சென்னை: அ.தி.மு.க.வில் ஆட்சியையும், அதிகாரத்தையும் கைப்பற்ற ஓ.பன்னீர் செல்வத்துக்கும், சசிகலாவுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
அதற்கு வலுசேர்ப்பதற்காக அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க் கள், எம்.பி.க்கள், மூத்த தலைவர்கள், பொதுக்குழு – செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகளை தங்கள் பக்கம் இழுக்கும் வேலைகளில் இரு அணிகளைச் சேர்ந்தவர்களும் ஈடுபட்டுள்ளனர். அ.தி.மு.க.வுக்கு சட்ட சபையில் மொத்தம் 135 எம்.எல்.ஏ.க்கள் இருக்கிறார்கள். பாராளுமன்ற இரு அவைகளிலும் 50 எம்.பி.க்கள் இருக்கிறார்கள். இவர்கள் ஆதரவு அதிகமாக யாருக்கு கிடைக்கிறதோ அவரது கையே ஓங்கும் என்று கருதப்படுகிறது. தற்போது எம்.எல்.ஏ.க் களில் ஓ.பன்னீர்செல்வம், பாண்டியராஜன், சண்முக நாதன், மாணிக்கம், மனோரஞ்சிதம், மனோகரன், ஆறுகுட்டி ஆகிய 7 பேர் ஓ.பன்னீர்செல்வம் அணியில் உள்ளனர்.
மற்ற எம்.எல்.ஏ.க்கள் சசிகலா அணியில் இருக்கிறார்கள். இந்த நிலையில் மூத்த தலைவர்கள் மற்றும் எம்.பி.க்கள் அடுத்தடுத்து ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு செல்லத் தொடங்கியுள்ளனர். மொத்தம் உள்ள 50 எம்.பி.க்களில் தொடக்கத்தில் முதன் முதலாக மைத்ரேயன் எம்.பி. ஓ.பன்னீர்செல்வத்தை ஆதரித்தார். இதையடுத்து நேற்று காலை நாமக்கல் எம்.பி சுந்தரம், கிருஷ்ணகிரி எம்.பி அசோக்குமார் வந்தனர். நேற்றிரவு பெண் எம்.பி.க்கள் வனரோஜா, சத்யபாமா இருவரும் ஓ.பன்னீர் செல்வம் அணிக்கு ஆதரவு தெரிவித்தனர். இந்த நிலையில் மேலும் 4 எம்.பி.க்கள் ஓ.பன்னீர்செல்வம் தலைமையை ஏற்றுள்ளனர்.
இந்நிலையில் ஓபிஎஸ் ஆதரவு எம்பிக்கள் நமது கப்ஸா நிருபருக்கு கூட்டாக அளித்த பேட்டியில் கூறியதாவது: இப்போது அதிமுகவில் எம்.எல்.ஏக்களுக்கு தான் மதிப்பு, மரியாதை. எல்லா ‘கவனிப்பும்’ அவர்களுக்கு தான். எங்களை யாரும் சீந்துவாரில்லை. அவ்வப்போது தம்பிதுரை மோடியை சந்திக்கவேண்டும், ஜனாதிபதியை சந்திக்க வேண்டும் என்று கூட்டிக்கொண்டு போய் சமோசாவும், சாயா வும் வாங்கிக் கொடுப்பார். இப்போது கை செலவுக்கு கூட காசில்லாமல் கஷ்டப்படுகிறோம். அண்ணன் பன்னீர் வீட்டில் எல்லோருக்கும் டிபன், காபி இலவசமாக கொடுக்கிறார்கள் என்று கேள்விப்பட்டோம். அதனால் இங்கு வந்து கொஞ்சம் செலவுக்கு பணம் வாங்கிக்கொண்டு டிபனும் சாப்பிடலாம் என்று வந்திருக்கிறோம் என்றார்கள்.
There are no comments yet
Or use one of these social networks