சென்னை: கடந்த 2016 மழை வெள்ளத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து முன்பு கருத்து தெரிவித்திருந்த நடிகர் கமல்ஹாசன், ‘மக்கள் வரிப்பணம் எங்கே போனது?’ என கேள்வி எழுப்பிய நிலையில், அப்போதைய நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அதற்கு காட்டமாக பதிலடி கொடுத்தார். இந்த ‘அசாதாரண’ சூழ்நிலையில் பாதிக்கப்பட்ட தமிழக மக்களுக்கு ஆறுதலாகவும், கடமையே கண்ணாகக் கொண்டு செயல்பட்ட ஜெயலலிதா அரசுக்கு ஆதரவாகவும், உறுதுணையாகவும் ரஜினி போல மௌன நிலையில் இருக்க வேண்டியதை விடுத்து, உள்ளிருந்து கொல்லும் நோய்போல, நடிகர் கமலஹாசன், தன்னிலையும், முன்னிலையும் மறந்து, அரசு நிர்வாகம் செயல் இழந்துவிட்டதாகவும், நிவாரண நிதிக்கு அரசு அவரிடம் பணம் கேட்டது போன்றும், நிவாரணப் பணிகளைச் செய்யத்தானே அரசைத் தேர்ந்தெடுத்திருக்கிறோம் என்றும், மக்களின் வரிப்பணம் எங்கே போகிறது என்று தெரியவில்லை என்றும், தனது தகுதி மீறிய, தடுமாற்றமான, தவறான கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
மேலும் ஓபிஎஸ் கூறும்போது, எதையும் சரியாகப் புரிந்துகொண்டு “தெளிவாகப் பேசுவது போல குழப்புகின்ற” வெளுத்த, கருத்து கந்தசாமியான கமலஹாசன், எந்த விஷயத்திலும் உண்மை நிலவரங்களைச் சற்றும் உணர்ந்து கொள்ளாமல், குழப்பப் பிசாசின் கோரப் பிடியில் சிக்கி, பிதற்றி வருவது வழக்கமாகி இருக்கிறது. கமலஹாசன் எடுக்கின்ற திரைப்படத்தில் வேண்டுமானால், எவ்வளவு பெரிய இயற்கை பேரிடர் என்றாலும், அதை ஒரே காட்சியில் சீர்படுத்தி விடுவதாகவும், ஒரே பாடலில் பிச்சைக்காரனை பணக்காரனாவதாகவும் காட்டிவிடலாம். ஆனால் யதார்த்தம் என்பது வேறு. எதிர்பாராத வகையில் இயற்கை நம்மைத் தாக்கும்போது, மீட்பு, நிவாரணம், சீரமைப்பு என படிப்படியாக நிவாரண நடவடிக்கைகளை திட்டமிட்டு மேற்கொள்வதன் மூலமாகத்தான் மாநிலத்தை இயல்பு நிலைக்கு கொண்டு வர முடியும் என பன்னீர்செல்வம் பதிலடி கொடுத்தார்.
கமலஹாசன் தனது ஒட்டுமொத்த சொத்துக்களையும் கொட்டி எடுத்ததாகச் சொல்லும் விஸ்வரூபம் வெளியிடப்படுவதில் அடுக்கடுக்கான சிக்கல்களை அவர் சந்தித்த நேரத்தில் சுய லாபத்திற்காக, தமிழ்நாட்டை விட்டும், இயதியாவை விட்டும் வெளியேறி விடுவேன் என்று சொன்னவர். அவர் தீபாவளி சமயத்தில் ஒரு துணிக்கடை விளம்பரப் படத்தில் நடித்ததற்காக கிடைத்த பல கோடி ரூபாயை ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனத்திற்கு நன்கொடையாக வழங்கியதாக செய்திகள் பரப்பப்பட்டன. ஆனால் சம்பந்தப்பட்ட நிறுவனம், அவ்வாறு எந்த உதவியையும் ஈரக் கையால் காகம் ஓட்டாத அவர் வழங்கவில்லை என மறுப்பு வெளியிட்டது. கமலஹாசன் பெரிய நடிகர் என்பதற்காகவோ, அவர் பெரிய, பெரிய படங்களை எடுக்கிறார் என்பதற்காகவோ, அவரது பிதற்றல் மொழிகளை கேட்டுக் கொண்டிருக்க முடியாது. மக்கள் அதனை நிச்சயமாக ஒருபோதும் ஏற்றுக்கொள்ளவோ, நம்பவோ மாட்டார்கள் என்பதை உறுதியாக நம்பலாம் என்றும் ஓபிஎஸ் கூறியிருந்தார்.

There are no comments yet
Or use one of these social networks