சென்னை: ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அமர்ந்து ஓ.பன்னீர் செல்வம் நடத்திய மவுனப்புரட்சி தமிழக அரசியல் களத்தையே கிடுகிடுக்க வைத்துள்ளது. ஆளுங்கட்சியாக இருந்தாலும் அரியணையில் அமரப்போவது யார் என்பதுதான் இப்போதைய கேள்வி. சசிகலா முதல்வராகக்கூடாது என்று தொண்டர்கள் நினைத்தாலும் நிர்வாகிகள் அதிமுக எம்எல்ஏக்கள், எம்பிக்கள் சசிகலா முதல்வராக வேண்டும் என்று விரும்புகின்றனர். நான் முதல்வராக பதவியேற்பேன் என்று உறுதியாக கூறி வருகிறார் சசிகலா. அதற்கேற்ப காய் நகர்த்த தொடங்கியுள்ளார்.

கடந்த 2016 சட்டப்பேரவைத் தேர்தல் மொத்தமுள்ள 234 தொகுதிகளில் 227 தொகுதிகளில் அதிமுக தனித்து போட்டியிட்டது. மீதமுள்ள 7 இடங்களில் அதன் கூட்டணி கட்சிகள் போட்டியிட்டன. அக்கட்சி வேட்பாள்கள் கூட அதிமுக-வின் இரட்டை இலை சின்னத்திலேயே களமிறக்கப்பட்டனர்.

மனித நேய ஜனநாயக கட்சி 2 இடங்களிலும், இந்திய குடியரசு கட்சி, சமத்துவ மக்கள் கட்சி, கொங்குநாடு இளைஞர் பேரவை, முக்குலத்தோர் புலிகள் படை, தமிழ் மாநில முஸ்லிம் லீக் தலா 1 இடங்களிலும் போட்டியிட்டன. இவர்கள் அனைவரும் அதிமுக-வின் இரட்டை இலை சின்னத்திலேயே களம் கண்டனர். இதில் முக்குலத்தார் புலிகள் படை நடிகர் கருணாஸ், கொங்குநாடு இளைஞர் பேரவை தனியரசு, மனித நேய ஜனநாயக கட்சியில் தமிமுன் அன்சாரி ஆகியோர் வெற்றி பெற்றனர்.

இந்நிலையில், யாருக்கு ஆதரவு அளிப்பது என்பது குறித்து நாளை நடைபெறும் மனித நேய ஜனநாயக கட்சி நிர்வாகக் குழு கூட்டத்தில் அறிவிக்கப்படும் என தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளார்.

திருவாடனை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி கண்ட முக்குலத்தோர் புலிப்படை அமைப்பின் தலைவராக உள்ள கருணாஸ் யாருக்கு ஆதரவளிக்கிறார் என்பது குறித்து இதுவரை தெரிவிக்கவில்லை. அதேபோல், தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு இரட்டை இலை சின்னத்திலேயே காங்கேயம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவரும் இதுவரை யாருக்கு ஆதரவு தெரிவிக்கிறார் என்பது குறித்து தெரிவிக்கவில்லை.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் 8 எம்எல்ஏக்களின் ஆதரவை பெற திருநாவுக்கரசர் மூலம் முயற்சி செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து மேல் ‘மட்ட’ காங்கிரஸ் தலைவர் கூறும்போது திருநாவுக்கரசரை ராகுல் காந்தி அழைத்து பேசியுள்ளார். தேவை ஏற்பட்டால் சின்னமாவுக்கு காங்கிரஸ் ஆதரவு தர முடிவு செய்துள்ளது என்று டெல்லி வட்டாரங்களில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. திருநாவுக்கரசர் தந்து பழைய அதிமுக பாசத்தை இப்போது வெளிப்படுத்தியுள்ளார் என்று கூறினார்.

There are no comments yet