ன்னை: திமுகவைச் சேர்ந்த 22 எம்.எல்.ஏ.,க்களுடன் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் சார்பில் பேசப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால், மகாபலிபுரத்தில் விடுதியில் தங்கியுள்ள சட்டப் பேரவை உறுப்பினர்களின் செல்லிடப்பேசி எண்கள், பேச்சுகள் உள்ளிட்ட அனைத்தும் தீவிர கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.

அதிமுக பொதுச் செயலர் வி.கே. சசிகலாவுக்கு ஆதரவு தெரிவிக்கும் சட்டப் பேரவை உறுப்பினர்கள் 127 பேர் பேருந்து மூலமாக, மகாபலிபுரத்தில் உள்ள தனியார் விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் தரப்பினர் தொடர்பு கொள்ளாமல் இருக்க, கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு சசிகலா தரப்பில் இருந்து நெருக்கடி அதிகரித்ததாகவும், இதைத் தொடர்ந்து அவர் கட்சியை உடைக்கும் வேலையை கடந்த சில வாரங்களில் இருந்தே தொடங்கியதாகவும் அதிமுக வட்டாரங்கள் கூறுகின்றன. மூத்த நிர்வாகிகள் யார் யாரெல்லாம் சசிகலாவுக்கு எதிராக இருக்கிறார்கள் என்பதை அறிந்து அவர்கள் மூலமாக முதலில் எதிர்ப்பு அலைகளை உருவாக்கினார் எனவும் தெரிவிக்கின்றன. இதன் ஒருகட்டமாக, சட்டப் பேரவை முன்னாள் தலைவர் பி.எச்.பாண்டியன், முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்த அதிரடித் தகவல்களை வெளியிட்டார். அவர் பேட்டி அளித்த அன்றைய தினத்தின் இரவே முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேட்டி அளித்து நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்.

இந்தப் பணிகள் அனைத்தும் ஒரு நாள், இரண்டு நாள்களில் நடைபெறவில்லை எனவும், கடந்த சில வாரங்களாக நன்கு திட்டமிடப்பட்டு செய்யப்பட்டதாகவும் அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சசிகலாவுக்கு எந்தெந்த எம்.எல்.ஏ.க்கள் எதிர்ப்பாக இருக்கிறார்கள் என்பது குறித்த தகவல்கள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மூலமாக எடுக்கப்பட்டன. அதில், சுமார் 22 சட்டப் பேரவை உறுப்பினர்கள் வரை சசிகலாவுக்கு எதிரான மனநிலையில் இருப்பதாகத் தெரிய வந்தது. இந்த உறுப்பினர்கள் அனைவரிடமும் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன்கள், முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதனின் மகன் ஆகியோர் செல்லிடப்பேசி மூலமாகப் பேசியுள்ளனர். இந்தப் பேச்சுவார்த்தை விவரங்களை போயஸ் கார்டன் தரப்பு உன்னிப்புடன் கவனித்து வந்துள்ளது. இதைத் தொடர்ந்து, திமுக தரப்பினரும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பை அணுக முயற்சித்துள்ளது.

மேலும், சட்டப் பேரவையில் எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகனின் பேச்சு, முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் அணுகுமுறை ஆகியவற்றையும் போயஸ் கார்டன் தரப்பு முற்றுலுமாக ரசிக்கவில்லை. இவற்றுக்கெல்லாம் ஒரு “செக்’ வைக்கும் வகையில், நானே முதல்வர் என்ற அஸ்திரத்தை சசிகலா திடீரென எடுத்தார். இதனால், ஆடிப்போன ஓ.பன்னீர்செல்வம் தரப்பு தாமதமாகச் செய்யலாம் என்றிருந்த கட்சி உடைப்பு வேலையை இப்போது உடனடியாகத் தொடங்கியுள்ளதாக அதிமுக தரப்பினர் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், அதிமுகவில் இருந்து விரட்டப்பட்டவர்கள், தேர்தலில் தோற்ற வேட்பாளர்கள், சீட் கிடைக்காத முன்னாள் எம்எல்ஏக்கள் 5-பேர் இன்று ஓபிஎஸ் வீடு தேடி ஆதரவு தெரிவித்தனர். இதையடுத்து திருவாரூர் எம்எல்ஏவும் பன்னீருக்கு ஆதரவு அளித்துள்ளதாக நம்பத்தகாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

There are no comments yet