சென்னை: ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு அ.தி.மு.க.வில் பிளவு ஏற்பட்டது. ஓ.பன்னீர் செல்வம் ஒரு அணியாக செயல்பட்டு வருகிறார். சசிகலா தலைமையில் இன்னொரு அணி உள்ளது. முதல்-அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த ஓ.பன்னீர்செல்வம் சசிகலா மீது சரமாரியாக குற்றச்சாட்டுகளை கூறியதுடன் மிரட்டி ராஜினாமா செய்ய வைக்கப்பட்டதாகவும், பரபரப்பான புகாரை தெரிவித்தார்.

சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா சிறை சென்றதையடுத்து புதிய முதல்- அமைச்சராக எடப்பாடி பழனிச்சாமி பதவி ஏற்றார். அ.தி.மு.க.வில் மோதல் உச்சக்கட்டத்தை எட்டியிருந்தபோது ஓ.பன்னீர் செல்வத்தை, தீபா ஜெயலலிதா சமாதியில் வைத்து நேரில் சந்தித்தார். பின்னர் அவரது இல்லத்துக்கும் சென்றார். அப்போது பேட்டி அளித்த தீபா அ.தி.மு.க.வில் நானும், ஓ.பன்னீர்செல்வமும் இரு கரங்களாக இணைந்து செயல்படுவோம் என்று கூறினார். இதனால் அரசியல் களத்தில் இருவர் மீதும் பலத்த எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டது. ஜெயலலிதா பிறந்தநாள் அன்று ஆர்.கே.நகரில் பொதுக்கூட்டம் நடைபெற இருப்பதாகவும், அதில் ஓ.பன்னீர்செல்வமும், தீபாவும் பங்கேற்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதற்கான ஏற்பாடுகளும் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் ஓ.பன்னீர் செல்வத்துடன் இணைந்து செயல்படுவதற்கு திடீரென தீபா தயக்கம் காட்டுவதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அவரது ஆதரவாளர்கள் இன்று கூறும் போது, “தீபாவின் நாளைய நிகழ்ச்சி நிரலில் ஆர்.கே.நகர் பொதுக்கூட்டம் எதுவும் இதுவரை இல்லை” என்று தெரிவித்தனர். பன்னீருடன் தீபா சேரக்கூடாது என்பது தான் தீபா ஆதரவாளர்களின் விருப்பம். இனி நமது பேனர்களில் பன்னீர் போட்டோவை போடாதீர்கள் என தீபாவின் கணவர் தனது ஆதரவாளர்களிடம் கூறிவிட்டார்.

என் அத்தையுடனும், சசிகலாவிடமும் இவ்வளவு நாள் இருந்து விட்டு,பதவிக்காக அவர்களுக்கு துரோகம் செய்து கடைசி நிமிடத்தில் கட்சியை உடைத்த ஓபிஎஸ்சை சேர்த்தால் நமக்குத்தான் ஆபத்து, துரோகத்தை இங்கும் காண்பித்து நம்முடன் இருக்கும் கொஞ்சம் முட்டாள்களின் மனதை மாற்றி விடுவார் எனவே அவரை எனது கட்சியில் சேர்க்க மாட்டேன் என தீபா கூறியதாக தெரிகிறது.

There are no comments yet