சென்னை: தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வரும் மார்ச் 1-ம் தேதி தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்நிலையில் தனது தொண்டர்களுக்கு அவர் கூறுகையில், என் பிறந்தநாளுக்கு என்னை பார்க்க வருபவர்கள் சால்வைகளை அணிவிக்காமல், அதற்கு பதிலாக நல்ல புத்தகங்களை பரிசாக வழங்கிடுங்கள். எனது இந்த பிறந்தநாளை தொண்டர்கள் ஆடம்பரமாக கொண்டாட வேண்டாம். ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளையும், ரத்த தானம் மற்றும் மரம் நடுதல் போன்ற நற்செயல்களை செய்யும்படி கேட்டுக்கொள்கிறேன். ஜனநாயக வழியில் தி.மு.க என்றும் தனது போராட்டத்தை தொடரும்’ என்றார்.
மேலும் கப்ஸா நிருபரிடம் கூறுகையில், மாறிவரும் டிஜிட்டல் புரட்சியில் பேஸ்புக் ட்விட்டர் என மொபைலை வைத்தே இளைஞர்கள் அறிவைப் பெருக்கிக் கொண்டு அப் டு டேட் ஆக இருக்கிறார்கள், நீதி கேட்டு நான் சட்டசபையில் சட்டையை கிழித்துக் கொண்டு அங்குமிங்கும் ஓடியதை சமூக வலைதளங்களில் கிழி கிழி என்று கிழித்து விட்டனர். இந்த லட்சணத்தில் சால்வை போர்த்துகிறேன் என்று சதிகாரர்கள் எனக்கு முக்காடு போட்டு இன்னும் ரெண்டு ‘மொத்து’ போட்டுவிடக் கூடாதல்லவா?
தலைவர் கலைஞர் போலவே அவர் எழுதிய ‘நெஞ்சுக்கு நீதி’ புத்தகமும் தமிழகம் முழுவது உள்ள புத்தக கடைகளில் செல்லரித்துப் போய் பயனற்று கிடக்கின்றன, ராயல்டியாக சிங்கிள் டீ கூட இதுவரை புத்தக விற்பனையாளர்களிடம் இருந்து வரவில்லை. எனக்கு புது சட்டை வாங்கவும் திமுக கட்சி நிதியை பெருக்கவும் பெரும் தொகை தேவைப்படுகிறது. எனவே தொண்டர்கள் எனது பிறந்த நாளுக்கு ‘நெஞ்சுக்கு நீதி’ புத்தகத்தை வாங்கி பரிசளிக்குமாறும் கட்சி நிதியை பேடிஎம் ஃப்ரீசார்ஜ் போன்ற செயலிகள் மூலமாக இந்த காலிக்கு வழங்குமாறு கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன் என்றார்.
There are no comments yet
Or use one of these social networks