மதுரை: உச்சநீதிமன்ற தடையால் இரண்டு ஆண்டு களாக ஜல்லிக்கட்டு நடக்கவில்லை. ஜல்லிக் கட்டு நடத்தக் கோரி கிராம கமிட்டியினர் தொடர்ந்து வலியுறுத்தினர். இதற்காக முதன் முதலாக தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின், பின்னர் தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், த.மா.கா., தலைவர் வாசன் உட்பட அனைத்து கட்சியினரும் அலங்காநல்லுார் சென்று போராடினர். அலங்காநல்லுார் விழா கமிட்டியினர், நேற்று மதுரையில் கலெக்டர் வீரராகவ ராவை சந்தித்து முறைப்படி அனுமதி கோரினர். இதில் எம்.எல்.ஏ., மாணிக்கம் மற்றும் கமிட்டி தலைவர் சுந்தர், செயலர் சுந்தரராகவன் மற்றும் பலர் பங்கேற்றனர்.
பிப்., 6 ல் கலெக்டர் அலுவலகத்தில் அனைத்து துறை அதிகாரிகள் கூட்டத்தில், ஜல்லிக்கட்டு ஏற்பாடுகள் குறித்து ஆலோசிக்க முடிவு செய்யப் பட்டது.எம்.எல்.ஏ., கூறுகையில், ”விழா கமிட்டி யினர் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து விழாவில் பங்கேற்கஅழைப்பு விடுத்துள்ளனர். அ.தி.மு.க., பொது செயலர் சசிகலாவிற்கும் அழைப்பு விடப்பட்டுள்ளது,” என்றார்.இதற்கிடையில் ஜல்லிக்கட்டிற்காக போராடிய அனைத்து கட்சி தலைவர்களையும் அழைக்க வேண்டும் என அலங்காநல்லுார் கிராமத்தினர் விழா கமிட்டியினரை வலியுறுத்தியுள்ளனர். இதுகுறித்து அனைத்து கட்சியினர் கூடி ஆலோசித்து அனைத்து கட்சி தலைவர்களையும் ஜல்லிக்கட்டு அழைத்து காளைகளை அடக்க வேண்டுகோள் விடுத்தனர்.
இந்நிலையில் இன்று அலங்காநல்லூரில் நடந்த ஒத்திகை ஜல்லிக்கட்டில் அனைத்து கட்சி தலைவர்களும் கலந்து கொண்டு காளைகளை அடக்க முயற்சித்த காட்சியின் நேரடி வர்ணனை இதோ:
முதலாவதாக திமுகவை சேர்ந்த துகில் உறி துரைமுருகன் வருகிறார்: ” தம்பி வா… காளையே வா… என்னுடன் மோத வா… என்று சொல்ல, காளை மிரண்டு பாய்ந்து வர, வேட்டி டர்ருன்னு கிழிய , குய்யோ முய்யோ என்று ஒரே சத்தம் அங்கே. தொண்டர்கள் துரைமுருகனை தூக்கிக்கொண்டு மருத்துவமனை விரைகின்றனர்.
அடுத்ததாக கேப்டன் விஜயகாந்த் தனக்கே உரித்தான கிராமத்து கெட் அப்பில் ” என் காளைகளே , நாட்டுல எல்லா பயலும் குடிகாரனா மாறிட்டான்… ஆனா , நீங்க மட்டும் தான் இன்னும் மாறவில்லை… நாங்கள் ஆட்சி வந்தால் அதுக்கும் ஆவண செய்வோம்..ஆங்… என்று கூற, காளைகள் மிரண்டு வேறு பக்கம் ஓடுகின்றன.
மதிமுக தலைவர் வைகோ காளைகளின் முன்பு ஆவேசமாக பேசுகிறார் “இலங்கையில் எனது தம்பி பீரங்கிக்கு முன்னால் நின்று அன்று கொக்கரித்தானே, அதே நினைவு தான் எனக்கும் வருகிறது…. காளைகளின் கொம்புகள் இரண்டும் பீரங்கிகள் போல எனது கண்ணுக்கு தெரிகிறது… இந்த கொம்புகள் கிழித்தால், செங்குருதி பீறிட்டு வரும்,… அந்த செங்குருதியின் வீரியம் பச்சை தமிழனின் பண்பாடு. ” ..இதனை கேட்ட காளைகள் மிரண்டு பின்னங்கால் பிடரியில் தெறிக்க வாடிவாசல் வந்த வழியே திரும்பி ஓடிவிட்டன…
பாமக இளைஞர் அணித்தலைவர் அன்புமணி காளைகளிடம் பேசும்போது ” நான் இப்பதான் ஆஸ்பத்திரியில் இருந்து வந்திருக்கிறேன், இங்கே யாரும் தமிழன் கிடையாது… நான் மட்டுமே தமிழன்… ஒருவருக்கு ஸ்டெடியா நிக்க முடியவில்லை… இன்னொருவருக்கு ஞாபகம் சுத்தமாக அவுட்டாம்.. ஆக கடைசியில் மிஞ்சுவது நானும் எங்க அப்பாவும் தான்… நாங்கள் காளைகளை அடக்குவது மட்டும் அல்ல.. காளைகள் குத்தி கிழித்தால், அந்த இளைஞர்களுக்கு தையல் போடும் அளவுக்கு இந்த தமிழகத்தில் படித்தவர்கள் நானும் எங்க அப்பாவும் தான்… ஆகையால் எங்களுக்கே உங்கள் ஒட்டு என்று நினைவு படுத்த தான் வீடுவாசல் விட்டு இந்த வாடிவாசல் வரை வந்தேன் என்று சொல்ல அவரது பேச்சை கேட்ட காளைகளை அங்கிருந்த மரங்களை குத்தி சாய்த்தன.
இத்தனை களேபரங்களையும் பார்த்த செயல் தலைவர் தளபதி ஸ்டாலின், வேட்டிய மடிச்சு கட்டி, பெருசா பில்டப்பு கொடுக்கிறார்… அப்புறம் திடீரென ஒரு வெள்ளை துண்டை எடுத்து கையில் ஆட்டிக்கொண்டே பாட ஆரம்பித்துவிடுகிறார்… ” பேச்சி பேச்சி , நீ பெருமையுள்ள பேச்சி …பேச்சி பேச்சி நீ அருமையுள்ள பேச்சி… வாடி வாடி வாடி என்னுடைய பேச்சி… வாடிவாசல் வந்த என்னை தாலாட்டு பேச்சி…… ” .பாட்டை கேட்டு மயங்கிய காளைகள் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்து நிற்கும் போது கூட்டத்தில் விசில் பறக்கிறது… ” கடைசில பாருப்பா, தலீவரு புள்ளை தான் சூதகமா காளையை அடக்கிபுட்டாரு… யாருடைய புள்ளை …அதனால கப்பு அவருக்கே…..” இந்நிலையில் திடீரெனெ உள்ளே புகுந்த அழகிரியின், கனிமொழியும் காளைகளை மிரட்டி ஓட விட்டு விடுகின்றனர். ஸ்டாலின் ஏமாற்றமடைகிறார்.
கடைசியாக தென்னாட்டு வீரமங்கை வேலு நாச்சியார் சின்னம்மா வரும்போது எல்லா காளைகளும் சின்னம்மா காலில் விழுந்து நீங்கதான் முதல்வராக வேண்டும் என்று மா மா சின்னம்மா என்று கத்துகின்றன. சின்னம்மா வெற்றிக்களிப்புடன் புன்னகைக்கிறார்.
பார்வையாளர்கள் அனைவரும் இதை ஆச்சரியமாக பார்த்து மூக்கில் விரலை வைக்க பக்கத்தில் இருந்த ஓபிஎஸ் மனதில் நினைக்கிறார் ” நான், தம்பிதுரை ,பொன்னையன் மூணு பேரும் இந்த மாடுகளுக்கு பல நாள் பயிற்சி கொடுத்து , ஜல்லிக்கட்டு மாடுகளை அடிமாடுகளாக்கி , சின்னம்மாவை பார்த்தமாத்திரத்தில் மாடுகள் தொபுக்கடீர் என்று காலில் விழும்படி செய்தது நல்ல வேலை இங்கே யாருக்கும் தெரியாது’.
விழா கமிட்டியார் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி கூறி, வெற்றி கோப்பையை சின்னம்மாவிடம் கொடுக்கின்றனர்.
There are no comments yet
Or use one of these social networks