சென்னை: வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் ஜெயலலிதாவுடன் இணைத்து குற்றம்சாட்டப்பட்ட சின்னம்மா, இளவரசி, சுதாகரன் ஆகியோரை குற்றவாளி என்று அறிவித்து பெங்களூர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜான் மைக்கேல் குன்ஹா முன்னர் தீர்ப்பளித்திருந்த 4 ஆண்டு சிறை தண்டனையை சுப்ரீம் கோர்ட் சமீபத்தில் மீண்டும் உறுதிப்படுத்தியது. ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு அ.தி.மு.க. பொதுச் செயலாளராக பதவியேற்ற சசிகலா பெங்களூரில் உள்ள பரப்பன அக்ரஹாரா சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த 15-ம் தேதி ஆஜராகி அங்கு சிறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ளார். அவரது தண்டனை காலம் 4 ஆண்டுகளாக இருக்கும் நிலையில், கடந்த 2014-ம் ஆண்டு இதே வழக்கில் பெங்களூர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹா தீர்ப்பளித்தபோது, கைதாகி இதே பரப்பன அக்ரஹாரா சிறையில் 21 நாட்கள் சிறையில் இருந்தார். அதை ஒருமாத காலமாக கணக்கிட்டு கொண்டால், அவர் இன்னும் 3 ஆண்டுகள், 11 மாதங்கள் மட்டுமே சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும்.

பாதுகாப்பு கருதி சின்னம்மா, இளவரசி ஆகியோர் மகளிர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் ஒரே செல்லுக்குள் (சிறிய அறை) தங்கியுள்ளனர். அவர்களுக்கு சிறையில் தயாரிக்கப்படும் உணவு வழங்கப்படுகிறது, டாக்டர்கள் அவ்வப்போது மருத்துவ பரிசோதனைகளை நடத்துகின்றனர். சுப்ரீம் கோர்ட் தீர்ப்பின்படி, சசிகலா 10 கோடி ரூபாய் அபராதம் செலுத்த வேண்டியுள்ளது. அபராதம் செலுத்த தவறினால், மேலும் 13 மாதம் அவர் சிறைவாசம் அனுபவிக்க நேரிடும். இருவரும் வருமான வரி செலுத்துவதற்கான ஆவணங்களை தாக்கல் செய்து தங்களுக்கு சிறையில் முதல் வகுப்பு வசதிகள் செய்து தர வேண்டும் என்று கர்நாடக கோர்ட்டில் மனுதாக்கல் செய்தனர். இதை கோர்ட்டு ஏற்றுக்கொண்டு சசிகலா, இளவரசிக்கு முதல் வகுப்பு சலுகைகள் அளிக்க உத்தர விட்டது. கோர்ட்டு உத்தரவு ஜெயில் சூப்பிரண்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. டி.வி., கட்டில், மின் விசிறி, செய்திதாள்கள் வழங்கப்படுகிறது. ஆண்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சுதாகரன் தனக்கு எந்த வசதியும் வேண்டும் என்று கேட்கவில்லை. இதனால் அவருக்கு புதிய சலுகையோ, வசதியோ செய்து தரப்படவில்லை என்று சிறைத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

நமது கப்ஸா நிருபர் பார்ப்பன அக்ரஹார சிறைக்குள் கைதி வேஷத்தில் செய்தி சேகரிக்க சென்ற போது சின்னம்மா எடுபிடி பழனிசாமி குறித்து அவரிடம் விசாரித்து தெரிந்து கொண்டார். எடுபடி பதவி ஏற்ற போது தனது படத்தை வைக்காமல் ஜெயலலிதா படத்தை தலைமை செயலர் வைத்திருந்ததை தினசரியில் பார்த்ததும், ஹிஸ்டீரியா வந்தவர் போல் கத்தியபடி ஜெயில் தரையில் ஓங்கி மூன்று முறை அறைந்தாரம். சிறையில் வழங்கப்பட்ட டிவி கலைஞர் ஆட்சிக் காலத்தில் வழங்கிய இலவச வண்ண தொலைக்காட்சிப் பெட்டி என்று தெரிந்ததும் கோபத்தில் டிவியை உடைக்கப் போக, இளவரசி தடுத்து மெகா சீரியல் பார்க்க வேண்டும் என்றதும் போனால் போகிறதென்று விட்டுவிட்டார், மேலும் அவருக்கு கொடுக்கப்பட்ட செய்தித்தாள் திமுக பத்திரிகையான ‘தினகரன்’ என்பதை எழுதப்படிக்கத் தெரியாததால் அவரால் கண்டுபிடிக்க முடியவிலை. படத்தை மட்டும் பார்த்ததாக கப்சா நிருபர் தெரிவித்தார். மேலும் கோபத்துடன் “பத்து கோடி ரூபாய் அபராதம் கட்டாவிட்டால் மேலும் 13 மாத காலம் சிறைத்தண்டனை நீட்டிக்கப்படும் என்று ஜெயிலர் கூறிகிறார், பல ஆயிரம் கோடி ரூபாய் கொள்ளையடித்த என்னிடம் கேட்டிருந்தால் சுருக்குப் பையில் இருக்கும் 10 கோடியை ஜெயிலருக்கு கொடுத்திருப்பேனே” என்று கூறியபடி, கப்ஸா நிருபரிடம் சுருக்குப் பையை பிரித்துக் காட்ட, அதில் சில கிரெடிட் கார்டுகளும் புதிய 2000 நோட்டுகளாக 10 கோடி ரூபாயும் பல்லிளித்ததாக கப்ஸா நிருபர் தெரிவித்தார்.

பகிர்

There are no comments yet