சென்னை: எண்ணூர் துறைமுகம் அருகே கடந்த 28ம் தேதி இரு கப்பல்கள் மோதிக்கொண்ட விபத்தில் கப்பலில் எண்ணெய் கசிவு ஏற்பட்டு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் கடல் பகுதியில் ஏராளமான உயிரினங்கள் செத்து மிதக்கின்றன. எண்ணெய் கழிவுகளை நீக்கும் பணிகளில் மாணவர்கள் மற்றும் தன்னார்வலர்கள் அதிகம் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் வாளிகளில் அள்ளி கழிவுகளை நீக்கி வருகின்றனர். இந்நிலையில் இன்று எண்ணூர் பகுதிக்கு விஜயகாந்த் தனது மனைவி பிரேமலதாவுடன் சென்றார். அங்கு நடைபெறும் பணிகளை பார்வையிட்டார். பின்னர் அவர் கப்ஸா செய்தியாளர்களிடம் பேசுகையில், கப்பல் இடித்து ஐந்து நாட்கள் ஆகிவிட்டது. கேப்டனாக நடித்த எனக்குத்தான் கப்பல் பற்றி நன்கு தெரியும். யாரோ சிவப்பு ஒயருக்கு பதிலாக பச்சை ஒயரை கட் செய்து இந்த விபத்தை ஏற்படுத்தி இருக்கிறார்கள். கழிவுகளை அகற்ற தேவையான உபகரணங்கள் எதுவும் இதுவரை வழங்கப்படவில்லை. வாளீயை வைத்து அள்ளி சுத்தப்படுத்த இது என்ன கிணறா? இது போன்று செய்தால் என்றைக்கு இந்த பணி முடியும்? பீச் போராட்டத்தால் பீடா ஒழிப்பு, சரக்கில் மிக்ஸ் செய்யும் கோக் பெப்சி தடை போன்றவற்றுக்கு, போராடினால்தான் தேவைகள் நிறைவேற்றப்படும் என்றால் இன்னொரு போராட்டத்துக்கும் தயார் என்று பேசினார்.

ஏற்கனவே ‘தமிழகத்தில் அசாதாரண சூழல் நிலவுகிறது’ என்று ரஜினி கூறியபோது, பட ரிலீசின் போது மட்டும் வாய்ஸ் கொடுக்கும் ரஜினி அரசியல் பேசக்கூடாது என்று எரிந்து விழுந்தார் சரத்குமார். நடிகர் ரஜினி, அரசியலுக்கு வரக் கூடாது; வந்தால், அவரை நான் கடுமையாக எதிர்ப்பேன்; அவரை எதிர்ப்பதையே முழு நேரத் தொழிலாக்கிக் கொள்வேன்’ என்றெல்லாம், ரஜினிக்கு எதிராக கொந்தளித்தார் அதன் பின்னணியில் சின்னம்மா இருப்பதாக கிசுகிசுக்கப்பட்டது. ஜல்லிக்கட்டை வலியுறுத்தி மாணவர்கள் நடத்திய போராட்டம் வெற்றி பெற்ற நிலையில், கலைந்து செல்லாத அவர்களை போலீஸார் விரட்டி அடித்தனர். அதை வைத்து, தற்போது, தமிழக போலீசையும், முதல்வர் பன்னீர்செல்வத்தையும் கடுமையாக விமர்சித்து பேசினார் நடிகர் கமல்ஹாசன். நடிகர் கமல்ஹாசனுக்கு எதிர்ப்பாக கடும் விமர்சனங்களை வைக்க வேண்டும் என முடிவெடுத்துள்ள முதல்வர் பன்னீர்செல்வம், இதற்காக, சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமாரை கொம்பு சீவி விட்டுள்ளார். இப்போது கச்சா எண்ணை அகற்றும் பணியில் விஜயகாந்த் பேச்சை எதிர்க்கும் அசைன்மெண்ட் கொடுக்கப்பட்டுள்ளதாக அதிமுக பட்சி கூறுகிறது.

கேப்டனின் பேச்சைக் கேட்டு வெகுண்டெழுந்த நாட்டாமை சரத்குமார், தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் வேலைகளை ஒத்தி வைத்துவிட்டு, கப்சா நிருபரிடம் பேட்டி அளித்தார். “வாளியில் எண்ணை அள்ள இது என்ன கிணறா என்று கேப்டன் கேள்வி எழுப்பி உள்ளது கேலிக்கூத்தாக உள்ளது. வாளி தேவையில்லை. நாட்டாமை படத்தில் 18 பட்டிக்கு தீர்ப்பு சொல்ல பயன்படுத்திய சொம்பு போதும், சின்னம்மா ஆணைப்படி, கும்பகோணத்தில் குத்துவிளக்கு தயாரிப்பாளர்களை, விளக்கு தயாரிப்பை நிறுத்தி விட்டு, சொம்பு புரொடக்ஷனை துரிதப்படுத்த முடுக்கி விட்டுள்ளேன். அவை சென்னை வந்ததும், ஆளுக்கு ஒன்று கொடுத்து எண்ணை அள்ளச்சொல்வேன். அப்படியை கடலோரத்தில் காலைக்கடன்களை பொதுமக்கள் முடித்துக் கொண்டு கால் அலம்பவும் பயன்படுத்திக் கொள்ளலாம்.” என்றார். இதற்கு பதிலடி கொடுத்த கேப்டன், தற்போது பிரபலமாகி வரும் பக்கெட் பிரியாணி மெத்தடில் வீட்டுக்கு ஒரு “பீனிக்ஸ் பக்கெட் பிரியாணி” வித் குவார்ட்டர் வழங்கப்படும் என்றும், கச்சா எண்ணை அள்ளப்போவது பட்கெட்டா அல்லது நாட்டாமை சொம்பா பார்க்கலாம் என்றார்.

பகிர்

There are no comments yet