சென்னை: அப்போலோ மருத்துவமனையில் கடந்த நான்கு நாட்களாக சிகிச்சை பெற்றுவந்த சசிகலாவின் கணவர் ம.நடராசன் டிஸ்சார்ஜ் ஆனார். சசிகலாவை அ.தி.மு.க-வின் சட்டமன்ற கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுத்தனர் அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள். அப்போது பெசன்ட் நகர் இல்லத்தில் இருந்தார் ம. நடராசன். கார்டனில் இருந்து அவரைத் தொடர்பு கொண்டு பேசியவர்கள், “சசிகலா நாளை முதல்வராகப் பதவியேற்க உள்ளார்” என்று சொன்னதும், அதைக்கேட்டு நடராசன் சந்தோஷத்தின் உச்சத்துக்கே சென்றுள்ளார். ‘நீண்ட நாள் கனவு நிறைவேறியதுபோல அவரது கண்களில் ஆனந்தக் கண்ணீர் பளிச்சிட்டுள்ளதாம். அதீத சந்தோஷம் ஏற்பட்ட சிறிது நேரத்தில் உயர் ரத்த அழுத்தம் ஏற்பட்டதால் மயக்க நிலையை அடைந்துள்ளார் நடராசன். அவரை அவசரமாக க்ரீம்ஸ் ரோட்டில் உள்ள அப்போலோ மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்கள்.

கண்விழித்த நடராசன் சினிமாவில் வருவது போல் “நான் எங்கிருக்கேன், என்ன இடம் இது, பன்னீருக்கு வெந்நீர் ஊற்ற வேண்டும், என்னை விடுங்கள்” என்று கை, வாய். மூக்கில் இருந்த டியூப்புகளை பிடுங்கி எறிந்ததாக கப்ஸா நிருபர் தெரிவித்தார்.. நடராசனை பரிசோதனை செய்த மருத்துவர்கள் மூளைக்குச் செல்லும் இரத்தநாளம் ஒன்றில் சிறு அடைப்பு இருப்பதாகவும் அதை சரி செய்ய ‘ஸ்டன்ட்’ பொருத்தவேண்டும் என்றார்கள். இது தொடர்பான சிகிச்சையை நரம்பியல் நிபுணர் மீனாட்சி சுந்தரம் கவனித்து வந்தார். நடராசனுக்கு கல்லீரலில் சிறு பிரச்னை இருந்துள்ளது. இது தொடர்பான சிகிச்சையை வயிறு மற்றும் இரைப்பை நிபுணர் பழனிச்சாமி கவனித்துவந்தார். இந்த நிலையில்தான் முதல்வர் பன்னீரசெல்வம் சசிகலாவுக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கினார். அதன் தொடர்ச்சியாக அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் இரண்டு அணிகளாகப் பிரிந்து நிற்கின்றார்கள். ஆட்சி அமைக்கப் போவது யார் என்ற பரபரப்பு இப்போது ஏற்பட்டுள்ள நிலையில், நடராசன் இல்லாதது சசிகலா தரப்புக்கு பெரும் பின்னடைவாக இருந்தது. இந்த நிலையில் அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த நடராசன் “எனக்கு இப்போது உள்ள அரசியல் சூழ்நிலையில் மருத்துவமனையில் அதிக நாட்கள் தங்கி இருக்க முடியாது. அதனால் இப்போது மருந்து மாத்திரைகள் மட்டும் போதும். என்னை சீக்கிரம் டிஸ்சார்ஜ் செய்யுங்கள்” என்று இரண்டு தினங்களாக தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளார். நடராசனின் இந்தத் தொடர் வற்புறுத்தலால் (ஜெயாவுக்கு உடல் நிலையை மோசமடைய செய்தது போல்) மருந்துகள் மூலம் உடல்நிலையை மருத்துவர்கள் கொஞ்சம் சீராக்கியுள்ளார்கள். மருந்துகள் மூலமே இரத்த நாளத்தில் ஏற்பட்ட அடைப்பை சரிசெய்துள்ளார்கள் மருத்துவர்கள்.

உடல்நிலை கொஞ்சம் முன்னேற்றம் அடைந்துள்ளதால் இன்று மதியம் ராகு காலம் கழித்தவுடன் நல்ல நேரத்தில் மருத்துவமனையில் இருந்து அவரை டிஸ்சார்ஜ் செய்ய உள்ளார்கள். அப்போலோ மருத்துவமனை வட்டாரமும் இதை உறுதி செய்துள்ளது. தமி்ழக அரசியல் குழப்பமான சூழ்நிலையில் இவர் டிஸ்சார்ஜ் உன்னிப்பாகக் கவனிக்கப்பட்டு வருகிறது. அப்பல்லோவில் நமது கப்ஸா நிருபருக்கு நடராசன் அளித்த பேட்டி: சின்னம்மாவின் கணவனான என்னை சித்தப்பா என்று தான் இனி கூப்பிட வேண்டும். நான் மருத்துவர்களுக்கும் லண்டன் டாக்டர் ரிச்சர்டு பீலேவுக்கும் ‘பேச்சுப் பயிற்சி’ கொடுத்து ஜெயா உடல்நிலை குறித்து பேட்டி அளிக்க சொல்லித்தரவே இங்கு வந்தேன். வந்த வேலை சிறப்பாக முடிந்தது. அதற்குள் தமிழக அரசியல் களநிலவரம் கலவரமாகி போயுள்ளது. ஜெயாவுக்கு கொடுத்தது போல் பன்னீருக்கு ‘ஷாக் டிரீட்மெண்ட்’ கொடுக்க வேண்டி அவசரமாக ஒரு ஸ்கெட்ச் தாயாரித்துள்ளேன். கேஸ் ஹிஸ்டரியை தூக்கிப் போட்டுவிட்டு கிளம்பிவிட்டேன். என் மேல் கிரிமினல் கேஸ் வந்தாலும் தமிழ் நாட்டின் ஹிஸ்டரியை மாற்றி எழுதுவேன். சின்னம்மாவை சி.எம் ஆக்கி, இந்த சித்தப்பா அதிமுக பொதுச்செயலாளர் ஆகி, ஓய்வுக்கு ஓய்வு கொடுத்த கருணாநிதி போல், ஊழலுக்கு ஊழி கொடுத்த இன்னொரு கருணாநிதியாக குடும்ப அரசியல் நடத்தி, இந்திய வரைபடத்தில் இருந்து தமிழ்நாட்டு மேப்பை காணாமல் போகச்செய்வேன்..” என்று சூளுரைத்தார். பின்னர் நமது கப்ஸா நிருபர் நடராசன் தங்கி இருந்த வார்டுக்கு சென்று பார்வையிட்டபோது, ‘கஜினி’ படத்தில் வருவது போல், சுவர் எங்கும் சங்கேத குறியீடுகளும், ரகசிய திட்டம் அடங்கிய மேப்பும், பன்னீர் மெரீனா சமாதியில் தியான தர்ணா செய்தபோது வெவ்வேறு ஆங்கிள்களில் எடுத்த புகைப்படங்களும் கிடைத்ததாக கூறினார்.

பகிர்

There are no comments yet