சென்னை: மெரினாவில் உள்ள மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தில் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கண்மூடி தியானம் செய்தது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முதல்வர் பன்னீர் செல்வம் மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் செவ்வாய் கிழமை இரவு 9 மணிக்கு திடீரென சென்றார். ஜெ., சமாதி முன் 40 நிமிடங்களுக்கு அமைதியாக கண்மூடி அமர்ந்து தியானம் செய்தார். “என்னை கட்டாயப்படுத்தி ராஜினாமா கடிதத்தில் கையெழுத்து வாங்கினார்கள்.முதல்வர் பதவியை விரும்பாத என்னை முதல்வராக்கி அவமானப்படுத்தி விட்டனர். அ.தி.மு.க., சட்டசபை கூட்டத்திற்கு என்னை அழைக்கவில்லை. அவர்களே அனைத்து பணிகளை முடித்து விட்டு என்னை குறிப்பிட்டு என்னிடம் கூறினார்கள். நான் அவர்களுடன் பொறுமையாக நீண்ட நேரம் விவாதித்தேன். 2 முறை என்னை முதல்வராக அடையாளம் காட்டியவர் ஜெயலலிதா. தற்போது, உங்களை தவிர்த்து வேறு ஒருவரை முதல்வர் ஆக்கினால் கட்சிக்கும் ஆட்சிக்கும் பங்கம் விளையும் என சொன்னார்கள். அதனால், முதல்வர் பதவியை ஏற்றேன். என்னை பொறுத்தவரை நான் முதல்வர் ஆக வேண்டும் என விரும்பவில்லை சின்னம்மா ஆனாலும் பரவாயில்லை.. அ.தி.மு.க., தொண்டர்கள், மக்கள் விரும்பும் ஒருவரே முதல்வராக பதவி ஏற்க வேண்டும். தமிழகத்தை காப்பாற்ற தனித்து போட்டியிடுவேன். மக்கள் விரும்பினால் ராஜினாமாவை திரும்ப பெறுவேன்.” இவ்வாறு அவர் பேசினார்.

நமது கப்ஸா நிருபர் விசாரித்ததில் இந்த ‘தியான தர்ணா’ வின் பின்னணியில் சின்னம்மா உள்ளது தெரிய வந்துள்ளது. பன்னீர்செல்வம் தனியாக கப்ஸா நிருபரிடம் “தொண்டர்கள் யாரை விரும்புகிறார்களோ அவரே பொதுச்செயலராகவும் முதல்வராகவும் வரவேண்டும். அதாவது சின்னம்மா தான் முதல்வராக வேண்டும். அதிமுகவின் அடிமட்ட தொண்டர்கள் சின்னம்மாவை ஏற்கவில்லை, தீபாவின் வீட்டு பால்கனி முன்பு முகாமிட்டுள்ளனர். அவர்களை திசை திருப்பி, அதிமுக பக்க இழுக்க நாங்கள் நடத்திய நாடகம் தான் இது. ஜெயா. சசி. ஓபிஎஸ் – இது ஊழல் கூட்டணி. (ஜெயா.. நல்லவர். சசியால் கெட்டுப்போனார் என்ற கட்டுக்கதை போல் ஓபிஎஸ் நல்லவர் என்பதும் கட்டுக்கதை) ஒரு ஊழல் கட்சி தமிழ்நாட்டை ஆளும் போது தலைவர் இறந்து விட்டார். அந்த ஊழலில திளைக்கவும், அதிகாரத்தை கைப்பற்றவும் கூட்டாளிகளுக்குள் கூப்பாடு. எப்போதும் பேசாத ஓபிஎஸ் இப்போது பேசுவதன் காரணம் பா.ஜ.க ஆதரவு. அவ்வளவு தான். கருணாநிதிக்கு மட்டும் தான் கபட நாடகம் போடத் தெரியுமா? என்று பொரிந்து தள்ளினார்.

பகிர்

There are no comments yet