திருச்சி: திருச்சியில் நடந்த மறைந்த ராமஜெயத்தின் மகள் ஸ்ரீஜனனி – டாக்டர் விவேக் திருமண விழாவில் நாட்டு நடப்பையும், அரசியல் சூழலையும் வைத்து கதை சொல்லி கல்யாண வீட்டை கலகலப்பாக்கியதோடு கருணாநிதி – சின்னம்மா இருவரது மானத்தையும் கப்பல் ஏற்றினார் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின். திருமண விழாவில் அரசியல் பேசவில்லை என்று கூறி விட்டு அரசியலைத் தொட்டு குட்டிக் கதை சொல்லி அரசியல் அநாகரிகத்தை அரங்கேற்றினார். “கிராமத்தில் ஒரு ஆறு இருக்கிறது. அந்த ஆற்றில் ஐந்தாறு வருடமாக தண்ணீர் இல்லை, வறண்டு போய் கிடக்கிறது. அந்த ஆற்றில் ஒரு பெரிய மா மரம் சரிந்து கிடக்கிறது. (தமிழர்களே தமிழர்களே நீங்கள் என்னை கடலில் தூக்கிப் போட்டாலும் கட்டுமரமாகத்தான் மிதப்பேன், கவிழ்ந்துவிட மாட்டேன் என் கருணாநிதி சொன்னது நினைவுக்கு வருகிறதா? அதேதான் இந்த பெரிய மாமரம்.)

ஆற்றில் தண்ணீர் ஓடிய காலத்தில் எல்லாம் கிராம மக்கள் இக்கரையில் இருந்து அக்கரைக்கு செல்ல அந்த மரத்தை தான் ஒரு பாலமாக பயன்படுத்தி வந்தனர். ஆனால் ஆற்றில் தண்ணீரே இல்லாமல் பாலைவனமாக காட்சி அளித்ததால் கிராமமக்கள் வெயிலில் நடந்தே சென்று வேதனைகளை தாங்கி கொண்டு ஆற்றை கடந்து சென்று வந்தனர். இப்படிப்பட்ட நிலையில் ஒரு நாள் திடீரென ஆற்றில் பெருவெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இந்த வெள்ளத்தில் சரிந்து கிடந்த பெரிய மா மரம் காணாமல் போய்விட்டது. அது வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதா? (வர்தா புயலின் போது கருணாநிதி காவேரி மருத்துவமனை சென்றதை சொல்கிறார் )அல்லது எப்படி காணாமல் போனது என மர்மமாக இருந்தது. இந்த நேரத்தில் கிராம மக்கள் ஆற்றை கடந்து செல்ல சின்ன மா மரம் போன்ற ஒன்று கிடைத்தது. (சசிகலாவை சின்னம்மா என்று சொல்வதை நக்கலடிக்கிறார்) அதன் மீது கிராம மக்களில் சிலர் ஏறினார்கள். நடு ஆற்றில் சென்ற போது தான் அது சின்ன மா மரம் அல்ல. ஒரு முதலையின் முதுகு என தெரியவந்தது. இதனால் அதில் ஏறி இருந்தவர்களுக்கு பயம் வந்து விட்டது. ஆபத்தில் இருந்து காப்பாற்றும்படி சத்தம் போட்டார்கள். (இது ஜல்லிக்கட்டு போராட்டக் கூச்சலாம்) அப்போது ஆற்றின் கரையில் இருந்தவர்கள் கவலைப்படாதீர்கள். நீங்கள் தெரியாமல் முதலை மீது ஏறி விட்டீர்கள். ஒரு நல்ல படகு வரும் அதில் ஏறி நாங்கள் கரையை கடப்போம். அதுவரை முதலையிடம் இருந்து தப்பி நீங்கள் உயிரோடு இருந்தால் உங்களையும் அந்த படகில் ஏற்றி கொண்டு போய் கரை சேர்ப்போம் என கூறினார்கள். (ஸ்டாலின் கரையில் கறை படிந்த கைகளோடு காத்திருக்கிறாராம்.)

கதையை கூறி முடித்த ஸ்டாலின் கப்சா நிருபரிடம் விட்ட கதை வருமாறு: யாரையும் குறிப்பிட்டு நான் இதனை கூறவில்லை. இது சின்ன(ம்மா) கதை. இதனை அரசியலோடு நீங்கள் கலந்தால் அதற்கு நான் பொறுப்பு அல்ல என கேட்டுக்கொள்ள கடமைப்பட்டு இருக்கிறேன் என்று கூறி திருமணத்திற்கு வந்தவர்களைப் பார்த்து கண்ணடித்தார். முன்பு படையப்பா திரைப்படத்தில் ஜெயலலிதாவை வில்லியாக சித்தரித்து ரஜினி ‘அதிகமா கோபப்பட்ட பொம்பளையும், அதிகமா ஆசைப்பட்ட ஆம்பளையும் நல்லா வாழ்ந்ததா சரித்திரமே இல்லை’ என்று வசனம் பேசினார். ஆனாலும் ஜெயலலிதா வாழ்ந்து காட்டினார், மீண்டும் தேர்தலில் ஜெயித்துக் காட்டினார். அதுபோல் முதலையாக வர்ணிக்கப்பட்ட சின்னம்மாவும் முதல்வராக ஜெயித்துக் காட்டிவிடுவாரோ என பயமாக இருக்கிறது” என்று கலங்கியபடி கர்சீப்பை முகத்தில் வைத்து மறைத்துக் கொண்டு விடை பெற்றார் ஸ்டாலின்.

பகிர்

There are no comments yet