சென்னை: “திமுக செயல்தலைவரும், தமிழக சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலினுடைய ஜாதகத்தை ஆராய்ந்ததில் அவர் முதலமைச்சராகும் வாய்ப்பு இல்லை” என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார். திருத்தங்கல்லில் நடந்த அதிமுக பொதுக்கூட்டத்தில் பேசிய பால் வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பில் ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என ஸ்டாலின் கூறினார். ஆனால் 45 திமுக எம்எல்ஏக்கள் அதிமுகவிற்கு வாக்களிக்கத் தயாராக வந்திருந்தனர் என்பது ஸ்டாலினுக்கு தெரியாது. ரகசிய வாக்கொடுப்பு நடத்தியிருந்தால் திமுக அத்தோடு காணாமல் போய் இருக்கும். பணம் கொடுத்து அதிமுக எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கி ஆட்சியைப் பிடிக்க ஸ்டாலின் துடிக்கிறார். ஆனால் ஸ்டாலின் கனவு பலிக்காது. திமுக எம்எல்ஏக்கள் 89 பேரில் 50 பேர் அதிமுகவிற்கு வரத்தயாராக உள்ளனர். ஸ்டாலின் ஜாதகத்தில் அவர் முதலமைச்சர் ஆகும் வாய்ப்பு கிடையாது. ஆட்சியில் குறை இருந்தால் சொல்லுங்கள். நாங்கள் திருத்திக் கொள்கிறோம். மேலும் அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்கள் மீண்டும் தாய்க் கழகத்துக்கு திரும்பி வருவார்கள். மக்கள் எந்த சூழ்நிலையிலும் அதிமுகவிற்கு ஆதரவாக இருக்க வேண்டும்” என்றார்.
இதை தனது உதவியாளர் மூலம் அறிந்த செயல் தலைவர் ஸ்டாலின், தனது காரை எடுத்துக் கொண்டு யாருக்கும் தெரியாமல் நாடி ஜோதிட நிலையத்திற்கு சென்றதை நமது கப்ஸா நிருபர் மோப்பம் பிடித்துவிட்டார். அங்கு ஸ்டாலின் ஜோதிடர் சந்திப்பை ஒட்டுக் கேட்ட கப்ஸா நிருபர் கூறியதாவது: “ஸ்டாலின் ஜாதகப்படி, வாழ்வில் ஒரு முறை மட்டுமே சென்னை மேயராகவும் துணை முதல் அமைச்சராகவும் ஆக முடியும் என்றும், அந்த இரண்டு தவணைகளும் முடிந்து விட்டன என்றும் கூறினாராம். மேலும், தந்தையின் ஆயுள் ரேகை மிகவும் கெட்டியாக, வைரம் பாய்ந்த கட்டுமரம் போல இருப்பதால் தலைவர் பதவியை உடும்புப் பிடி பிடித்துக் கொண்டு இன்னும் நூறு ஆண்டுகள் ஹாரி பாட்டர் கிழவன் போல வாழப்போவதால், கட்சி தலைவர் பதவியும் ‘செயல்’ தலைவர் பதவியாகவே நீடிக்குமாம், மூன்றாவது வாய்ப்பாக ஒரே ஒரு முறை முதல்வராகும் வாய்ப்பு கிடைக்க சில பரிகாரங்கள் செய்தால், ‘வேந்தன் ஆல் பாஸ் டுடோரியல்’ அல்லது ‘சீமான் நூற்றுக்கு நூறு டுடோரியல்’ போல் மக்கு மாணவர்களை கட்டி மேய்க்கும் ஏதாவது ஒரு டுடோரியல் காலேஜுக்கே முதல்வராக முடியும் என்று அடித்து சொன்னாராம். இதை கேட்டு கலங்கிய ஸ்டாலின் பின்னாளில் உபயோகப்படும் என்று, மார்ச் 1 அன்று தனது பிறந்த நாள் பரிசாக சால்வை துண்டு வேண்டாம் என்று கூறி தொண்டர்களிடம் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு கோனார் தமிழுரை, மற்றும் கணக்கு நோட்டு புத்தகங்களை வாங்கியதாக தெரிகிறது. கையில் கொப்புளம் வந்து தமிழீன தலைவர் பேசமுடியாமல் தொண்டனுக்கு கடிதம் எழுத வைத்து இருந்த முள்ளுப் பேனாவை லவட்டி, மார்ச் தேர்வுக்காக குறிப்பு எடுத்து வருவதாக தெரிகிறது.
There are no comments yet
Or use one of these social networks