சென்னை: தமிழகத்தில் நிலவும் ‘அசாதாரண’ சூழ்நிலையால் அதிமுகவில் பெரும் கொந்தளிப்பு உருவாகி உள்ளது. ஓபிஎஸ்-எடுபிடி பழனிச்சாமி இடையேயான பனிப்போர் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. ரகசிய வாக்கெடுப்புக்கு கவர்னரிடம் அனுமதி கோரிய நிலையில் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டு உள்ள அறிக்கையில், “தமிழக மக்கள் தாங்கள் விரும்பாத ஒரு ஆட்சி அமைவதை பொறுத்துக் கொள்ள முடியாமல், அதற்கு துணைபோகும் தங்கள் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு தங்களது மன உணர்வுகளை தெரிவிப்பதற்காகவும், அமையான முறையில் யாருக்கும் எந்தவித இடையூறு இல்லாமலும் தங்களது கண்டனத்தை தமிழகம் முழுவதும் தெரிவித்து வருகிறார்கள். அவர்களையெல்லாம் ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது செய்தது போல், காவல்துறையினர் கைது செய்து திருமண மண்டபங்களில் அடைத்து வைத்திருப்பதாக தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன. வாக்களித்த மக்களுக்கு தங்களது வேதனைக் குரலை வெளிப்படுத்துதற்கு வேறு வழி தெரியவில்லை. தயவு செய்து கைது செய்யப்பட்ட அப்பாவி பொதுமக்களை காவல்துறையின் உடனே விடுவிக்க வேண்டும். முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா தமிழகத்தை அமைதிப்பூங்காவாக மாற்றி வைத்திருந்தார். அந்த நிலைமையை காவல்துறையினரே மாற்றிவிட வேண்டாம் என்று அன்போடு காவல்துறையினரை வேண்டுக்கொள்கிறேன்” என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
இது ஒருபுறமிருக்க சசிகலா நியமனம் செய்த ‘எடுபிடி’ பழனிச்சாமி பதவியேற்ற நிலையிலும், எம்.எல்.ஏ.க்கள் தொடர்ந்து கூவத்தூர் சொகுசு விடுதியில் தங்கவைக்கப்பட்டு உள்ளனர். சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தும் வரையில் அங்கேயே எம்.எல்.ஏ.க்கள் வைக்கப்படுகிறார்கள். கூவத்தூர் சொகுசு விடுதியில் தங்கி உள்ள கோவை எம்.எல்.ஏ. அம்மன் அர்ஜுனன் கப்ஸா நிருபருக்கு அளித்த பேட்டியில்: சனிக்கிழமை சட்டப்பேரவையில் நடைபெறும் ‘அவ’நம்பிக்கை வாக்கெடுப்புக்குப் பிறகு, எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் தங்கள் தொகுதிக்கு செல்லலாம் என்று முதல்-அமைச்சர் எடுபிடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். காலையில் சுமார் 8 மணி வரை உட்கார்ந்த நிலையிலேயே நடைப்பயிற்சி செய்த பிறகு, சிறது நேரம் ஆங்கில நாளிதழ்களில் நடிகைகளின் படங்களுக்கு முத்தம் கொடுத்துவிட்டு, காலை உணவுக்கு சின்னம்மா போல் அலுமினிய தட்டுடன் ஒன்று கூடுகிறோம். கடலை ஒட்டி, பரந்து விரிந்த அந்த நட்சத்திர விடுதியில் தங்குவதற்கு விருப்பமில்லாதவர்கள் தற்கொலை செய்து கொள்ள ஏதுவாக, தூக்க மாத்திரை, பலிடாயில், தூக்குக் கயிறு, என அனைத்து வசதிகளும் செய்து கொடுத்துள்ளார்கள். அதிமுகவில் உள்கட்சி பூசல் நடக்கிறது. இதைப்பற்றி மக்களுக்கு கவலையில்லை. மீண்டும் தேர்தல் வந்தால் புதிய 2000 நோட்டு கிடைக்கும் என எதிர்பார்த்துள்ளனர். தேர்தல் வந்தால் தேவையில்லாத பண விரயம் ஏற்படும். அதனால், ஆட்சியைக் காப்பாற்றத்தான் அனைத்து எம்.எல்.ஏ.க்களும் ஒரே இடத்தில் இருக்கிறோம்.” என்றார்.
ஆனால் ஓ.பி.எஸ் கப்சா நிருபரிடம் பேசும்போது: “ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது நான் மாணவர்களுக்கு மெரினா ட்ரீட்மெண்ட் கொடுத்தது போல் என் ஆதரவாளர்களிடம் வன்முறையை பிரயோகிக்க எடுபிடி பழனிச்சாமி ஆயத்த்மாகி வருவதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அமைதியாக இருந்த தமிழகத்தில், கோவை குண்டுவெடிப்பு, எழும்பூர் ரயில் நிலைய ரயிலில் கூரையைப் பிய்த்துக் கொள்ளை, என பரபரப்பாக அம்மா வைத்திருந்தார்கள், அந்த முறையைக் காப்பி அடித்து வன்முறையை தூண்ட நினைக்கும் எடுபிடியின் குடுமி பிடி ஜெயிலில் உள்ள சொர்ணாக்கா சின்னம்மா கையில் உள்ளது.. சின்னம்மாவின் குடும்ப ஆட்சியை வேரறுக்காமல் ஓயமாட்டோம்..” என்று முழக்கமிட்டார்.
There are no comments yet
Or use one of these social networks