சென்னை: ‘இது யாரோட இந்தியா’ என்ற தலைப்புடன் ‘வைரமுத்து அணுகுண்டு கவிதை’ என்ற அடைமொழியுடன் கவிஞர் வைரமுத்து எழுதியதாக ஒரு கவிதை சமூக வலை தளங்களில் பரப்பப்பட்டுள்ளது. இதை கண்டு அதிர்ச்சியடைந்த வைரமுத்து, ஏற்கனவே புதியவர்களின் வரவால் வாய்ப்பிழந்து போய் வீட்டில் உட்கார்ந்த கடுப்பில் இருந்தவர் மேலும் கோபத்தில் உள்ளதாக தெரிகிறது.. இது குறித்து கவிப் பேரரசு வைரமுத்து கப்ஸா நிருபரிடம் பேட்டியளித்தார்: மேற்கண்ட தலைப்பில் நான் எழுதியதாக என் பெயரிட்டு ஒரு கவிதை சமூக ஊடகங்களில் உலா வருகிறது. அது எனக்கு கவிதை எழுதித் தரும் பினாமிக்களில் ஒருவரின் பார்வையில் பட்டதால் என் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது. சமீபத்தில் ‘சிங்கமில்லாக் காடு’ என்ற பெயரில் கமல் ஹாசன் எழுதியதாக ஒரு கவிதை உலா வந்தது. கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்தின் சமூகக் கோபம், கண்ணதாசனின் உவமைநயம், வாலியின் சொல்லாட்சி ஆகியவை ஒருசேர உள்ளடங்கிய அந்தக் கவிதையை கமல் “தான் எழுதவில்லை” என் மறுத்தார்.
சென்ற ஆண்டு மத்தியில் வம்புக்கு பெயர் போன தம்பி சிம்பு பாடியதாக “என்னா ………. லவ் பண்ணுறோம், என்னா ………. லவ் பண்ணுறோம், லவ்வ ஏண்டா பண்ணுறோம்?” என்ற கருத்தாழமிக்க படலொன்று பீப் சத்தத்துடன் வந்து அணுகுண்டு போட்டு விட்டு சென்றது. தம்பி சிம்பு காதலிகளுடன் நீச்சல் குளத்திலோ பாத்ரூமிலோ ஜலக்கிரீடை செய்யும் போது படுவதற்காக எழுதி அனிருத் இசை கோர்ப்பு செய்து வைத்து இருந்த பாடலை சில விஷமிகள் வெளியிட்டு விட்டார்கள், அது போல் நாட்டு நடப்புகளை கண்டு என் உள்ளம் வெதும்பி தனிமையில் குமுறி அழ நான் ரகசியமாக என் பயிற்சி குறிப்பேட்டில் எழுதி வைத்திருந்த கவிதையை யாரோ கபளீகரம் செய்து வெளியிட்டு விட்டார்கள். கருவில் வைத்து காத்து இருந்த என் பெண் சிசுவை யாரோ ஒரு கயவன் கருவறுத்து விட்டான்” என்று கவிதை நடையில் புலம்பியது பார்க்க பரிதாபமாக இருந்தது.
வைரமுத்து எழுதியதாக உல்லவரும் கவிதை உங்கள் பார்வைக்கு இதோ:
ஆளும் வர்க்கமே சொரணை இல்லையா?
பாவனாவுக்கு பாவாடை கிழிந்தால், பாராளுமன்றம் வரை எதிரொலிக்கிறது
நந்தினி ஹாசினிகள் கருவறுக்கப்பட்டாலும் அது மூடி மறைக்கப் படுகிறது
அம்பானி அதானி மல்லையா கடன் வாங்கினால் அது தள்ளிபடி செய்யப்படுகிறது
கந்தசாமி முனுசாமி கடன் வாங்கினால் தடியடி நடத்தி வசூலிக்கப்படுகிறது
ஆற்று மணலை கொள்ளை அடித்தால், சுங்கச்சாவடிகள் சுதந்திரமாக திறக்கிறது
அன்றாடங்காய்ச்சிகள் மாட்டு வண்டியில் மணல் எடுத்தால் வண்டிகள் சூறையாடப் படுகிறது
கல்வியை காசுக்கு விற்போருக்கு கல்வித் தந்தை பட்டம் வழங்கப்படுகிறது
சாமானியனுக்கு மட்டும் சட்டம் தன் கடமையை செய்கிறது.
இயற்கையை அழிப்பவன் இறைவனென போற்றப் படுகிறான்
இயற்கையை காக்கத் துடிப்பவன் தேச துரோகியென தூற்றப் படுகிறான்.
இது யாரோட இந்தியா, யாருக்கு வேணும் இந்த இந்தியா?
There are no comments yet
Or use one of these social networks