சென்னை: ஜல்லிக்கட்டுப் பிரச்சனைக்குப் பிறகு தமிழ்நாட்டில் மீண்டும் ஒரு கொந்தளிப்பு ஏற்படும் சூழ்நிலை உருவாகியிருக்கிறது. ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்தினால் விவசாய நிலங்கள் அழியும், நிலத்தடி நீர்மட்டம் பாழாகும் என்ற அச்சம் புதுக்கோட்டை மாவட்டம், நெடுவாசல் கிராமத்தைச் சார்ந்த மக்களுக்கு ஏற்பட்டிருக்கிறது. மத்திய அரசு அனுமதி அளித்திருக்கும் இயற்கை எரிவாயு திட்டத்திற்கு எதிராக நெடுவாசல் மக்களின் போராட்டத்தில், ஆதரவாக மாணவர்களும் இளைஞர்களும் மற்றும் பல்வேறு அமைப்பைச் சார்ந்தவர்களும் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

இது குறித்து மீண்டும் ஆட்சியைப் பிடிக்கவும் இரட்டை இலை சின்னத்தைக் கைப்பற்றவும் கண் துஞ்சாது அரும்பணி ஆற்றிக் கொண்டிருக்கும் முந்தா-நாள் முதல்வர் ஓபிஎஸ் நமது கப்ஸா நிருபரிடம் பேசினார்: “நெடுவாசல் மக்களின் அச்சத்தைப் போக்க வேண்டும். அவர்களின் வாழ்வாதாரம் காப்பற்றப்பட வேண்டும். விவசாயம் அழிந்து விடாமல் பாதுகாக்கப்பட வேண்டும். நெடுவாசல் பகுதி மக்கள் மட்டுமல்ல தமிழ்நாடே கொதித்தெழுந்து எதிர்க்கத் தொடங்கியிருக்கும் இந்தத் திட்டத்தை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும். தமிழ்நாட்டில் உருவாகியிருக்கும் எதிர்ப்பின் நியாயத்தைக் கருத்தில் கொண்டும், மக்கள் நலனை கருத்தில் கொண்டு இந்தத் திட்டத்தை மத்திய அரசு உடனே ரத்து செய்ய வேண்டும். போராட்டம் தீவிரம் அடைவதற்கு முன் இந்த பிரச்சினை, ஜல்லிக்கட்டு போராட்டத்தை நான் காவல் துறையை ஏவி ஆட்டோ, குடிசை மற்றும் திருவல்லிக்கேணி காவல் நிலையம் ஆகியவற்றை எரித்து முடித்தது போல் தீர்க்கப்பட வேண்டும். அதற்கு எடுபிடி பழனிச்சாமியை அதிமுக அலுவலகம் அருகில் உள்ள ஒரு டீக் கடையில் ரகசியமாக சந்தித்து யோசனை சொல்லிவிட்டு வந்தேன். என்ன இருந்தாலும் நானும் எடுபிடியும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் அல்லவா, தான் ஆடாவிட்டாலும் தன் ஊழல் தசை ஆடும்.

ஜல்லிக்கட்டு பிரச்சினையின் போது நான் வாடிவாசல் சென்று மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பாதியிலேயே ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்தாமல் அமைதியாக் திரும்பி வந்தேன். பின்னர் பின்லேடனை பிரச்சினையில் இழுத்து மாணவர்களுக்கு தீவிரவாதி பட்டம் கட்டி ‘கட்டம்’ கட்டினேன். அடக்கி வைத்திருந்த ஆத்திரத்தை காவல் துறையை ஏவி விட்டு ஜல்லிக்கட்டு மாணவர் போராட்டத்துக்கு எதிராக ஒரு ‘கொள்ளி’க்கட்டு சூறையாடல் நடத்தி என் சுய ரூபத்தை காண்பித்தேன். அதே அகிம்சை வழியில் நெடுவாசல் போராட்டத்தை ஒழித்துக் கட்ட எடுபிடிக்கு தொழில் நுணுக்கங்களை சொல்லிவிட்டு வந்தேன்.” என்று மகிழ்ச்சி பொங்கக் கூறினார்.

பகிர்

There are no comments yet