சென்னை: புலி வருது புலி வருது என்ற கதையாக இந்தா – அந்தா என்று சால்ஜாப்புக் காட்டி வந்த குட்டி அம்மா தீபா ஒருவழியாக, அரசியலில் களமிறங்கி, கட்சிப் பெயரையும், கொடியையும் இன்று தமது தி.நகர் வீட்டு பால்கனியில் இருந்தபடி அறிமுகம் செய்தார். தமிழ்நாட்டின் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் அண்ணன் ஜெயக்குமாரின் மகள் தீபா. ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தபோது, அவரைப் பார்ப்பதற்கு தன்னை அனுமதிக்கவில்லையென தீபா கூறிவந்தார். இந்த நிலையில் ஜெயலலிதா மறைந்தவுடன் அ.தி.மு.வினர் சிலர் தீபாவை சந்தித்து அவருக்கு ஆதரவு தெரிவித்துவந்தனர். எங்களின் அரசியல் பிரவேசத்திற்கு ஏற்ற ஒரு இயக்கமாக “எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை” யைத் தொடங்கி இருக்கிறோம். முதல் தீர்மானம், ஜெயலலிதாவின் அரசியல் வாரிசாக நான் இருக்கவேண்டும் என்று தொண்டர்கள் தொடர்ந்து விடுத்து வந்த கோரிக்கையை நிறைவேற்ற பணிகளைத் தொடரவிருக்கிறேன். தொடர்ந்து போராடி இரட்டை இலையை மீட்போம் என்ற உறுதி மொழியையும் ஏற்றுக்கொள்கிறேன். ஜெயலலிதாவின் கனவை நிஜமாக்கி அவரிடத்தில் இருந்து அவர் விட்டுச் சென்ற பணிகளை நான் தொடருவேன். ஒரு துரோகக் கூட்டத்தையும்,அவர்களின் பிடியில் இருந்து தமிழக மக்களையும் விடுவிக்க வேண்டும் என்ற நல்ல எண்ணத்துடன் எனது பயணத்தை நான் தொடங்கி இருக்கிறேன். என்னை நம்பி வந்த யாரையும் நான் கைவிட மாட்டேன். என்றார்.

பின்னர் மதுரவாயலில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்தில் உள்ளவர்களுடன் சிற்றுண்டி சாப்பிட்டார். உணவருந்திவிட்டு பீடா போட்ட வாயுடன் பேட்டியில் அவர் நமது கப்ஸா நிருபரிடம் கூறியதாவது: அண்ணா, எம்.ஜி.ஆர். போன்ற தலைவர்கள் தங்கள் தலைவர்களின் பெயரில் கட்சி ஆரம்பிப்பது பழைய மாடல். இப்போது எல்லோரும் செல்ஃபி மோகத்தில் இருக்கும் போது, தங்கள் பெயரில் கட்சிகளை ஆரம்பிப்பது தான் புதுமுறை. எனது கட்சி பெயரை கேட்டுவிட்டு தொண்டர்கள் மிகவும் உற்சாகத்தில் இருக்கிறார்கள். பல தொண்டர்கள் கட்சி பெயர் அரைகுறையாக இருக்கிறது. எம்ஜியாருக்கு ஜோடி ஜெயலலிதா பெயர் இடம்பெற்றுள்ளது, அனால் உங்களுக்கு ஜோடி பெயர் இல்லையே என வருத்தப்பட்டனர். எனவே அவர்களது குறையை போக்க கட்சி பெயரை ஆர்- அம்மா மாதவன்- தீபா பேரவை என்று மாற்ற உள்ளேன். எனது அத்தை போட்டியிட்டு வெற்றி பெற்ற ஆர்கே நகரில் நானும் போட்டியிட்டு சட்டமன்றம் செல்வேன், முதல்வராவேன். . கோழை பன்னீர்செல்வம் போட்டியிட்டாலும், இடாவிட்டாலும் நான் போட்டியிடுவது உறுதி என்றார்.

ஜெயலலிதாவுக்கு விதிக்கப்பட்டிருக்கும் 100 கோடி ரூபாய் அபராதத்தை தான் கடன் வாங்கிக் கட்டுவேன் என அவரது சகோதரர் தீபக் கூறியிருந்தார். அதுபோல, நீங்களும் அந்த அபராதத்தை செலுத்த முன்வருவீர்களா என செய்தியாளர்கள் கேட்டபோது, தன்னிடம் அவ்வளவு பணம் இல்லையென்றும், இப்போது தான் அரசியலுக்கு வந்துள்ளதால் இன்னும் ஓரிரு மாதங்களில் பணம் கொட்டப்போகிறதென்றும் , பின்னர் பணத்தை கட்சியில் இருந்து எடுத்து காட்டுவேன் என்றும் தீபா கூறினார். சின்னம்மா அத்தைக்கு தாயாக இருந்தது போல், எம்ஜிஆருக்கு அத்தை தாயாக இருந்ததால் கட்சிக்கு மடப் பேரவை (MAD – MGR AMMA DEEPA ) பேரவை என பெயர் வைத்தேன். மக்களை முட்டாளாக்கி சொத்து சேர்த்த பின் அத்தை கட்ட வேண்டிய 100 கோடி ரூபாயை மணி ஆர்டர் செய்ய இருக்கிறேன்.

நான் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் என்ற ஒரே அடையாளத்துடன், ஆட்சியைக் கைப்பற்ற நினைப்பது குறித்துக் ஜீவா போன்ற நடிகர்கள் கருத்து தெரிவித்திருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன். கார்டனில் வாசல் பெருக்கி கோலம் போட்டவரெல்லாம் அதிமுக பொ. செ. ஆகும்போது அத்தையின் ரத்தத்தின் ரத்தம் நான் முதல்வர் ஆகப்படாதா? திமுக அதிமுக கட்சிப் பெயர்களில் இருப்பது போல் ஆரியம் திராவிடம் என்ற எக்ஸ்ட்ரா பிட்டிங்குகள் எதுவும் தேவை இல்லை. எம்ஜிஆர், ஜெயலலிதா பின்னர் நேரான பைப் லைனில் நான், நடுவே வந்த சின்னம்மாவும் ஓபிஎஸ்சும் எனது தொண்டர்களானால் பிழைத்துக் கொள்வார்கள், என்னை எதிர்க்க வைத்தால், இருவரும் அரசியல் அநாதைகள் ஆகி தமிழ் நாட்டை விட்டே வெளியேற வேண்டி இருக்கும். இரட்டை இலையை மீட்டெடுக்க வெற்றிலையில் மை வைத்து விட்டலாச்சாரிய படத்தில் வருவது போல் விடியோ ஸ்டிரீமிங் செய்து பார்த்து வருகிறேன். விரைவில் மீட்டெடுப்பேன். பேட்டி கொடுப்பேன், என் வீட்டில் கூடிய தொண்டர்கள் “தீபா, உன் கட்சிக்கு பேர வை பேர வை என்று நச்சரித்ததால், கழகம், கட்சி என்ற வழக்கமான பெயரை விடுத்து, தீபா பேரவை என்று என் பெயரையே வைத்துவிட்டேன் என்று கூறி, நான் முதல்வராக வேண்டும் என்று பித்துப்பிடித்தவர் போல் திரும்பத்திரும்ப கூறிக்கொண்டிருந்தார்.

பகிர்

There are no comments yet