‘ஜெயலலிதா முதல் எடப்பாடி வரை’ என்ற தனது சுயசரிதை சின்னம்மா மீது விழுந்த களங்கத்தை துடைக்கும் வரலாற்றுப் பதிவாக இருக்கும் என ஆளுநர் வித்யாசாகர் ராவ் பேட்டி

402

சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றது முதல் தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்றது வரையிலான நிகழ்வுகளில் தமிழகத்தின் பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவின் பங்கு என்ன என்பது குறித்து புத்தகம் ஒன்று வெளியாக உள்ளது. மறைந்த ஜெயலலிதா கடந்த செப்டம்பர் 22-ம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அன்று முதல் தமிழ்நாட்டு அரசியலில் குழப்பங்களுக்கும், பரபரப்புகளுக்கும் பஞ்சமில்லை. மருத்துவமனைக்கு கொண்டுவரும் போதே ஜெயலலிதா உயிருடன் இல்லை என்றார்கள். 75 நாட்களுக்கும் மேலாக ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது, அப்பல்லோ சென்ற ஆளுநர் மருத்துவர்களிடம் ஜெயலலிதா உடல் நிலை குறித்து கேட்டறிந்ததாக கூறினார். ஆனால், சசிகலா தரப்பினர் யாரையும் அனுமதிக்கவில்லை என கூறப்பட்டது.

அப்பல்லோ மருத்துவர்கள் செய்தியாளர் சந்திப்பில் ஜெயலலிதாவை ஆளுநர் கண்ணாடி வழியாக பார்த்தார் என்று கூறினார்கள். அதே போன்று அக்டோபர் 1-ம் தேதி ஜெயலலிதா மரணம் அடைந்து விட்டதாக வதந்தி பரவியது. அதனால் உடனே மும்பையில் இருந்து சென்னைக்கு வந்த ஆளுநர் வித்யாசாகர் ராவ் அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்று ஜெயலலிதாவை பார்த்தார். அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை முறைகளை மருத்துவர்கள் மற்றும் தமிழக அமைச்சர்களிடம் கேட்டறிந்தார். பின்னர் ஜெயலலிதா உடல்நிலை குறித்து அறிக்கை வெளியிட்டார். ஜெயலலிதா மறைந்த பின்னர், சசிகலா ஆட்சி அமைக்க உரிமை கோரினார். அவர் சிறைக்கு சென்ற பின்னர் எடப்பாடி பழனிசாமி தமிழகத்தின் முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார். அதற்கான நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்ற போது திமுகவினர் அமளியில் ஈடுபட்டதால், சட்டசபை தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டது. அப்போது ஸ்டாலின் உள்ளிட்ட திமுகவினரை அவைக் காவலர்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்ற முற்பட்டனர். இதற்கு திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது தள்ளுமுள்ளு ஏற்பட்டது. ஸ்டாலின் சட்டை கிழிந்ததாக செய்தி பரவியது. பின்னர் கிழித்துக் கொண்ட சட்டையுடன் ஸ்டாலின் ஆளுநரை சென்று சந்தித்து புகார் கடிதம் கொடுத்தார்.

பரபரப்பு மிகுந்த இந்த காலகட்டத்தை புத்தகமாக எழுத இருக்கிறார் ஆளுநர் வித்யாசாகர் ராவ். அதில் உடல் நலக்குறைவு காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டது முதல் தற்போது எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக பதவி ஏற்றது வரை எழுத உள்ளார். இந்த காலகட்டத்தில் தமிழகத்தில் ஆளுநரின் செயல்பாடுகள் குறித்து கடும் விமர்சனங்கள் எழுந்தன. விமர்சனங்களுக்கும் சந்தேகங்களும் ஆளுநர் இந்தப் புத்தகத்தில் விளக்கம் அளிப்பார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இது குறித்து கப்ஸா நிருபரிடம் வித்யாசகர் ராவ் கூறும்போது, ” வெண்ணை திரண்டு வரும் போது தாழி உடைந்த கதையாக, சின்னம்மா முதல்வராக பதவி ஏற்க இருந்த நிலையில், சொத்து குவிப்பு வழக்கில் தீர்ப்பு வந்ததால், பெங்களூரு சிறை செல்ல வேண்டியதாகி விட்டது, சின்னம்மா மீது விழுந்த கரும்புள்ளியை துடைக்கும் விதமாக என் புத்தகத்தில் அவரைப் பற்றி புகழ்ந்து பாடி, தமிழக அரசின் பொற்கிழி பெறுவேன். அதுபோல் மெரினா போராட்ட வன்முறையும் வாசகர்களின் ஆர்வத்தை தூண்டும் வகையில் களேபரமாக முடிந்துள்ளது. அது இந்த புத்தகத்தின் விற்பனையை இளம் வாசகர்களிடையே அதிகரிக்கும். தவிர ‘பினிஷிங் டச்’ ஆக கிளைமாக்சில் சட்டசபை கலவரம் தூள் கிளப்பும். எடப்பாடி ஆட்சி பிடித்துவிடுவார் என்று ஸ்டாலினுக்கு தெரிந்து விட்டது. ஓபிஎஸ்சை நம்பி வீணா போய்ட்டமேன்னு அவரே களத்துல இறங்கிட்டார். ரொம்ப டீசெண்டான ஆள் மாதிரி வேஷம் போட்டுக்கிட்டு இருந்தாரு இவ்ளோ நாள். இப்போ சுய ரூபம் தெரிஞ்சுடுச்சு. அவர் என்னிடம் கிழிந்த சட்டையுடன் கடிதம் கொடுக்க வந்த போது ஆட்சியை வேண்டுமென்றாலும் கலைக்க சொல்லுங்கள் முதலில் சட்டை பட்டன போடுங்கள் பார்க்க சகிக்கவில்லை என்று சொல்லி அனுப்பினேன்” என்றார். பின்னர் காரில் புறப்பட்ட ஆளுநர் நாவல் எழுத சின்னம்மா படம் போட்ட நோட்டு கிடைக்காமல் இரண்டு குயர் வெள்ளைக் காகிதம் வாங்கிக் கொண்டு ஏமாற்றத்துடன் திரும்பியதாக ஆளுநர் மாளிகை வட்டாரங்கள் தெரிவித்தன.

பகிர்

There are no comments yet