சென்னை: சின்னம்மா விரைவில் முதல்வராக பதவி ஏற்க உள்ளதாக செய்திகள் உலா வரத்தொடங்கியுள்ளன. டிராக்கி’யஸ்டமி’ சிகிச்சை அளித்து ஜெயலலிதாவை விண்ணுலகுக்கு அனுப்பிய கையுடன், ரைமிங் அண்டு டைமிங்காக, அஷ்டமி, நவமி முடிந்து வளர்பிறை தசமி தினத்தன்று தமிழக முதல்வராக சசிகலா பதவியேற்க உள்ளாராம். தை பூசத்திற்கு முதலில் பதவியேற்கலாம் என்று ஜோதிடர்கள் நாள் குறித்து கொடுத்துள்ளார்களாம். ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா நியமனம் செய்யப்பட்டார். அதன் பின்னர் முதல் முறையாக கடந்த மாதம் 27ஆம் தேதி கட்சியின் தலைமை அலுவலகத்தில் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற்றது.
பிப் 5 ஞாயிற்றுக் கிழமை நடைபெறவிருக்கும் அவசர கூட்டத்தில், அதிமுக முன்னணி நிர்வாகிகள் சின்னம்மாவை முதல்வராக பதவி ஏற்க துரிதப்படுத்துவார்கள் என்று தெரிகிறது. முதல்வராக பொறுப்பேற்கும்போது எதிர்ப்பு இருக்க கூடாது என நினைக்கும் சசிகலா, தனது எதிர்ப்பாளர்களுக்கு திடீரென பதவிகளை ஒதுக்கியுள்ளார். மேலும், அதிகாரம் கையில் இருந்தால்தான் மக்களைக் கவர முடியும். பன்னீர் செல்வத்தைத் தொடர அனுமதிப்பது, தனது அரசியல் வாழ்க்கைக்கு தானே குழிதோண்டுவதைப் போல ஆகிவிடும் என்று சசிகலா கருதுகிறார். அதனால்தான், எவ்வளவு விரைவில், அத்தனை அதிகாரங்களையும் தன் வசப்படுத்த முடியுமோ அவ்வளவு விரைவில் தான் அரசியலில் காலூன்ற முடியும் என்று நம்புகிறார். இதற்கு முதலில் அச்சாரம் போட்டவர் சபாநாயகர் தம்பிதுரை. அதிமுக போன்ற பெரிய கட்சியில் பொதுச்செயலாளர் பதவியும், முதல்வர் பொறுப்பும் ஒரே தலைவரால் ஏற்கப்படவேண்டும் என்று தம்பிதுரை சென்ற மாதமேஒத்து ஊதியது நினைவிருக்கலாம்.
இப்பொழுதெல்லாம் அதிமுக வை சார்ந்த ஜெயா டிவியில் இன்னொரு சின்னம்மாவை உருவாக்கி கொண்டிருக்கிறார்கள் அதாவது எம்.ஜி.ஆர் உடன் ஜெயலலிதா நடித்த படங்களைப் போடாமல், எம்.ஜி.ஆர் உடன் சரோஜாதேவி நடித்த பாடல்களை ஒளிபரப்பி கொண்டிருக்கிறார்கள்! விரைவில் சின்னம்மா முதல்வரானதும், ஜெயலலிதா பாடல்களில் சின்னம்மாவின் முகத்தை மார்பிங் செய்து ஒளிபரப்ப இருக்கிறார்கள் என்றும். “சின்னம்மாவே வா சீரிய சிறந்த ஆட்சி தா. தமிழகத்தின் நிரந்தர முதல்வர் சின்னம்மா வாழ்க பல்லாண்டு, ஆட்சி தருக பல்லாயிரத்தாண்டு” என சிவகாசியில் போஸ்டர்கள் தயாராகி வருவதாக கப்ஸா நிருபர் துப்பறிந்துள்ளார்.
அதிமுகவிலிருந்து உடைந்து வரும் அல்லது கோபத்தில் இருக்கும் எம்.எல்.ஏ.களைக் கொண்டு ஆட்சி அமைக்க திமுக தயாராகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா மூலம் அதிருப்தியாளர்களை ஈர்த்து பிறகு, திமுக ஆட்சியமைக்க நடவடிக்கைகளில் இறங்கினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்கிறார்கள். கட்சித் தாவல் காரணமாக, இப்போது ஆட்சி கலைந்து பொதுத்தேர்தல் நடந்தால் அது அதிமுகவுக்கு எதிரானதாகவே அமையும் என்பது கள நிலவரம். எனவே இப்படி நடந்தால், திமுகவுக்கு பெரும் லாபம் என்கிறார்கள். இதைக்கேட்டு சின்னம்மாவின் ஆதரவாளரான சின்னப்புத்தி சின்னம்மாதாசன் என்ற தொண்டர் தலைமையில் 108 தொண்டர்கள் பிப். 5 அன்று மாலை நாக்கில் அலகு குத்தி “கடவுளே ஓபிஎஸ்ஸை டிஸ்மிஸ் பண்ணிடு, ஒருவேளை சின்னம்மா ஓபிஎஸ்ஸை முதல்வராக தொடர சொல்லிட்டா, ஓபிஎஸ்ஸை இப்ப தீவிரமா ஆதரிக்கிற திமுகவினர் தங்கள் கட்சியை கலைத்து விட்டு செயல் தலைவர் ஸ்டாலின் உள்பட அவர் பின்னால் அணிவகுத்து விடலாம். பிறகு தமிழர்கள் பிழைப்பு நாதியற்று விடும், விபரீதம் நிகழாமல் நீங்க தான் காப்பாத்தனும்” என சின்னம்மா படத்துக்கு 1008 தேங்காய் உடைத்து அடிமைகள் திமுக அலுவலக வாசலில் வழிபட உள்ளதாக தெரிகிறது.
There are no comments yet
Or use one of these social networks