சென்னை: முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் அ.தி.மு.க பொதுச் செயலாளர் சசிகலாவுக்கும் இடையே அதிகாரப்போட்டி காரணமாக அ.தி.மு.க இரண்டாக உடைந்தது. பன்னீர்செல்வம் – சசிகலா என இரண்டு அணிகளாக அ.தி.மு.க பிரிந்ததால், முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி, பி.ஹெச்.பாண்டியன், மனோஜ் பாண்டியன் மற்றும் 12 எம்.பி-க்கள், 11 எம்.எல்.ஏ-க்கள் பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். மேலும், அ.தி.மு.க நிர்வாகிகள் பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்துவருகின்றனர்.

இந்நிலையில், பன்னீர்செல்வம் அணியிலிருந்து முக்கிய நிர்வாகிகள் இரண்டு பேர் விலகியுள்ளனர். நெல்லை மாவட்டம், செங்கோட்டை ஒன்றியச் செயலாளர் செல்லப்பா, கடையநல்லூர் தொகுதி பொதுக்குழு உறுப்பினர் ஹனீஸ் ஆகியோர் இன்று அ.தி.மு.க துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தனர்.

இதனிடையே, ஓபிஎஸ் தலைமையை ஏற்கமுடியாது என்று கூறி, முடிந்தால் ஓபிஎஸ் என்னுடன் வந்து சேரட்டும் என்று அம்மா அப்பா பேரவையின் பொதுச்செயலாளர், பொருளாளர் மற்றும் உறுப்பினரான ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா கூறியிருப்பதால் ஓபிஎஸ் அணியில் குழப்பமா ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. இதையடுத்து அதிமுக பிரியாமல் ஒரே இயக்கமாக செயல்படுவதற்கு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தீபா தலைமையை ஏற்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் க.பாண்டியராஜன் கேட்டுக் கொண்டார்.

சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் இல்லத்தில் முன்னாள் அமைச்சர் க.பாண்டியராஜன் நமது கப்ஸா நிருபரிடம் கூறியதாவது: தற்போதைய நிலையில் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவை வரவேற்கிறோம். ஏற்கெனவே இரு கரங்களாக நாங்கள் (ஓபிஎஸ், தீபா) செயல்படுவோம் என மறைந்த ஜெயலலிதா நினைவிடத்தில் தீபா கூறினார். தற்போது அதை நினைவு கூருகின்றோம். எங்களைப் பொருத்தவரையில் ஒரே இயக்கமாக அதிமுக செயல்பட வேண்டும். தீபா மற்றும் அவருக்கு ஆதரவு தெரிவிப்போர் அனைவரும் அதிமுகவைச் சேர்ந்தவர்கள். இவர்கள் எல்லோரும் தீபாவின் தலைமையை ஏற்றுச் செயல்பட்டால் நன்றாக இருக்கும் என்றார்.

இந்நிலையில் ஓபிஎஸ் அணியை சேர்ந்த 11 எம்எல்எக்களில் 7 பேர் ஏற்கனவே டிடிவி தினகரனை ரகசியமாக சந்தித்து ‘துண்டு’ போட்டு வந்துள்ளதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நடுநிலை காவலர் நடராஜ், மாஃபா பாண்டியராஜன் மூலமாக பாஜகவிற்கு தூது அனுப்பி வருவதாகவும்,, ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் மோடி தலைமையில் பாஜகவில் சேருவது குறித்து சீரியஸாக ஆலேசனை செய்வதாகவும் கிரீன்வேஸ் ரோட்டில் அலைந்த ஆந்தை தெரிவிக்கிறது.

There are no comments yet