பெங்களூரு: சொத்துக் குவிப்பு வழக்கில் சிறைத்தண்டனை அனுபவிக்கும் சின்னம்மாவுக்கு பார்ப்பன அக்ரஹார சிறையில், கைதி எண் 9234 கொடுக்கப்பட்டுள்ளது. 33 மூன்று வருடங்களாக தவ வாழ்க்கை வாழ்ந்ததாக கூறும் சசிகலா சுகபோகங்களையும், வசதி வாய்ப்புகளையும் பெற்று வாழ்ந்தவர், அவரது சிறை வாழ்க்கை மிகவும் கொடுமை வாய்ந்ததாக இருக்கும் என்று ஜெயில் காவலர்கள் பொய்யாகக் கண்கலங்கினர். சின்னம்மா கேட்ட வி.ஐ.பி சொகுசு ஜெயில் வாழ்க்கை கிடைக்கவில்லை. 10க்கு 8 அடி உள்ள சிறிய அறையும் அதில் சிறிய மறைப்புடன் ஒரு டாய்லட்டும், ஒரு சிறிய ஃபேன், ஒரு பெட்ஷீட் தலையணை ஆகியவற்றை இளவரசியுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும். முதல் நாள் கோபத்தில் சாப்பிடாமல் இரவு முழுவதும் தூங்காமல் இருந்த சின்னம்மா மறுநாள் காலை கைகால்களை அசைக்காத நிலையில் யோகா செய்ததாகவும் படிக்கத்தெரியாத ஆங்கில நாளித்ழ்களில் படம் பார்த்ததாகவும் கூறப்படுகிறது.

முன்னதாக பெங்களூரு வந்தடைந்த போது, போலீஸ் ஜீப் கூட வர “நான் சாதாரண பிக்பாக்கெட் திருடி இல்லை, மாஸ்டர்பிளான் மங்கம்மா” என்று சூளுரைத்தாராம். அம்மாவுக்காக தன் வாழ்வையே அர்ப்பணித்த மெழுகுவர்த்தியான சின்னம்மா ஜெயிலில் தினக்கூலி 50 ரூபாய்க்கு மெழுகுவர்த்தி செய்ய வேண்டுமாம். இதைக் கேட்ட சசிகலா ரஜினியின் பாடலை மாற்றிப் பாடினாராம் “நான் உள்ளுக்குள்ள மெழுகுவர்த்தி ஆனா உண்மையில சக்கரவர்த்தி” என்று. இவற்றையெல்லாம் விட ஒரு சுவையான தகவல் உங்கள் நியூஸ் வாசகர்களுக்காக நமது கப்சா நிருபர் தருகிறார்: சின்னம்மா செல்லுக்கு அருகில் இருக்கும் பெண் கைதியின் பெயர் ‘சயனைடு மல்லிகா’ கோவில்களில் நகை அதிகளவில் அணிந்திருக்கும் பெண்களை சயனைடு கொடுத்து கொன்று நகை திருடுவதில் கில்லாடியாம். முதல் நாள் சசிகலாவிடம் ஹலோ சொல்ல முயன்றிருக்கிறாள், சசிகலா பிடிகொடுக்கவில்லையாம். ஆனால் இரவு கனவில் வந்து அம்மாவின் ஆன்மா கேட்டுக் கொண்டதற்கிணங்க மறுநாள் முதல் ‘சயனைடி’னயின் உற்ற தோழியாக சின்னம்மா மாறிவிட்டாராம். “சயனைடின் சிரிப்பில் அம்மாவை பார்க்கிறேன்” என்று இளவரசியிடம் பிதற்றியுள்ளார்.

சின்ன லெவெலை தாண்டி, பெரிய அளவில் சாதிக்க மல்லிகாவைத் தூண்டியதோடு, கூவத்தூரில் சிங்கம் கதை கூறியதுபோல ‘குள்ள நரி’க் கதை ஒன்றை கூறி, சாதாரண வீடியோ கடைக்காரியாக ஜெயலலிதாவிடம் அறிமுகம் ஆகி, பின்னர் தோழி ஆகி, நிழல் ஆட்சி நடத்திய சாணக்கிய தந்திரங்களையும், இன்னபிற அரசியல் நெளிவு சுளிவுகளையும், ஒவ்வொன்றாக கற்றுக் கொடுக்க ஆரம்பித்துள்ளாராம். ஒன்றும் தெரியாமல் சிறைக்கு வரும் அப்பாவி இளைஞர்கள் கூட தேர்ந்த குற்றவாளிகளாக ரௌடிகளாக பட்டை தீட்டப்பட்டு சிறையை விட்டு வெளியே அனுப்பி வைக்கப்படுவது ஜெயில் மரபு, சயனைடு மல்லிகா வெளியே வந்து இன்னொரு சின்னம்மாவாக கர்நாடக அரசியலில் பரிமளிப்பாரா என்பதை காலம் தான் பதில் சொல்ல வேண்டும் என்று கப்சா நிருபர் தெரிவித்தார்.

பகிர்

There are no comments yet