சென்னை: தமிழக முதல்வராக ஓ.பி.எஸ் மூன்றாவது முறையாக பதவி வகித்து வந்த நிலையில், ‘திடீர்’ பொதுக்குழுவில் சசிகலா பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டார். தம்பிதுரை உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் சசிகலாவே முதல்வர் பதவியும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று போர்க்கொடி தூக்கினர். ஆனால் மத்தியில் உள்ள பாஜக ஓ.பி.எஸ் முதல்வராக தொடரவே மறைமுக ஆதரவு தெரிவித்தது. முதன்முறையாக ஜெயலலிதா டான்சி வழக்கில் தண்டனை பெற்றபோது 2001 ஆம் ஆண்டு பன்னீர்செல்வம் முதல்வர் பதவி ஏற்றார். மீண்டும் 2014 இல் சொத்து குவிப்பு வழக்கில் உள்ளே சென்ற போது இரண்டாவது முறையாக முதல்வரானார். ஜெயலலிதா மரணமடைந்தவுடன் மூன்றாவது முறையாக பதவி ஏற்றார். பிப். 5 அன்று சின்னம்மா முதல்வராக ‘தீர்மானம்’ நிறைவற்றப்பட்டு ஓ.பி.எஸ் ‘மானம்’ காற்றில் விடப்பட்டுள்ளது. மூன்று முறையும் மொத்தம் 449 நாட்கள் இடைக்கால முதல்வராக காலம் கழித்துள்ளார். மூன்று முறையும் கட்சி தலைமை உத்தரவின் பேரில் பன்னீர்செல்வம் தனது பதவியை தாரை வார்த்துள்ளார்.

சிரித்துக் கொண்டே முதல்வர் பதவியை விட்டுக் கொடுத்த முதல் முதல்வர் என்ற பெருமையைப் பெற்ற ஓ.பி.எஸ் நமது கப்ஸா நிருபருக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: “மனசுக்குள் அழுது கொண்டே சிரித்த முகத்துடன் எனது பதவியை சின்னம்மாவுக்கு விட்டுக் கொடுத்துள்ளேன். இன்னும் கொஞ்ச நாளில் தமிழ்நாட்டு நிலைமையே சிரிப்பா சிரிக்கும் பாருங்க.. நான் ‘இடை’க்கால முதல்வராக பிறக்க சபிக்கப்பட்டவன். மாநகரப் பேருந்தில் லேடீஸ் சீட்டுல உட்கார்ந்த ஆண் பயணி மாதிரி, பெண்கள் வந்தால் எழுந்து கொள்வேன்.. மீண்டும் சின்னம்மா கைது செய்யப்பட்டால் தற்காலிக முதல்வராவேன், அதுவரை அமைதியாக வாயில் கறுப்புத்துணி கட்டி அதிமுகவில் கூன்பாண்டியனாக களப்பணி ஆற்றுவேன். இந்த பன்னீர் சோடா மீண்டும் பாட்டிலுக்குள் அடைக்கப்பட்டு விட்டது. அதில் உள்ள ‘கோலி’ சின்னம்மா. பன்னீர் சொம்பு கல்யாண மண்டப வாசலோடு சரி. என்னுடைய ராசி என்னன்னா, நான் பதவியை விட்டுக் கொடுத்தால், பதிவிக்கு வருபவர்கள் ஒன்னு உள்ளே போகணும். இல்லேன்னா மேலே போகணும். அம்மா மாதிரியே சின்னம்மா மேக்கப் போட்டார், வாட்ச், புடவை அணிந்தார், கொண்டையைப் போட்டார், மண்டையையும் போட வாய்ப்பிருக்கு, எதிர்பாருங்கள்.” என்றார்.

பகிர்

There are no comments yet