சென்னை: பலத்த எதிர்ப்புக்கு மத்தியில், கடந்த 24-ம் தேதி கோவை வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் இருக்கும் ஈஷா யோகா மையத்தில் அமைக்கப்பட்டுள்ள ஆதியோகி சிலையை இந்திய பிரதமர் நரேந்திர மோடி திறந்துவைத்தார். ஈஷா யோகா மையம், பல விதிமுறைகளை மீறி இந்த சிலையை நிறுவியது என்று பல்வேறு சுற்றுச்சூழல் அமைப்புகள் குற்றம்சாட்டி வருகின்றன. இந்நிலையில் நேற்று தமிழக அரசு, ஆதியோகி சிவன் சிலை, மூன்று மண்டபம் கட்ட ஒரு லட்சம் சதுர அடி அளவை ஈஷா யோகா மையம் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்தது. பழங்குடியினர் பாதுகாப்புச் சங்கத் தலைவர் ஈஷா மையத்துக்கு எதிராகத் தொடர்ந்த வழக்கில் தமிழக அரசு இவ்வாறு வாதிட்டது. இதையடுத்து தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் ஈஷா யோகா மையத்தின் நிறுவனர் ஜக்கி வாசுதேவ், ‘ஈஷா யோகா மையத்துக்கு எதிராக இருக்கும் குற்றச்சாட்டுகளில் ஒன்றை நிரூபித்தால் கூட, நான் அனைத்திலும் இருந்து விலகிக் கொள்கிறேன்’, என்று கூறியுள்ளார். ஜக்கி வாசுதேவ் மேலும், ‘பல குழுக்கள் அவர்களுக்கான ஒரு குறிப்பிட்ட கொள்கைகளுடன் இயங்குகிறார்கள். அவர்கள் சுற்றுச்சூழல் சார்ந்த இயக்கங்களாக காட்டிக் கொள்கிறார்கள். அவர்கள் சுற்றுச்சூழலுக்கு எதிராக செய்து வந்த நடவடிக்கைகளை நான் நிறுத்தினேன். நான் அப்படி அவர்களின் நடவடிக்கைகளை நிறுத்தியபோது, எனக்கெதிராக ஊடகங்கள் செயல்பட்டதை நீங்கள் பார்த்திருக்க வேண்டும். அனைத்துவிதமான குற்றச்சாட்டுகளும் என் மீது சுமத்தப்பட்டன. இந்த குற்றச்சாட்டுகளில், ஒரேயொரு விஷயத்தை நிரூபித்தால் கூட நான் விலகிக் கொள்கிறேன்.’ என்று அந்த நேர்காணலில் பேசியுள்ளார்.

மேலும் கப்சா டிவிக்கு அளித்த பேட்டியில், “ஈஷா யோகா மையம் இருக்கும் இடத்தில், தென்னை மரங்கள் மிகுந்திருக்கின்றன. நிறைய தென்னங் ‘கள்ளு’ கிடைக்கிறது. நான் வருவதற்கு முன்பும் இப்படித்தான் இருந்தது. இவை காட்டு நிலம் அல்ல, விளை நிலங்களே..எனக்கு விலையில்லா நிலங்கள்.. நான் இருக்கும் இடம் யானைகள் வழித்தடம் அல்ல, வாழ்விடம், அவற்றை எப்போதோ மக்கள் குடியிருப்புகளுக்கு விரட்டி விட்டேன். சுற்று சூழல் பாதுகாப்பு நிறுவனம் அப்படி கூறவில்லை, தமிழ்நாடு வனத்தறையும் அப்படி கூறவில்லை, எனது கட்டிடங்களுக்கும் காட்டிற்கும் 50 மீட்டர் இடைவெளி உண்டு, சில நீதிபதிகள் 150 மீட்டர் என்று கூறுகிறார்கள்.. எனக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் சிலர், சந்தன மரங்களை வெட்டுகிறார்கள் அதை நாங்கள் தடுக்கிறோம், வேட்டையாடுவதையும் தடுக்கிறோம்.. சிலர் கஞ்சாச்செடி வளர்க்கிறார்கள் அதை தடுக்கிறோம் அவர்களிடமிருந்த கஞ்சாச்செடியை கைப்பற்றி இங்கு வெளிநாட்டு பக்தர்களுக்கு நல்ல விலைக்கு விற்றுவிடுகிறோம். மலைஜாதி பெண்களை துன்புறுத்துகிறார்கள்..அவர்களை மீட்டு முறைவாசல் செய்ய பயன்படுத்திக் கொள்கிறோம். மீடியாக் காரர்கள் என் மீது ஒரு வன்முறை வெறியாட்டத்தையே நடத்திவிட்டார்கள். இந்த குற்றச்சாட்டுகளில் ஒன்றை நிரூபித்தால் கூட, விஸ்வரூபம் பிரச்சினை பூதாகாரம் எடுத்தபோது கமல் கூறியது போல தமிழ்நாட்டை விட்டு மோடிஜி செல்வாக்கை பயன்படுத்திக் கொண்டு குஜராத் மாநிலம் சென்று காந்திஜியின் சபர்மதி ஆசிரமத்தை கைப்பற்றுவேன். அங்கு வேறு ஒரு ஆதி யோகி சிலையை நிறுவிக் காட்டுவேன் என்று பாதிக்கப்பட்ட யானை போல பிளிறினார்.

இதைக் கேட்டு கோபமடைந்த சுற்றுச் சூழல் ஆர்வலர் ஒருவர், “கஞ்சா பயிரிட்டங்களாம். இவரு போயி தடுத்துட்டாராம். ஆதிவாசி பெண்களிடம் தகாத முறையில் சிலர் நடந்துகொண்டார்களாம். இவரு போயி தடுத்துட்டாராம். சிலர் அந்த ஏரியாவுல வேட்டை ஆடுனாங்களாம். இவரு போயி தடுத்துட்டாராம். ஏன், காவல் துறையில் புகார் செய்யவில்லை.? குற்றம் செய்தவர்களை பற்றி போலீசில் புகார் கொடுக்காததே குற்றம் தானே. குற்றம் தானே. இப்படியே போனால் நுங்கம்பாக்கத்துல சுவாதி என்கிற பொண்ணை கொன்னுட்டாங்கன்னு நுங்கம்பாக்கம் ரயில்வே ஸ்டேஷனை எடுத்துக்குவாரு போல இருக்கே. ஈஷா மையத்துக்கு வரும் அனைவரையும் மூளைச்சலவை செய்து, அவர்களை அடிமைகளாக மாற்றும் வல்லமை பெற்ற ஜக்கி வாசுதேவுக்கு எதிராக இத்தனை குரல்கள் எழுந்திருப்பதே ஒரு வியப்பான விஷயம்.” என்று அங்கலாய்த்தார்.

பகிர்

There are no comments yet