சென்னை: அரசு பங்களாவை காலி செய்ய சசிகலா தரப்பு நெருக்கடி கொடுத்துவருவதால் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தற்போது குடியிருந்து வரும் அரசு பங்களாவை விரைவில் காலிசெய்ய உள்ளார். இதற்காக சென்னையில் அவர் வாடகை வீட்டை தேடி வருவதாக கூறப்படுகிறது. முதல்வராக பதவியேற்க விருப்பப்பட்ட சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர் ஓ.பன்னீர்செல்வத்தை மிரட்டி ராஜினாமா கடிதத்தை பெற்றனர். இதையடுத்து சசிகலா தரப்பு மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை ஓ.பன்னீர்செல்வம் கூறினார். இதனால் அதிமுக இரண்டாக பிளவுபட்டு ஓபிஎஸ் அணி சசிகலா அணி என ஆனது. இதைத்தொடர்ந்து ஓபிஎஸ் உட்பட அவருக்கு ஆதரவளித்த அனைவரையும் சசிகலா கட்சியிலிருந்து நீக்கினார்.

கடந்த 14ஆம் தேதி சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பு வந்ததையடுத்து சசிகலா பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டார். இதையடுத்து அவரது ஆதரவு அமைச்சரான எடப்பாடி பழனிச்சாமி முதல்வரானார். இதைத்தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் தங்கியிருந்த அரசு பங்களாவை காலி செய்ய நோட்டிஸ் வழங்கப்பட்டது. சசிகலா தரப்பு ஆதரவு அரசு என்பதால் ஓபிஎஸ் உடனடியகாக வீட்டை காலி செய்ய நெருக்கடி கொடுப்பதாக கூறப்படுகிறது. அவரது வீட்டின் முன்பு இருந்த அறிவிப்பு பலகையும் கடந்த 2 நாட்களுக்கு முன்பு அகற்றப்பட்டது. இந்நிலையில் வீட்டை காலி செய்ய 6 மாதம் அவகாசம் தரும்படி ஓபிஎஸ் தரப்பில் கோரப்பட்டுள்ளது. ஆனால் அதற்கு அரசு தரப்பில் இருந்து இதுவரை எந்த பதிலும் அளிக்கப்படவில்லை. இதனால் அவர் உடனடியாக வீட்டை காலி செய்யும் கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.

மேலும் பன்னீர்செல்வத்துக்கும், அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ள முன்னாள் அமைச்சர் பாண்டியராஜனுக்கும் எம்எல்ஏ விடுதியில் அறைகள் ஒதுக்கப்படவில்லை. தனக்கு ஆதரவு தெரிவிப்பதற்காக தினமும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் வந்து செல்வதால் அதற்கு ஏற்றார் போல சென்னையிலேயே வாடகை வீட்டை ஓபிஎஸ் தேடி வருகிறார். இதனால் தனது வீட்டில் ஆசையுடன் வளர்த்து வந்த பசுமாடுகளை, வைத்து மீண்டும் பால் பண்ணை, அல்லது டீ கடை தொழில் செய்யலாமா என்று யோசித்து வருகிறார். சிறையில் இருக்கும் தனது நண்பர் சேகர் ரெட்டியை கடன் கேட்கலாமா என்ற எண்ணத்திலும் இருப்பதாக செய்திகள் கூறுகின்றன.

சசிகலா குடும்பத்தினரின் குடைச்சலால் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீசெல்வம் வாடகை வீடு தேடும் தகவல் சேகர் ரெட்டியை எட்டியுள்ளதாகவும், அவர் ஓபிஎஸ்சை தன்னுடனுன் புழல் சிறையில் வந்து தங்க அழைப்பு விடுத்துள்ளதாகவும் நம்பத்தகாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

பகிர்

There are no comments yet