சென்னை: சின்னம்மாவிடமிருந்து அழைப்பு வரும் வரை எங்கள் போராட்டம் தொடரும் என்று முன்னாள் கல்வி அமைச்சரும் பன்னீர்செல்வம் ஆதரவாளருமான மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதாவின் ஆன்மாவை நம்பியும், பிரதமர் மோடியை நம்பியும் திடீர் தியானம் செய்து, இன்ஸ்டன்ட் புரட்சி முதலவர் என பெயரெடுத்த பன்னீர்செல்வத்தின் கூடாரம் காலியா இருப்பதாக செய்திகளை தெரிவிக்கின்றன. இந்நிலையில், பன்னீர்செல்வம் ஆதரவாளர் மாஃபா பாண்டியராஜன் நமது கப்ஸா நிருபரிடம் கூறியதாவது: அம்மாவின் ஆன்மாவால் உந்தப்பட்டு போராட்டம் நடத்த உள்ளோம், சின்னம்மாவிடமிருந்து அழைப்பு வரும் வரை எங்கள் போராட்டம் தொடரும். திமுக செயல் தலைவர் ஸ்டாலின் வரவேற்பை எதிர்பார்த்து பன்னீர்செல்வம் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்போவதாக சொல்லவில்லை. பாத்திமா பாபு எங்கள் பக்கம் வந்துவிட்டதால், திமுக இனிமேல் எங்களுக்கு எதிரி கட்சி. இன்னும் 10 நாட்களில் சட்டப்பேரவை கூடியாக வேண்டும். அப்போது, இன்னும் பல சட்டை கிழிப்புகள் அங்கு நடைபெறும்.

நம்பிக்கை வாக்கெடுப்பின்போது 6 பேர் மட்டும் மாற்றி வாக்களிப்பார்கள் என்று எதிர் பார்த்தோம், ஆனால் எங்களை ஏமாற்றி விட்டார்கள். அது என்னை உறுத்திக்கொண்டுள்ளது. எனவேதான் சின்னம்மாவின் அழைப்பாரா என்று காத்திருக்கிறேன். நான் மாஃபா, சின்னம்மா மாஃபியா எனவே எங்கள் இருவருக்கும் ஒற்றுமை உள்ளது என்றார்.

மேலும் அவர் கூறுகையில், சின்னம்மா எங்களை அழைக்காவிட்டால் இருக்கவே இருக்கிறது பாஜக . இன்றும் கூட குறைந்தது ஆயிரம்பேராவது எங்களுடன் வந்து இணைந்துள்ளனர். அதுபோன்ற சூழல் தொடரும் என்று கூறிய பாண்டியராஜன், அம்மாவின் ஆத்மா, அடுத்த முறை அண்ணன் ஓபிஎஸ்சை சந்திக்கும் போது சின்னம்மாவிடம் திரும்பி செல்வதா, அல்லது பாஜக வில் இணைவதா என்று கேட்போம் என்று கூறினார்.

There are no comments yet