சென்னை: கூவத்தூரில் அடைக்கப்பட்டுள்ள அதிமுக எம்.எல்.ஏக்களையும், அமைச்சர்களையும் மன்னார்குடி அடியாட்கள்தான் கட்டி மேய்த்து வருகினறனர். அவர்கள் என்ன கேட்டாலும் வாங்கித் தருமாறும், அதேசமயம், அவர்கள் யாரும் தப்பி விடாத வகையில் கவனமாக இருக்குமாறும் அந்தக் கும்பலுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாம். இதனால் கண்ணில் விளக்கெண்ணெய் ஊற்றிக் கொண்டு விழிப்புணர்வுடன் கண்காணித்து வருகிறார்களாம் மன்னார்குடி அடியாட்கள் கும்பல். அதையும் மீறி சிலர் செய்யும் செயல்கள் அவர்களை டென்ஷனுக்குள்ளாக்கி வருகிறதாம்.

ரணகளத்திலேயும் ஒரு கிளுகிளுப்பா என்பார்கள்.. அப்படித்தான் ஆகியுள்ளது சசிகலா கோஷ்டியின் நிலை. கூவத்தூர் ரிசார்ட்டில் அடைக்கப்பட்டுள்ள அமைச்சர்கள் செல்லூர் ராஜு மாயமானதாக திடீர் பரபரப்பு ஏற்பட்டதாம். கடைசியில் கக்கூஸ் ஒன்றின் அருகே அமைதியாக உட்கார்ந்திருந்தாராம் அவர். இந்நிலையில் மதுரை தெற்கு தொகுதி அதிமுக எம்.எல்.ஏ சரவணன் சிங்கம் போல் வேடமிட்டு கூவத்தூர் ரிசார்டில் இருந்து தப்பி வந்துள்ளதாக நமது கப்ஸா நிருபர் புலனாய்வு செய்துள்ளார். சின்னம்மா அணியில் இருந்து 7 எம்.எல்.ஏக்கள் பன்னீர் அணிக்கு தாவினார்கள், ஆனால் சின்னம்மா ஆதரவு எம்.எல்.ஏக்கள் 127 பேரை கூவத்தூரில் உள்ள ரிசார்டில் அடைத்து வைத்துள்ளனர்.

சரவணன் கப்ஸா நிருபரிடம் கூறும்போது “சும்மா இருந்த சங்கை ஊதிக் கெடுத்தானாம் ஆண்டி என்ற கதைக்கேற்ப, சரக்கு சைடு டிஷ் என்று ராஜ போக வாழ்க்கை வாழ்ந்து கொண்டு கொத்தடிமைகளாக ரிசார்டில் இருந்த எம்.எல்.ஏக்களிடம் தோன்றி ஹிட்லர் புத்தகத்தில் படித்து ‘நெட்டுரு’ பண்ணிக் கொண்டு வந்த சிங்கம் கதை கூறினார் சின்னம்மா.. அதைக் கேட்ட நான் சுதாரித்து விட்டேன். கரகாட்டம் ஒயிலாட்டம் ஏற்பாடு செய்திருந்த போது ஆட வந்த நடன கோஷ்டியிடம் இருந்து மேக்கப் ஐட்டங்களை திருடி, ‘பவுடர் பாப்பா, மேக்கப் மேரி’ என்றழைக்கப்படும் சின்னம்மா போல நான்கைந்து லேயர் பவுடர் கோட்டிங் செய்து அடையாளம் தெரியாத வகையில் சிங்க வேடமிட்டு தப்பி வந்து ஓ.பன்னீர்செல்வத்திடம் தஞ்சமடைந்தேன்.” என்றார்

பகிர்

There are no comments yet