சென்னை: தற்போதைய காபந்து முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலாவும் தங்களுக்கு ஆதரவு திரட்டும் முயற்சியில் மும்முரமாக ஈடுபட்டு உள்ளனர். சட்டசபை அ.தி.மு.க. கட்சியின் தலைவராக (முதல்- அமைச்சர்) சசிகலா தேர்ந்து எடுக்கப்பட்ட போதிலும், ஆட்சி அமைக்க அவரை கவர்னர் இன்னும் அழைக்கவில்லை. சசிகலாவை ஆதரிக்கும் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கல்பாக் கத்தை அடுத்த கூவத் தூரில் உள்ள விடுதியில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

ஓ.பன்னீர்செல்வமும், சசிகலாவும் கடந்த வியாழக்கிழமை தனித்தனியாக கவர்னர் வித்யாசாகர் ராவை சந்தித்து புதிய அரசை அமைப்பது தொடர்பாக பேசினார்கள். ஆனால் ஆட்சி அமைக்க யாரை அழைப்பது என்பது பற்றி கவர்னர் இன்னும் முடிவு செய்யவில்லை. எனவே தொடர்ந்து இழுபறி நிலை நீடிக்கிறது.

ஏராளமான அ.தி.மு.க. நிர்வாகிகளும், தொண்டர்களும் சென்னை அடையாறு கிரீன்வேஸ் சாலையில் உள்ள ஓ.பன்னீர்செல்வத்தின் இல்லத்துக்கு சென்று அவருக்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் பள்ளிக் கல்வி துறை அமைச்சர் க.பாண்டியராஜன், கிருஷ்ணகிரி தொகுதி எம்.பி. அசோக்குமார், நாமக்கல் தொகுதி எம்.பி. சுந்தரம் ஆகியோர் நேற்று காலை பன்னீர்செல்வத்தை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். மாலையில் அ.தி. மு.க. செய்தித்தொடர்பாளரும் கட்சியின் அமைப்புச் செயலாளருமான சி.பொன்னையன், திருப்பூர் எம்.பி. சத்யபாமா ஆகியோர் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து ஆதரவு அளித்தனர். இரவில் திருவண்ணாமலை எம்.பி. வனரோஜா வந்து சேர்ந்தார். இதனால் நேற்று ஒரே நாளில் 4 எம்.பி.க்கள் சேர்ந்தனர்.

இந்நிலையில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வதின் நண்பர் சேகர் ரெட்டி புழல் சிறையில் இருந்து ஆதரவு தெரிவித்துள்ளதாக நமது கப்ஸா நிருபர் தெரிவிக்கிறார். வேலூர் அடுத்த தொண்டான்துளசி கிராமம் தான் சேகர் ரெட்டியின் சொந்த ஊராகும். முதல்வர் பன்னீர்செல்வத்தின் குடும்ப நண்பராக மாறியபிறகு ரெட்டியின் சொத்துகள் கிடுகிடுவென உயர்ந்தன. ஓபிஎஸ் சிபாரிசால் திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டார். சேகர் ரெட்டி, அவரது கூட்டாளிகள் வீட்டில், கடந்த 8-இல் வருமான வரித் துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். இதில், ரூ.147 கோடி பணம், 178 கிலோ அளவுக்கு தங்கக் கட்டிகள் ஆகியன பறிமுதல் செய்யப்பட்டன.

இதைத் தொடர்ந்து, ரூ.34 கோடிக்கு புதிய ரூபாய் நோட்டுகளை பதுக்கியது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள்பேரில், சேகர் ரெட்டி, கே.சீனிவாசலு, பிரேம்குமார், திண்டுக்கல் ரத்தினம், முத்துப்பேட்டை ராமச்சந்திரன் ஆகிய 5 பேரை சிபிஐ போலீஸார் கைது செய்னர். இந்த புதிய ரூபாய் நோட்டுகளை அவருக்கு கொல்கத்தாவைச் சேர்ந்த தொழில் அதிபர் லோதா கொடுத்து தெரியவந்தது. இதில் லோதாவும் கைது செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து சேகர் ரெட்டிக்கும் தமிழக தலைமைச் செயலர் இருந்த ராமமோகன ராவுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பது தெரியவந்ததைத் தொடர்ந்து ராம மோகன ராவ் வீட்டிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி சட்ட விரோதமாக இருந்த பணம், சொத்துக்கள் இருந்ததை கண்டுபிடித்தனர்.

இந்நிலையில் ஓபிஎஸ் ஆட்சியில் தொடர சேகர் ரெட்டி சிறையில் இருந்தவாறே ஆதரவு அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் முன்னாள் தமிழக தலைமைச் செயலர் இருந்த ராமமோகன ராவுக்கும் ஓபிஎஸ் அவர்களுக்கு ஆதரவு அளிப்பர் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ஓபிஎஸ் ஆட்சிமைப்பது உறுதியாகி உள்ளது என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

There are no comments yet