அம்மா அப்பல்லோவில் உப்புமா சாப்பிட்டார்கள் என்று கூறியது போல், இன்று ஓபிஎஸ்ஸை ஆதரிக்கிறேன் – பொன்னையன் விளக்கம்

843

சென்னை: ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த போது செய்தியாளர்களிடம் அதிகமாக பேசியவர் பொன்னையன். ஜெயலலிதா திடீரென மறைந்த போது ஊடகங்களால் கடுமையான விமர்சனத்துக்குள்ளானார் பொன்னையன். சசிகலாவை படுதீவிரமாக ஆதரித்து குரல் கொடுத்தவர் பொன்னையன். அதுவும் ஜெயலலிதாவின் அரசியல் வாரிசு சசிகலா என்று கூறிய அவர் சின்னம்மா என்று வாய்க்கு வாய் கூறினார். கடந்த சில தினங்களுக்கு முன்பு சசிகலாவிற்கு எதிராக ஓபிஎஸ் கலகக்குரல் எழுப்பி வெளியேறினார். அவருக்கு ஆதரவு தெரிவித்து பலரும் ஓபிஎஸ் அணிக்கு சென்று ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அவைத்தலைவர் மதுசூதனன் சென்றார். இன்று பொன்னையன் கிரீன்வேஸ் சாலையில் உள்ள ஓபிஎஸ் இல்லத்தில் நேரில் சந்தித்து தம்முடைய ஆதரவை தெரிவித்தார். செய்தியாளர்களிடம் பேசிய பொன்னையன், அப்பல்லோவில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டிருந்த போது யாரையும் பார்க்க சசிகலா அனுமதிக்கவில்லை என்றார். வாய்க்கு வாய் சின்னம்மா என்று கூறியவர் முதன் முறையாக அழுத்தமாக சசிகலா என்று கூறினார். அண்ணாவைப் போல எளிமையான முதல்வர் என்று திருக்குறளை உதாரணமாக காட்டி பேசினார் பொன்னையன். மக்கள் எளிதில் நெருங்கும் முதல்வர் என்றும், வர்தா புயலின் போது விரைந்து செயல்பட்டவர் என்றும் ஜல்லிக்கட்டு சட்டத்தைக் கொண்டு வந்தவர் என்றும் கூறினார். தொண்டர்கள், ஊடகங்கள், சமூக வலைத்தளங்களின் ஆதரவு ஓ.பன்னீர் செல்வத்திற்கு மட்டுமே இருக்கிறது. ஜெயலலிதா இரண்டு முறை தேர்வு செய்த முதல்வர் ஓபிஎஸ் என்று பொன்னையன் கூறினார்.

மேலும் நமது கப்ஸா நிருபரிடம் பேசிய பொன்னையன்: அம்மா அப்பல்லோவில் உப்புமா சாப்பிட்டார்களா, இட்லி சாப்பிட்டார்கள் என்று நான் கூறியதெல்லாம் உண்மையில்லை. இன்று நான் அண்ணன் பன்னீரை ஆதரிப்பதாக கூறுவது மட்டுமே உண்மை. எனக்கு யாரும் சின்னம்மா இல்லை. அண்ணன் ஓபிஎஸ் எம்ஜியாரின் மறு உருவம். இவர் ஆட்சிக்கு வர முடியாவிட்டால் மீண்டும் எனக்கு சின்னம்மா தான் துணை. அண்ணன் ஓபிஎஸ் இப்போது கஞ்சி மட்டுமே குடிக்கிறார். எனது பழைய செல் போன் தொலைந்து விட்டதால் நம்பர் தெரியாமல் சின்னம்மாவை தொடர்பு கொள்ள முடியவில்லை. எனவே சின்னம்மா நம்பர் கேட்கவே ஓபிஎஸ்ஸை தேடி வந்தேன் என்று சம்பந்தமில்லாமல் உளறினார்.

There are no comments yet