முதல்வராக்கினால் மெரினாவில் தடுப்பு சுவர் எழுப்பி நிரந்தரமாக பீச்சுக்கு ‘லீவு’ விட சின்னம்மா முடிவு – கவர்னர் சந்திப்பில் அதிரடி

384

சென்னை மெரினா மற்றும் கோவை வ.உ.சி மைதானம் உள்ளிட்ட இடங்களில், ஓ.பன்னீசெல்வம் முதல்வராகத் தொடர வேண்டும் என்பதை வலியுறுத்தி மாணவர்கள் போராட்டம் நடத்தப் போவதாக சமூக வலைதளங்களில் செய்தி பரவி வருகிறது. போராட்டம் நடத்தப்போவதாகப் பரவி வரும் தகவலைத் தொடர்ந்து சென்னை முழுவதும் 10,000 போலீஸார், பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அதுமட்டுமன்றி முன்னேற்பாடாக சமுதாய நலக்கூடம், திருமண மண்டபங்களை காவல்துறை வாடகைக்கு எடுத்துள்ளது. ஜல்லிக்கட்டு மற்றும் தமிழர் பண்பாட்டை மீட்டெடுக்க மாணவர் போராட்டம் மெரினாவில் வெற்றிகரமாக நடத்தப்பட்டு, கலவரத்தில் முடிந்தது. பின்னர் தமிழக முதல்வர் பன்னீர்செல்வம் சசிகலாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கும் முன்பு 40 நிமிடங்கள் அம்மா சமாதியில் தியான தர்ணா என்ற புதிய வகை போராட்டத்தை அறிமுகம் செய்தார்.

மெரினா என்பது, ‘பிரச்சினையுடன் வாங்க தீர்வோட போங்க’ என்ற சுலோகத்துக்கு இணங்க ஒரு போராட்டக் களமாக மாறிவிட்டால், எதிர்காலத்தில் ஹோம் ஒர்க் செய்யவில்லை என்று ஆசிரியர் கண்டித்தால் பள்ளி மாணவர்கள் போராட்டம் செய்யும் நிலை வந்துவிடக்கூடாது என்று சின்னம்மா கலங்கிப் போயுள்ளதாக அதிமுக பட்சி கூறுகிறது. இதற்கிடையை கவர்னர் சென்னை திரும்பியதால், அவரைச் சந்திக்கும் பொருட்டு, அ.தி.மு.க. பொது செயலாளர் சசிகலா பன்னீர்செல்வத்தை ‘ஈ அடிச்சான் காப்பி’ அடித்து மெரீனாவில் உள்ள மறைந்த முதல் அமைச்சர் ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். அவரது வருகையினை அடுத்து மெரீனாவில் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். மெரீனாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் சசிகலா மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். அதன்பின் அவர், ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் பட்டியலை அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டரை கோயிலில் அர்ச்சனை செய்வது போல் ஜெயலலிதா நினைவிடத்தில் வைத்து மரியாதை செலுத்தினார். எம்.ஜி.ஆர். நினைவிடத்திலும் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். அதன்பின் அவர் ஆட்சி அமைக்க கவர்னரிடம் உரிமை கோருவதற்காக கவர்னர் மாளிகைக்கு சசிகலா புறப்பட்டு சென்று கவர்னர் வித்யாசாகர் ராவை சந்தித்து பேசினார். கவர்னரிடம் ஆதரவு எம்.எல்.ஏக்கள் பட்டியலை வழங்கினார். சசிகலாவுடன் திண்டுக்கல் சீனிவாசன், எடப்பாடிபழனிசாமி, தங்கமணி, பாண்டியராஜன், ஜெயக்குமார், அன்பழகன், உள்ளிட்ட 10 அமைச்சர்கள் உடன் இருந்தனர்.

தனக்கு வழங்கப்பட்ட சந்திப்பு நேரமான ‘ஏழரை’ மணிக்கு கவர்னரை சந்தித்து விட்டு சின்னம்மா கப்ஸா நிருபருக்கு பேட்டி அளித்தார். “அக்கா ஆட்சிக் காலத்தில் காவல் துறைக்கு நிறைய சலுகைகள் அறிவித்தார்கள், காவல் துறைக்கு நல்ல பெயரும் இருந்தது. ஆனால் இந்த மெரினா போராட்டத்தால், காவல் துறை மெரீனாவில் அடிக்கடி காத்து வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.. அவர்களது சக்தி வீணடிக்கப்படுகிறது. உலகின் இரண்டாவது நீளமான மெரினா கடற்கரை ‘இரண்டும் கெட்டான்’ கடற்கரையாக மாறிவிட்டது. எனவே என்னை முதல்வர் ஆக்கினால் பெர்லின் சுவர், சீனப் பெருஞ்சுவர் போல மெரினாவில் நிரந்தர தடுப்பு சுவர் எழுப்பி, காலவரையற்ற விடுமுறை அல்லது நிரந்தரமாக மூடிவிட கவர்னரிடம் ஆலோசித்தோம்” என்றார்.

பகிர்

There are no comments yet