சென்னை: சசிகலா சிறை சென்ற பிறகும் நூற்றுக்கும் மேற்பட்ட எம்.எல்.ஏக்கள் கூவத்தூர் சொகுசு பங்களாவை விட்டு வெளியேறாமல் ‘டேரா’ போட்டுள்ளனர். சரக்கு, சைடு டிஷ், பிரியாணி தடையின்றி கிடைப்பது தான். வீட்டில் பெண்டாட்டிகள் அவித்து போடும் வெந்தும் வேகாத உப்புமா தின்று நாக்கு செத்துப் போயிருந்த அவர்கள், தலை தீபாவளிக்கு மாமனார் வீட்டிற்கு வந்த மாப்பிள்ளைகளாக சொகுசு பங்களாவில் வலம் வருகின்றனர். 144 தடையுத்தரவு பிறப்பித்து, தண்ணீர், கரண்ட் சப்ளை நிறுத்திய பிறகும், அடம் பிடித்து எம்.எல்.ஏக்கள் வெளியேறவில்லை.

இந்நிலையில் அங்கு தங்கியிருக்கும் பெண் பிரமுகர்களின் நிலை பற்றி அறிந்துகொள்ள சசிகலாவின் மேக்கப் கிட்டை ‘லவட்டிக்’ கொண்டு பெண் வேடமிட்டு சென்ற நமது கப்ஸா நிருபர் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில் அம்மையாரை ரகசியமாக சந்தித்த போது அவர் கொடுத்த பேட்டி: திமுக போன்ற எதிர்க்கட்சிகள் மற்றும் பாஜக போன்ற எதிரிக் கட்சிகள் இங்கு வழங்கப்படும் பிரியாணி வாசனையை மோப்பம் பிடித்து அண்டாக்களை கபளீகரம் செய்ய திட்டமிட்டுளனர். அவர்கள் தொல்லை தராமல் இருக்க வேண்டும் என்பதற்காகவே கூவத்தூர் தனியார் சொகுசு விடுதியில் தங்கியிருக்கிறேன். 124 சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஒருங்கிணைந்து, பிரியாமல் பிரியாணி வகையறாக்களை ஒரே இலையில் உண்டு களித்து ஒற்றுமையாக ஜெயலலிதா மற்றும் சசிகலாவின் ஆட்சி அமைய வேண்டும் என்பதற்காக (லெக்) பீஸ்புல்லாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம். யாரும் எங்களை உப்புமா தின்ன சொல்லிக் கட்டாயப்படுத்தவில்லை. யாரும் எங்களை இங்குள்ள பிரியாணி அண்டாக்களை அடைத்து வைக்கவும் இல்லை.

நான் முஸ்லிமாக இருந்தாலும் எனக்காக தனி மரியாதையுடன் அதிக பீஸ்கள் தருவதுடன், 5 மணி நேரம் தொழுகை நடத்துவதற்காக தனி இடத்தையும் ஏற்பாடு செய்து கொடுத்துள்ளனர். நாங்கள் ஆட்சி அமைக்க ஆளுநர் விரைவில் பிரியாணிக்கு சப்புக் கொட்டிக் கொண்டு வந்து அழைப்பு விடுப்பார் என்று எதிர்பார்க்கிறோம். ஆந்திராக் காரர் என்பதால் சற்று காரம் தூக்கலாக தனியாக பிரியாணி செய்து வைத்துள்ளோம். எம்.எல்.ஏ. விடுதியில் டாஸ்மாக் பார் உட்பட அனைத்து வசதிகளும் இருக்கின்றன. சின்னம்மாவின் மிடாஸ் கம்பெனியில் இருந்துதான் போலிச் சரக்கு சப்ளை செய்யப்படுகிறது. இங்கு ஒரே இடத்தில் அனைத்து வசதிகள் இருப்பதுடன் எதிர்கட்சிகள் மற்றும் எதிரிக்கட்சிகள் எங்களுக்கு தொல்லை தராமல் இருப்பதற்காகவும்தான் நாங்கள் இங்கு அண்டாக்களுடன் தங்கியிருக்கிறோம். காவல்துறை அதிகாரிகள் எங்களது பிரியாணியில் பங்கு கேட்டுத்தான் பாதுகாப்பிற்காக வந்தனர்” என்றார்

பகிர்

There are no comments yet