிறேன். என் மனைவி தேர்தல் பிரசாரத்தில் சொன்னதுபோல் போலீஸ்காரர்களுக்கு தைரியம் என்பதே கேப்டன் நடித்த போலீஸ் படங்களை பார்த்திருந்தால் வந்திருக்கும்.
ஜல்லிக்கட்டு விவகாரத்தில் மத்திய அரசுதான் தடியடி நடவடிக்கை எடுத்தது, என்றும் கூறினார். மாணவர்கள் போராட்டத்தில் ஒசாமா பின்லேடன் படம் வைக்கப்பட்டிருந்ததாக கூறப்பட்டது குறித்த கேள்விக்கு பதலளித்த விஜயகாந்த், ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பின்லேடன் படம் வைக்கப்படவில்லை என்றார். பின்லேடன் படம் இருந்ததாக எந்த ஊடகங்களிலும் வாட்ஸ்அப்பிலும் வரவில்லை என்றும் அவர் கூறினார். அப்போது அருகிலிருந்த அடிமாட்டு தொண்டர், “தலீவரே நீங்க வச்சிருக்கிற பழைய நோக்கியா பேசிக் மாடல் போனில் வாட்சப் பேஸ்புக் வராது” என்று காதைக் கடிக்க, கேப்டன் நாக்கை கடித்தார். தொடர்ந்த கேப்டன், “மத்திய அரசு தப்பிப்பதற்காகவே இதுபோல் கூறியுள்ளது.. மத்திய அரசின் சர்வாதிகார போக்கை கண்டித்து, மீண்டும் பழைய கேப்டனாக மாறுவேன், புலன்விசாரணை படத்தில் கிட்னி திருடர்களை கண்டுபிடிக்க பயன் படுத்திய நீளமான காக்கி கோட்டையும், ஹேட்டையும் தூசி தட்டி மேல் தையல் போட சொல்லி உள்ளேன், தவிர அர்ஜூன் படங்களில் பயன் படுத்திய ஏகே 47 ரக துப்பாக்கிகளையும் கைமாத்து கேட்டுள்ளேன். பின்லேடன் உயிருடன் இருப்பதால் தால் ஜல்லிக்கட்டு விவகாரத்தில் மத்திய அரசு இரட்டை வேடம் போட்டு தப்பிக்கப் பார்க்கிறது. அதற்கு முற்றுப்புள்ளி வைக்க பின்லேடனை கொல்வது தான் ஒரே வழி.. கேப்டன் பிரபாகரன் படத்தில் செய்தது போல் குதிரையிலேயே தமிழ்நாட்டில் இருந்து பாகிஸ்தான் வரை செல்ல திட்டமிட்டேன், தொத்தல் குதிரை என்பதால் அதைக் கூட்டிக்கொண்டு நடை பயணம் செல்ல திட்டமிட்டுள்ளேன்,” என்றார்.






































There are no comments yet
Or use one of these social networks