சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவுக்கு எதிராக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் போர்க்கொடி தூக்கியுள்ளார். சட்டமன்றத்தில் தனது பலத்தை நிரூபிப்பேன் என்றும் தனியாக நின்றுகூட போராடுவேன் எனவும் கூறியிருந்தார். இதனிடையே, அரசியலில் இணைந்து பணியாற்ற முன்வர வேண்டும் என ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவுக்கு முதலமைச்சர் பன்னீர்செல்வம் அழைப்பு விடுத்திருந்தார்.

இந்நிலையில் இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த தீபா, முதலமைச்சர் பன்னீர்செல்வத்துடன் இணைந்து பணியாற்றுவது குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என கூறியுள்ளார். தற்போதைய சூழலில் தன்னால் எதுவும் கூற முடியாது என தெரிவித்துள்ள அவர், தன்னுடைய நிலையை விரைவில் அறிவிப்பேன் எனவும் தெரிவித்தார். இந்நிலையில், ஜெயலலிதாவின் அண்ணன் மகள் என்பதால் தீபாவை எப்படியாவது அழைத்து ஆர்.கே.நகரில் போட்டியிட வைக்கலாம் என பன்னீர்செல்வம் விரும்புகிறார். அழைப்பை ஏற்று அங்கு சென்றால், கட்சியில் தனக்கு முக்கியத்துவம் இருக்காது, நம்மை நம்பி வந்த ஆதரவாளர்களும் புறக்கணிப்படுவார்கள் என தீபா சந்தேகிக்கிறார். ஒருபுறம் புதிய கட்சி தொடங்க வேண்டும் என்பதிலும் தீபா உறுதியாக உள்ளார். இதனால் தீபாவுடன் பன்னீர்செல்வத்ம் இணைவதில் தாமதம் ஏற்படுகிறது.

முதல்வர் பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு பெருகி வரும் நிலையில், ‘மாஜி’ அமைச்சர் ராஜகண்ணப்பன் தலைமையில், நான்கு பேர் அடங்கிய குழுவினர், பன்னீர்செல்வம் – தீபா அணிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இரு அணிகளின் இணைப்பு குறித்து, நாளை முக்கிய அறிவிப்பு வெளியாக உள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து, ‘மாஜி’ அமைச்சர் ஒருவர் நமது கப்ஸா நிருபரிடம் கூறியதாவது: அ.தி.மு.க.,வையும், ஆட்சியையும், சசிகலா கைப்பற்றாமல் தடுக்கும், ஒரே நோக்கத்தில் தான் தீபாவும், பன்னீர்செல்வமும் உள்ளனர். இரண்டு பேரும் தனித்தனியாக செயல்பட்டால், அது, எதிரணிக்கு வாய்ப்புகொடுத்தது போல் ஆகிவிடும். இது குறித்து குட்டி அம்மாவுடன் பேசிய போது, அண்ணன் ஓபிஎஸ்ஸை தனது கட்சியில் சேர்த்துக்கொள்வது பற்றி பிடி கொடுக்காமல் பேசினார். வரும் 24-ம் தேதி கட்சி ஆரம்பித்தவுடன், பொதுக்குழுவைக் கூட்டி முடிவெடுத்த பின்னரே இது பற்றி கருத்து சொல்ல முடியும் என்று கூறிவிட்டார். என்ன இருந்தாலும் அம்மாவின் ரத்தம் இல்லையா..அதனால் அம்மாவிடம் இருக்கும் அதே ஆணவம் இவரிடம் இருக்கிறது. இருந்த போதிலும் அவர் மனது வைத்து அண்ணனை சேர்த்துக் கொள்வார் என்று நம்புகிறோம் என்று கூறினார்.

There are no comments yet